மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

ரஜினி வந்தால்... வராவிட்டால்! அமித் ஷா போடும் இருவேறு கணக்குகள்!

ரஜினி வந்தால்... வராவிட்டால்!  அமித் ஷா போடும் இருவேறு கணக்குகள்!

“எனக்கு காவி சாயம் பூச முயற்சிக்கிறார்கள். காவிச் சாயத்தில் வள்ளுவரும் மாட்ட மாட்டார். நானும் மாட்ட மாட்டேன்”

-சென்னையில் இருந்து ரஜினி இன்று (நவம்பர் 8) கொடுத்த பேட்டியொன்று பாஜகவின் டெல்லி தலைமை வரை உலுக்கியிருக்கிறது.

ரஜினி தேர்தல் அரசியலுக்கு வரப் போவதாக 2017 லிலேயே வெளிப்படையாக சொல்லிவிட்டார். அதற்கு முன்னும் பின்னும் ரஜினியை தங்கள் கட்சிக்கு வருமாறு அரசியல் கட்சிகள் எதுவும் அழைக்காத நிலையில் பாஜக மட்டுமே ரஜினியை தங்கள் கட்சிக்கு வருமாறு தொடர்ந்து அழைத்து வந்திருக்கிறது. அதுவும் ஆன்மீக அரசியல் என்ற ரஜினியின் முழக்கத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, ‘இதுதான் எங்களுக்கும் ரஜினிக்கும் இருக்கும் ஒற்றுமை. ஆன்மீக அரசியல் செய்யும் கட்சி பாஜகதான். எனவே ரஜினிக்கு ஏற்ற இடம் பாஜகதான்” என்று பாஜக புள்ளிகள் பேசினார்கள்.

வெளிப்படையான பேட்டிகள் மட்டுமல்ல, மோடியே பிரதமர் ஆவதற்கு முன் ரஜினியின் வீடு தேடி வந்தார். பிரதமர் ஆனபின்னரும் ரஜினியை பாஜகவில் இணைக்க பல முயற்சிகள் நடந்தன. ரஜினிக்கு நெருக்கமானவர்கள் மூலம் அவருக்கு பல வித அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.

ரஜினியின் நண்பரான ஆடிட்டர் குருமூர்த்தி அவரை பலமுறை சந்தித்திருக்கிறார். அமித் ஷாவின் செய்திகளை ரஜினியிடம் சொல்லியிருக்கிறார். பணிவோடு உபசரித்து பல மணி நேரம் அவரோடு பேசியிருக்கிறார் ரஜினி. ஆனாலும், ‘பாக்கலாம்... போயிட்டு வாங்க’ என்றுதான் சொல்லி வழியனுப்பி வைத்திருக்கிறார். குருமூர்த்தியைப் போல எத்தனையோ மூர்த்திகளை ரஜினியிடம் பாஜக அனுப்பி வைத்தும் ஒரு பயனும் இல்லை.

இதற்கிடையே தமிழருவி மணியன், செ.கு. தமிழரசன், ரவீந்திரன் துரைசாமி என்று இன்னொரு பக்கம் தொடர்ந்து பலரையும் சந்தித்துப் பேசி வந்திருக்கிறார் ரஜினி. தமிழ்நாட்டு அரசியல் பற்றி தான் அவதானித்ததை அவர்களிடம் சொல்லி, அவர்களின் கருத்துகளை, ஆலோசனைகளை எல்லாம் கேட்டுக்கொண்டாலும் முடிவெடுக்கும் விஷயத்தை தான் மட்டுமே வைத்திருக்கிறார் ரஜினி.

அமித் ஷா இந்தியாவின் உள்துறை அமைச்சர். இந்தியாவில் எந்த மாநிலத்தில் என்ன நடக்க வேண்டும் என்று அவர் நினைத்தாலும் நடக்கிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் அமித் ஷாவின் கணக்குகள் எல்லாம் உடைந்துகொண்டே இருக்கின்றன.

தன்னைப் பார்க்க டெல்லிக்கு வரும் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் புள்ளிகளிடமெல்லாம் அமித் ஷா பேசும்போது கேட்பது, “இந்த ரஜினி என்னதான் செய்வதாக இருக்கிறார்? அவரது பாதையை மட்டும் யூகிக்கவே முடியவில்லையே?” என்பதுதான்.

தமிழகத்தில் இருந்து டெல்லி செல்லும் பாஜக பிரமுகர்களும் இதை உறுதிப்படுத்துகிறார்கள். ” “ஒவ்வொருமுறை நாங்கள் டெல்லி செல்லும்போதும், எங்களிடம் தேசியத் தலைமை தமிழக விவகாரங்கள் பற்றிப் பேசும்போது மறக்காமல் ரஜினி விவகாரம் பற்றியும் பேசுகிறார்கள். ரஜினி சில நேரம் எங்களுக்கு ஆதரவாகப் பேசுவதுபோல இருக்கிறது. பத்து பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி என்று மோடியைப் பாராட்டிப் பேசினார். இன்னொரு நாள் மோடிக்கு தமிழகத்தில் எதிர்ப்பலை இருக்கிறது என்று கூறினார். அவரைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை” என்கிறார்கள்.

இப்படி ரஜினிக்கு பாஜக பின்னிய வலைகளில் எல்லாம், சிக்காமல் எஸ்கேப் ஆகி வந்த ரஜினி இன்றைய பேட்டியின் மூலம் அந்த வலையை அறுத்தே விட்டிருக்கிறார்.

“பாஜகவில் இணைய வேண்டும் என்று எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. எனக்கு பாஜக சாயத்தை பூச முயற்சி செய்துவருகிறார்கள். திருவள்ளுவர் போல எனக்கும் காவி சாயம் பூச முயற்சிக்கிறார்கள். திருவள்ளுவரும் மாட்ட மாட்டார். நானும் மாட்டமாட்டேன்” என்று சொன்னதன் மூலம் தனது ஆன்மீக அரசியலை தமிழகத்தில் பயன்படுத்தப் பார்த்த பாஜகவுக்கு ஒரு செக் வைத்திருக்கிறார் ரஜினி.

ரஜினியின் இந்த நகர்வை பாஜக எப்படி எதிர்கொள்ளப் போகிறது? பாஜக தலைமையின் நகர்வுகளை அறிந்த பாஜக பிரமுகர்களிடம் பேசினோம்.

“அமித் ஷா வடகிழக்கு மாநிலங்களில் பாஜக என்றால் என்னவென்று தெரியாத பகுதிகளிலேயே பாஜகவை கொண்டு போய் சேர்த்தவர். அவருக்கு ரஜினி கழுவும் மீனில் நழுவும் மீன் என்பது நன்றாகவே தெரிந்திருக்கிறது. ரஜினி ஒரு வலது சாரி சிந்தனையாளர், தேசியவாதி, சினிமா என்ற மாஸ் மீடியா மூலம் உச்சப் புகழ் நட்சத்திரம் என்பதால்தான் அவரை பாஜகவுக்காக பயன்படுத்தி தமிழகத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர அமித் ஷா முயற்சிக்கிறார், இப்போது ரஜினி சொல்லியிருப்பது என்பது ஒரு கருத்து அவ்வளவே... இதுவே நிரந்தரக் கொள்கை கிடையாது. இன்று பாஜக குறித்த ரஜினி அளித்த பேட்டிக்கு நாளை அவரே ஒரு விளக்கம் கொடுத்துவிட்டால் என்ன சொல்லுவீர்கள்?

ரஜினிக்கு நாங்கள் காவிச் சாயம் பூச முயற்சித்து அவர் அதில் சிக்காமல் இருக்கலாம். அரசியலில் நமக்குக் கிடைக்கும் ஆயுதங்களை வைத்துதான் போராட வேண்டும். போர் நடந்துகொண்டிருக்கும்போது புதிய ஆயுதம் நம் கைகளுக்கு வந்து சேரட்டும் என்று காத்திருக்க முடியாது. அதுபோல அமித் ஷாவும் ரஜினி விஷயத்தில் பல்வேறு யோசனைகளை வைத்திருக்கிறார்.

ரஜினி ஒரு வேளை பாஜகவில் சேரவில்லை, தனிக்கட்சிதான் ஆரம்பிக்கிறார் என்றாலும் பாஜகவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. வருகிற சட்டமன்றத் தேர்தலில் ரஜினியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் ஒரு கூட்டணியை உருவாக்குவோம். அதில் அதிமுகவையும் இணைப்போம். எப்படியும் அடுத்து திமுக வந்துவிடக் கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம். அதற்கான ஆயுதமாக ரஜினியைப் பயன்படுத்துவோம்.

அதிமுக, தேமுதிக, பாமக என அனைத்துக் கட்சிகளையும் ரஜினியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளச் செய்து திமுகவுக்கு எதிரான பொது முதல்வர் வேட்பாளராக ரஜினியை முன்னிறுத்துவோம். அப்போது ரஜினி ஏற்றுக் கொள்வார். ஏனென்றால் அவர் அரசியலுக்கு வருவதே தமிழக முதல்வராகி மக்களுக்கு நன்மைகள் செய்ய வேண்டும் என்பதற்குத்தான். அதனால் திமுகவை ஒருபக்கம் வைத்து மறுபக்கம் பொது முதல்வர் வேட்பாளராக ரஜினியை முன்னிறுத்தும் திட்டம் உள்ளது.

அமித் ஷா கனவு காண்பவர் அல்ல. கள நிலவரம் அறிந்தவர். தமிழகத்தில் அடுத்த சட்டமன்றத்தில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் இரட்டை இலக்கத்தில் இருக்க வேண்டும் என்பதுதான் அவரது திட்டமே தவிர, அடுத்து பாஜக ஆட்சி என்பதல்ல. எனவே ரஜினி பாஜகவில் இணைந்தாலும் இணையாவிட்டாலும் ரஜினியை வைத்து நாங்கள் ஆடும் கேம் தொடரும்” என்கிறார்கள் பாஜக புள்ளிகள்.

வெள்ளி, 8 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon