மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 22 அக் 2020

ரஜினி, கமல் ரகசிய ஒப்பந்தம்!

ரஜினி, கமல் ரகசிய ஒப்பந்தம்!

சென்னையில் உள்ள ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் இயக்குநர் கே.பாலசந்தரின் சிலையை கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் இணைந்து திறந்து வைத்தார்கள்.

கமல்ஹாசனின் 60ஆண்டு திரையுலகப் பயணத்தை கொண்டாடும் விதமாக, நேற்று(நவ.7) கமலின் பிறந்தநாளை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள தெளிச்சாத்தநல்லூர் கிராமத்தில் கமல்ஹாசனின் 65ஆவது பிறந்த நாள் விழா, அவரது தந்தையும், வழக்கறிஞருமான டி.சீனிவாசன் உருவச் சிலை திறப்பு விழா மற்றும் ‘மய்யம் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம்’ தொடக்க விழா ஆகியவை நேற்று நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, இன்று(நவம்பர் 8) சென்னையில் உள்ள ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் கமல்ஹாசனின் குருவும் தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரான இயக்குநர் கே.பாலசந்தரின் சிலை திறப்பு விழா ஏற்பாடாகியிருந்தது. கே.பாலசந்தரின் ஆஸ்தான சீடர்களாக திரையுலகில் வலம் வரும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இணைந்து பாலசந்தரின் சிலையை திறந்துவைத்தனர்.

ரஜினிக்கும் கமலுக்குமான ரகசிய ஒப்பந்தம்

கே. பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் பேசிய கமல்ஹாசன், “ரஜினியின் பாணி வேறு, என்னுடைய பாணி வேறு. ரஜினி இதுவரை எத்தனை வெற்றிப் படம் கொடுத்தாரோ அதில் எனக்கும் பங்கு உண்டு. சினிமா துறையில் எத்தனை கோபம் வந்தாலும் யார் எதை சொன்னாலும் நாங்கள் பிரியவில்லை. மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என ரஜினியும் நானும் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டோம். எங்களையே நாங்கள் பாராட்டிக்கொள்வோம், ஒருவரை ஒருவர் விமர்சித்துக்கொள்வோம். எங்களின் வாழ்க்கை மிகவும் எதார்த்தமானது. படங்களின் வெற்றி தோல்வி குறித்து பேசிக்கொள்வோம். சண்டைபோடும் எங்களது ரசிகர்கள் நாங்கள் என்ன பேசிக்கொள்கிறோம் என தெரிந்தால் வியப்பார்கள்” என்று பேசியுள்ளார்.

மேலும் ராஜ்கமலின் 50வது படம் விரைவில் அறிவிக்கப்படும். இந்தப் படம் பிரமாண்டமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்

இந்நிகழ்ச்சியில் பாலசந்தர் குடும்பத்தினர், மணிரத்னம், நாசர், சுஹாசினி, ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன், வைரமுத்து, கு.ஞானசம்பந்தம், ஐசரி கே.கணேஷ், பூஜா குமார் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, இன்று மாலை 3.30 மணிக்கு சத்யம் சினிமாஸில் கமல்ஹாசன் இயக்கி, நடித்து 2000ஆம் ஆண்டு வெளியான ‘ஹேராம்’ திரைப்படம் திரையிடப்படவுள்ளது. இத்திரையிடலுக்குப் பின், ஹேராம் படம் குறித்த உரையாடல்கள் நடைபெறவுள்ளது. இதில் கமல் கலந்து கொண்டு பார்வையாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்கவுள்ளார்.

கமல்ஹாசனின் திரையுலக பயணத்தில் அதிகம் விவாதிக்கப்பட்ட படமாக கருதப்படும் ஹேராம் படத்தின் மறுதிரையிடல் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி, 8 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon