மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 29 மே 2020

கிச்சன் கீர்த்தனா: பேபி கார்ன் பெப்பர்

கிச்சன் கீர்த்தனா: பேபி கார்ன் பெப்பர்

அனைவராலும் தவிர்க்க முடியாத ஒன்று, நொறுக்குத் தீனி. வயது வித்தியாசம் இன்றி, எல்லோருமே ஏதேனும் ஒரு விதத்தில் சாப்பிட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். சாப்பாட்டை ஒரு நாளைக்கு மூன்று முறை சாப்பிடுகிறோம் என்றால், இந்த ஸ்நாக்ஸ் வகைகளை இரண்டு முறையாவது சாப்பிடுகிறோம். காலை 9 மணிக்கு உணவு சாப்பிட்டால் மதியம் உட்கொள்ள 2 மணி ஆகிவிடுகிறது. அந்த இடைப்பட்ட நேரத்தில் அதாவது 11 மணி அளவில் டீ, சமோசா, வடை என எதையாவது சாப்பிடுகிறோம். இரவு சாப்பிட 9 மணி ஆகிவிடுகிறது. இதனால் மாலை 5 மணிக்கு டீ, பிஸ்கட், பஜ்ஜி, வடை சாப்பிடுகிறோம். ஓர் உணவு வேளைக்கும் இன்னொரு வேளைக்கும் இடைப்பட்ட நேரத்தில் உடலுக்கு ஆற்றலைக் கொடுக்க ஏதேனும் தீனி தேவை. இதையே 'எனர்ஜி ரீஃபில்லிங்’ என்போம். அதற்கு மற்ற ஸ்நாக்ஸ்களைவிட இந்த பேபி கார்ன் பெப்பர் நிச்சயம் உதவும்.

என்ன தேவை?

பேபி கார்ன் - 6 (வட்டமாக மெல்லியதாக நறுக்கவும்)

பெரிய வெங்காயம் - ஒன்று

பூண்டு - 8 பல்

பச்சை மிளகாய் - ஒன்று

வெங்காயத்தாள் - 4

ஆலிவ் ஆயில் - சிறிதளவு

மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயத்தாள் ஆகியவற்றை மிகவும் பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிதளவு ஆலிவ் ஆயில் விட்டு, நறுக்கிய பூண்டு, வெங்காயம், நறுக்கிய பேபி கார்ன், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். வெந்தவுடன் வெங்காயத்தாள், மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

நேற்றைய ரெசிப்பி: நட்ஸ் பால்ஸ்

வெள்ளி, 8 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon