மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 22 அக் 2020

திருப்பதியைப் போல மதுரையிலும் லட்டு!

திருப்பதியைப் போல  மதுரையிலும் லட்டு!

திருப்பதி என்றாலே நம் அனைவரது நினைவுக்கு வருவது லட்டுதான். திருப்பதியைப் போலவே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் பிரசாதமாக லட்டு வழங்கத் திட்டமிடப்பட்டு, இன்று முதல் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

உலகப் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலங்களில் ஒன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயில். இங்குத் தினசரி பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்குத் திருப்பதியை போலவே லட்டு வழங்கக் கோயில் நிர்வாகம் திட்டமிட்டது. தீபாவளி அன்று லட்டு வழங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது.

இதற்கிடையே லட்டு தயாரிக்கும் இயந்திரம் வெளி மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்டு தெற்கு ஆடிவீதி, யானை மகால் அருகே உள்ள இடத்தில் நிறுவப்பட்டது. ரூ. 4 லட்சம் மதிப்பிலான இந்த இயந்திரத்தில் ஒரு மணி நேரத்தில் 3000 லட்டுகள் வரை பிடிக்கலாம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதவிர லட்டு தயாரிக்கும் பணியில் 15 ஊழியர்கள் ஈடுபடவுள்ளனர். சுவாமி சன்னதி முன்பாக லட்டு வழங்கும் பணியில் 2 பேர் ஈடுபடுவர். ஒவ்வொரு பக்தருக்கும் 30 கிராம் லட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக லட்டு தயாரிக்கும் பணி தீவிரமான நடைபெற்று வந்த நிலையில், இத்திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10 மணியளவில் தலைமைச் செயலகத்தில் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் செல்லூர் ராஜூ, எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வெள்ளி, 8 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon