மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

முரசொலி அலுவலகத்திற்கு சீல் வைக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

முரசொலி அலுவலகத்திற்கு சீல் வைக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

ஆவணங்களை அளிக்காவிட்டால் முரசொலி அலுவலகத்திற்கு சீல் வைக்க வேண்டுமென பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

முரசொலி நாளேட்டின் அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்ட அதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதில் சொல்ல இதனை முன்வைத்து திமுக-பாமக இடையே மோதல் நீடித்துவருகிறது. இதனிடையே, பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதா என்பதன் உண்மை நிலை குறித்து வரும் 19ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென தமிழக தலைமைச் செயலாளருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டது.

இதற்கு பதிலளித்த திமுக தலைவர் ஸ்டாலின், உரிய நேரத்தில் ஆணையத்தில் ஆவணத்தை வழங்கி உண்மையை நிரூபிப்போம் என்று அறிக்கை வெளியிட்டார்.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் இன்று (நவம்பர் 8) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “முரசொலி அலுவலகம் தொடர்பான ஆவணங்களை திமுக உரிய நேரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும். இல்லையென்றால் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடத்தை கையகப்படுத்தி சீல் வைக்க வேண்டும்” என்று தெரிவித்தார். முரசொலி இடம் பஞ்சமி நிலமா, இல்லையா என தமிழக அரசு பதில் சொல்லியே ஆக வேண்டுமெனவும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

திருவள்ளுவர் சர்ச்சை குறித்து பேசிய அவர், “திருவள்ளுவர் பிறந்தநாள் வைகாசி, அனுஷ நட்சத்திரம். அந்த காலத்தில் அப்படித்தான் கொண்டாடியிருக்கிறார்கள். ஆனால், கலைஞர் ஆட்சியில் திருவள்ளுவர் பிறந்தநாளின் தேதியை மாற்றிவிட்டார்கள். கன்னியாகுமரியில் சிலை அமைக்கப்படுவதற்கு முன்பாக உலகத்தில் ஏதாவது ஒரு இடத்தில் நின்ற கோலத்தில் திருவள்ளுவர் சிலையை பார்த்திருக்கிறீர்களா? அவரை நிற்க வைத்து திமுகவின் கணக்குப் பிள்ளை போல எழுதவைத்திருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய கொடுமை” என்று திமுகவை கடுமையாக விமர்சித்தார்.

வெள்ளி, 8 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon