மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

கீ கொடுத்த கே.என்.நேரு: காங்கிரஸ் ரியாக்‌ஷன்!

கீ கொடுத்த கே.என்.நேரு: காங்கிரஸ் ரியாக்‌ஷன்!

ஸ்டாலின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விமர்சனங்களுக்கு கூட்டணிக் கட்சிகள் பதில் சொல்வோம் என திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

திராவிடர் கழகம் சார்பில் ‘அமெரிக்காவில் பெரியார்’ என்னும் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி கடந்த 5ஆம் தேதி மாலை திருச்சியில் நடைபெற்றது. அதில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, “திமுக தலைவர் ஸ்டாலின் பெயரைச் சொல்லி நிறைய உளறுகிறார் என்று விமர்சிக்கிறார்கள். இதனை திமுகவின் தோழமைக் கட்சிகள் கேட்டுக்கொண்டு இருப்பதுதான் எங்களுக்கு பெரிய வருத்தமே. எங்களை அடித்தால் உங்களையும் அடிப்பதாகத்தானே அர்த்தம். நீங்கள் அதனை கண்டிக்க வேண்டுமல்லவா” என்று வருத்தத்துடன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த செய்திகள் வெளியான நிலையில், அன்று மாலையே முரசொலி விவகாரம் தொடர்பான சர்ச்சை குறித்து அறிக்கை வெளியிட்டார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.

“முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி இடம் என்று ராமதாஸ் ஆதாரமற்ற அவதூறு குற்றச்சாட்டை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கூறியிருந்தார். திமுகவை களங்கப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் சொல்லப்படுகிற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று (நவம்பர் 8) ஊடகத்திடம் பேட்டியளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான திருநாவுக்கரசரிடம், கே.என்.நேருவின் அதிருப்தி தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, “கே.என்.நேரு அவருடைய ஆதங்கத்தை, மனக்குறையை சொல்லியிருக்கிறார். அவர் சொல்வது நியாயம்தான். அதற்கு அவருக்கு உரிமையும் இருக்கிறது. கூட்டணிக் கட்சிகளும் பதில் சொல்வதில் தவறு இல்லை. எனினும் திமுக பெரிய கட்சி, பலமான கட்சியும் கூட. அதில் நிறைய தலைவர்கள் இருக்கின்றனர். சொந்தமாக பத்திரிகையும் ஊடகங்களும் இருக்கின்றன. அதனால் அவர்கள் உடனே பதில் சொல்லிவிடுகிறார்கள்” என்று பதிலளித்த திருநாவுக்கரசர்,

“திமுகவைத் தவிர மற்ற தோழமைக் கட்சிகளும் தேவையான நேரத்தில் கண்டிப்பாக பேசுவோம். கூட்டணிக் கட்சியின் தலைவர் என்கிற முறையில் ஸ்டாலினின் புகழ் களங்கத்திற்கு உள்ளாகும்போது, அவர் மீது தவறான பழிச்சொற்கள் ஏவப்படும்போது கண்டிப்பாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊடகத்தில் பேசுவோம்” என்றும் விளக்கம் அளித்தார்.

வெள்ளி, 8 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon