மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 3 ஜுன் 2020

சிறப்புக் கட்டுரை: ஆசியாவின் பொருளாதார மறுமலர்ச்சி – ஒரு வரலாற்றுப் பார்வை

சிறப்புக் கட்டுரை: ஆசியாவின் பொருளாதார மறுமலர்ச்சி – ஒரு வரலாற்றுப் பார்வை

நா. ரகுநாத்

1960களின் தொடக்கத்தில் ஆசிய நாடுகளின் பொருளாதார நிலை என்ன என்பதைக் கண்டறிந்து, 1968ஆம் ஆண்டு “Asian Drama: An Inquiry Into the Poverty of Nations” எனும் புத்தகத்தில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த குன்னர் மிர்டல் என்ற பொருளியல் மேதை தன்னுடைய ஆய்வின் முடிவுகளைப் பதிவு செய்தார். ஆசியாவின் பல நாடுகள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்ததைப் பதிவு செய்த மிர்டல், அந்த நாடுகளின் சமூக அமைப்பு, அரசியல் சூழல், உற்பத்தித் தொழில்நுட்பம், கலாச்சாரப் பண்புகள் எனப் பல முக்கியமான காரணிகள் பொருளாதார மேம்பாட்டுக்கு ஏதுவாக இல்லை என்னும் வாதத்தை முன்வைத்தார். எனினும், ‘ஆசியாவில் நிகழும் இந்த நாடகத்தின் முடிவு வரலாற்றில் முன்பே தீர்மானிக்கப்பட்டது அல்ல; மானுடத்தின் சக்தியால் இந்த நாடகத்தின் முடிவை மகிழ்ச்சியான ஒன்றாக மாற்ற முடியும்’ எனும் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளும் அந்தப் புத்தகத்தில் இருந்தன.

1960களில் உலகின் மிகவும் ஏழை கண்டமாக இருந்த ஆசியா, அடுத்த ஐம்பதாண்டுகளில் கண்டிருக்கும் மாற்றங்கள் மகத்தானவை. அவற்றைப் பற்றி விரிவான, புள்ளி விவரங்கள் நிறைந்த கதையாடல் ஒன்றை, இந்தியாவின் மூத்த பொருளியல் அறிஞரான தீபக் நய்யர், சமீபத்தில் வெளிவந்துள்ள “Resurgent Asia: Diversity in Development” எனும் புத்தகத்தில் நமக்கு வழங்கியுள்ளார். கடந்த ஐம்பதாண்டுகளில் தென்அமெரிக்க, ஆப்பிரிக்க கண்டங்களை விடப் பன்மடங்கு வேகத்தில் ஆசிய கண்டம் வளர்ந்துள்ளது; அந்த வளர்ச்சியைப் பல சமூக - பொருளாதார குறியீடுகளில் நாம் காணலாம். ஆனால், ஆசியாவில் உள்ள 47 நாடுகள் பொருளாதார மேம்பாட்டின் வெவ்வேறு நிலையில் உள்ளன என்னும் நிதர்சனத்தையும் நாம் கணக்கில்கொள்ள வேண்டும்; ஆசியாவின் ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்கு அதன் வெவ்வேறு பகுதிகளின் பங்கு வேறுபடுவதையும் நாம் கவனிக்க வேண்டும்.

ஆசியாவின் வீழ்ச்சியும் மறுமலர்ச்சியும்

1820இல் உலகின் மொத்த மக்கள்தொகையில் ஆசியாவின் பங்கு 65 விழுக்காடு; இந்தியா மற்றும் சீனாவின் பங்கு மட்டுமே 56 விழுக்காடாக இருந்தது. அதே ஆண்டில், உலகின் மொத்த உற்பத்தி மதிப்பில் (World GDP) ஆசியாவின் பங்கு 56.5 விழுக்காடு; இந்தியா மற்றும் சீனாவின் பங்கு மட்டுமே கிட்டத்தட்ட 50 விழுக்காடாக இருந்தது. 1950இல் உலகின் மொத்த மக்கள்தொகையில் ஆசியாவின் பங்கு 52 விழுக்காடாகக் குறைந்தது; அந்த ஆண்டில் உலகின் மொத்த உற்பத்தி மதிப்பில் அதன் பங்கு 15 விழுக்காடு மட்டுமே. இந்தியா மற்றும் சீனம் உலகின் மொத்த உற்பத்தி மதிப்புக்கு வெறும் 8 விழுக்காடு மட்டுமே பங்களித்தன.

130 ஆண்டுகளில் ஆசியா இத்தகைய பெரும் வீழ்ச்சியைக் கண்டதற்குக் காரணம் என்ன? ஏகாதிபத்திய சக்திகள் ஆசிய நாடுகள் பலவற்றையும் தங்களுடைய காலனிகளாக்கி, அந்த நாடுகளின் வளங்களைச் சுரண்டியதன் விளைவாகவே ஆசியப் பொருளாதாரம் வரலாறு காணாத சரிவைக் கண்டது. 1960களின் இறுதியில்கூட, குன்னர் மிர்டல் எழுதியதைப் போல மிகவும் ஏழைக் கண்டமாகத்தான் ஆசியா இருந்தது. மிகவும் அதிகமான பிறப்பு மற்றும் பெண்கள் கருவுறுதல் விகிதம் இருந்தது ஆசியாவில்தான். மேம்பாட்டுக்குத் தேவையான அனைத்துக் காரணிகளும் பின்தங்கியிருந்த நிலையில் ஆசியாவின் எதிர்காலத்தைப் பற்றிய கவலைகள் பரவலாக இருந்தன.

ஆனால், கடந்த ஐம்பதாண்டுக் கால வளர்ச்சியின் விளைவாக, 2016இல் உலகின் மொத்த உற்பத்தி மதிப்பில் ஆசியாவின் பங்கு 30 விழுக்காடாக உயர்ந்துள்ளது. 1970இல் ஆசியாவில் வாழும் மக்களின் தனிநபர் வருமானம், உலக தனிநபர் வருமானத்தைவிட (World GDP per capita) ஆறு மடங்கு சிறியதாக இருந்தது; 2016இல் இந்த இடைவெளி பெருமளவுக்குக் குறைந்து, உலகின் தனிநபர் வருமானத்தை எட்டிப் பிடிக்கும் பயணத்தில் ஆசியா ஈடுபட்டிருந்தது.

இந்த தனிநபர் வருமானம் என்பது ஒரு சராசரியே, இது பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை வெளிப்படுத்தாத ஒரு அளவீடு என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும். எனினும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஆசியா கண்டுள்ள முன்னேற்றம் குறிப்பிடத்தக்கது என்றே தெரிகிறது. உலகப் பொருள் உற்பத்தியில் (world manufacturing output) 40 விழுக்காடும், பன்னாட்டு வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கும் கொண்டுள்ள ஆசியாவில், 1970-2016 காலத்தில் தனிநபர் வருமானம் உலகின் மற்ற பகுதிகளைவிட மிகவும் வேகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது என்பதை அட்டவணை 1 தெரிவிக்கிறது.

ஆசிய நாடுகளுக்கிடையே சமமற்ற பொருளாதார மேம்பாடு

ஆசியாவின் வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு வேகத்தில் வளர்ந்திருப்பினும், அந்த நாடுகளின் வளர்ச்சிப்போக்கு சில பொதுவான அம்சங்களை வெளிப்படுத்துகின்றன. ஒவ்வொரு ஆசிய நாட்டின் உற்பத்தி மதிப்பின் வளர்ச்சியும், தனிநபர் வருமானத்தின் வளர்ச்சியும் உலகின் மற்ற அனைத்துப் பகுதிகளின் வளர்ச்சி வேகத்தை மிஞ்சியதாகவே இருந்தது. பொருளாதார வளர்ச்சியாலும், அரசின் கணிசமான இடையீடுகளாலும் மேம்பாட்டுக் குறியீடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டது.

நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் சேமிப்பு, முதலீடுகளின் பங்கு தொடர்ந்து உயர்ந்ததன் விளைவாக அந்த நாடுகளில் அபரிமிதமான தொழிற்துறை வளர்ச்சி ஏற்பட்டது. அடிப்படை நிலச்சீர்திருத்தம், அனைவருக்கும் தரமான, இலவசமான கல்வி மற்றும் சுகாதார வசதிகள் போன்ற நடவடிக்கைகள் வேகமான பொருளாதார வளர்ச்சியைச் சாத்தியமாக்கின; வளர்ச்சியின் பலன்களைப் பரவலாக்கின.

மேற்கூறிய நேர்மறை மாற்றங்கள் அனைத்தும், எல்லா ஆசிய நாடுகளிலும் சமமான அளவில் ஏற்படவில்லை. நாடுகளுக்கு இடையே, ஒவ்வொரு நாட்டு மக்களிடையே கவலையளிக்கும் அளவுக்கு சமூக - பொருளாதார இடைவெளிகள் உள்ளன என்பதையும் தீபக் நய்யர் இந்த புத்தகத்தில் தெளிவுபடுத்துகிறார். இதை இரண்டு எடுத்துக்காட்டுகள் கொண்டு நாம் புரிந்துகொள்ள முயல்வோம். முதலாவதாக, வேகமான பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளபோதும், வறுமையின் மீது அதன் தாக்கம் ஆசிய நாடுகளுக்கிடையே பெரிதும் வேறுபடுகிறது. இதனை அட்டவணை 2 தெளிவுபடுத்துகிறது.

இரண்டாவதாக, இந்த மாற்றங்களில் பலவும் இந்தியாவில் முழுமையடையாத நிலையில் இருக்கின்றன; உலகிலேயே பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிவிரைவாக அதிகரிக்கும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. ஜனநாயக ஆட்சிமுறையை இந்தியா தேர்ந்தெடுத்து இருந்தாலும், பொருளியல் தளத்தில் அதை முழுமையாக, ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்துவதில் நாம் வெற்றிகரமாக இருந்துள்ளோமா என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்க வேண்டியுள்ளது.

கற்க வேண்டிய வரலாற்றுப் பாடங்கள்

இதற்கு முற்றிலும் மாறாக, தங்களுடைய பொருளாதார முன்னேற்றத்துக்கான பயணத்தைத் தொடங்கியபோது, சர்வாதிகார ஆட்சி முறையைத் தழுவிய பல கிழக்காசிய, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 1970-2016 காலத்தில் குறிப்பிடத்தக்க சமூக - பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தென்கொரியா, சிங்கப்பூர், மக்கள் சீனம் போன்ற நாடுகள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன.

கிழக்காசியா, தென்கிழக்கு ஆசியா, மேற்காசியா மற்றும் தெற்காசியா என ஆசியாவை நான்கு பகுதிகளாகப் பிரித்து, ஆசியாவின் ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்கு ஒவ்வொரு பகுதியும் எவ்வளவு பங்களித்துள்ளது என்பதை ஆராய்ந்து பார்த்துள்ளார் நய்யர். மொத்த உற்பத்தி மதிப்பு, தனிநபர் வருமானம், பொருள் உற்பத்தி, பன்னாட்டு வர்த்தகம், வறுமைக் குறைப்பு எனப் பல்வேறு குறியீடுகளில் ஆசியாவில் ஏற்பட்டுள்ள நேர்மறை மாற்றங்களுக்கு சீனாவைக் கொண்ட கிழக்காசியப் பகுதியே கிட்டத்தட்ட நான்கில் மூன்று பங்கு பங்களிப்பை வழங்கியுள்ளது; இந்தியாவைக் கொண்ட தெற்காசியப் பகுதியின் பங்கு குறிப்பிடும்படியானதாக இல்லை என்பதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஜனநாயகத்துக்கு எதிராகவும், சர்வாதிகாரத்துக்கு ஆதரவாகவும் வைக்கப்படும் வாதமாக எடுத்துக்கொள்வது தவறான அணுகுமுறையாகவே இருக்கும். காரணம், நாம் குறிக்கோள்களை அடைவது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு முக்கியம் அவற்றை நாம் அடையப் பயன்படுத்தும் கருவிகள். மக்களை அடக்கியாளும் உக்தியைப் பயன்படுத்தி பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்திய நாடுகள் அதற்குக் கொடுத்த விலை என்ன என்னும் கேள்வியை நாம் கேட்க வேண்டும்; ஜனநாயக முறையில் ஆட்சி நடத்திய நாடுகள், ஜனநாயகம் எனும் சிறந்த கருவியைச் சரியாகப் பயன்படுத்த முடியாமல் போனதற்கான காரணங்களைக் கண்டறிந்து தகுந்த வரலாற்றுப் பாடங்களை நாம் கற்பது அவசியம்.

வியாழன், 7 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon