மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 21 செப் 2020

ஹீரோவை அல்ல, தயாரிப்பாளரை திருப்திபடுத்துங்கள்: சுந்தர் சி

ஹீரோவை அல்ல, தயாரிப்பாளரை திருப்திபடுத்துங்கள்: சுந்தர் சி

பெரிய ஹீரோ படங்களை இயக்கும்போது ஹீரோக்களை திருப்திப்படுத்துவதில் காட்டும் அக்கறையை தயாரிப்பாளரின் தயாரிப்பு செலவில் காட்டுவதில்லை என்று இளம் இயக்குநர்கள் மீது தனது ஆதங்கத்தை கூறியுள்ளார் இயக்குநர் சுந்தர்.சி..

தமிழ் சினிமாவில் ‘மினிமம் கியாரண்டி’ இயக்குநர் என்றவுடன் சந்தேகமே இல்லாமல் நம் மனதில் தோன்றும் ஒரு பெயர் என்றால் அது சுந்தர்.சி தான். தயாரிப்பாளர்களுக்கு எப்போதுமே கணிசமான லாபத்தை ஈட்டக்கூடிய படங்களுக்கு சொந்தக்காரர் இவர். காமெடி கலந்த குடும்ப செண்டிமென்ட் படங்களுக்கு பெயர் பெற்ற சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் ஆக்‌ஷன். 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தைத் தொடர்ந்து சுந்தர்.சி விஷால், தமன்னா நடிப்பில் இயக்கியுள்ள படமிது.

இப்படத்திற்காக சுந்தர்.சி அளித்த பேட்டியொன்றில், “பெரிய ஹீரோக்களைக் கொண்டு திரைப்படங்களை உருவாக்கும் புதிய இயக்குநர்கள் ஹீரோக்களை மகிழ்விக்கவும், அதிக அளவு செலவழிக்கவும், தயாரிப்பாளர்களுக்கு இழப்பை ஏற்படுத்தவும் முயற்சிக்கிறார்கள். இப்போதெல்லாம் சினிமா குழப்பத்தில் உள்ளது. ஏனெனில் ஹீரோக்கள் தங்கள் இயக்குநர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். அதற்கு நன்றியுணர்வைக் காண்பிக்க இயக்குநர்கள் காட்சிகளில் தேவையே இல்லாமல் ஹீரோ பின்னாடி 2, 000 எக்ஸ்ட்ரா ஆர்டிஸ்டுகளை நிற்க வைத்து பிரம்மாண்டத்தை காட்டுகிறார்கள்.

அந்த இயக்குநர்களும் நாள் முழுவதும் ஒரு ஷாட்டை மட்டும் பதிவு செய்வதன் மூலம் நேரத்தையும் பணத்தையும் வீணடிக்கிறார்கள். இதனால் தயாரிப்பாளர்கள் தான் நஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். தயாரிப்பாளர்களின் செலவில் இயக்குநர்கள் ஹீரோவின் புகழைப் பாட, பாடல்களிலும் காட்சிகளிலும் பார்வையாளர்களை ஈர்க்க கதையே இல்லாமல் எடுத்து வருகிறார்கள். சில இயக்குநர்கள் பெரிய ஹீரோ படங்களை இயக்கும்போது ஹீரோக்களை திருப்திப்படுத்துவதில் காட்டும் அக்கறையை தயாரிப்பாளரின் தயாரிப்பு செலவில் காட்டுவதில்லை” என விமர்சித்தார் சுந்தர்.சி.

எந்த இயக்குநர் பெயரும் திரைப்படத்தின் பெயரும் குறிப்பிடாமல் சுந்தர்.சி கூறிய இக்கருத்து நெட்டிசன்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

‘ஆக்‌ஷன்’ திரைப்படம் நவம்பர் 15ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

வெள்ளி, 8 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon