அதிமுகவில் வழிகாட்டுதல் குழு அமைப்பது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளும் 2017 ஆகஸ்ட் 21ஆம் தேதி இணைந்த பிறகு, கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் நியமிக்கப்பட்டனர். பொதுச் செயலாளர் பதவி ஜெயலலிதாவுக்கு அர்ப்பணிக்கப்படுவதாகவும், அதிமுகவுக்கு 11 பேர் கொண்ட வழிகாட்டும் குழு அமைக்கப்படும் எனவும் அறிவித்தனர். ஆனால், இரண்டு வருடங்களாகியும் இதுவரை வழிகாட்டும் குழு அமைக்கப்படவில்லை. இந்த நிலையில் வரும் 24ஆம் தேதி சென்னை வானகரத்திலுள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த நிலையில் வீரமாமுனிவரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் இன்று (நவம்பர் 8) மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை அதிமுகவில் சேர்ப்பதில்லை என்ற முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதிமுகவில் வழிகாட்டுதல் குழு அமைப்பது குறித்த பரிசீலனை நடந்துவருகிறது” என்று தெரிவித்தார்.