மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

பொதுச் செயலாளர் அதிகாரம் தலைவருக்கு: திமுக பொதுக்குழுவில் முடிவு!

பொதுச் செயலாளர் அதிகாரம் தலைவருக்கு: திமுக பொதுக்குழுவில் முடிவு!

திமுக பொதுக்குழு வரும் நவம்பர் 10 ஆம் தேதி கூட இருக்கிற நிலையில் அதில் என்னென்ன முடிவுகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன என்பது குறித்து அக்கட்சியின் நிர்வாகிகளிடையே தீவிரமாக விவாதம் நடைபெற்று வருகிறது.

உட்கட்சித் தேர்தல், அண்மையில் நடந்து முடிந்த இடைத்தேர்தல் தோல்வி ஆகியவை குறித்து மட்டுமல்லாமல், திமுகவின் மிக முக்கியமான பதவியான பொதுச் செயலாளர் பதவியின் அதிகார வரையறை குறித்தும் பொதுக்குழுவில் முக்கிய முடிவெடுக்கப்பட இருப்பதாகக் கூறுகிறார்கள் சீனியர்கள்.

திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து அப்பதவியில் இருந்து வருகிறார். கலைஞர் காலமான பிறகு மனதளவில் உடைந்துபோன பேராசிரியருக்கு முதுமை காரணமாக உடல்நிலையிலும் பின்னடைவு ஏற்பட்டது. தற்போது சில மாதங்களாகவே கட்சிப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் வீட்டில் ஓய்வில்தான் இருக்கிறார் பேராசிரியர்.

இந்த நிலையில் கட்சியில் மேற்கொள்ளப்படும் முக்கிய நடவடிக்கைகள், பதவிகளில் நியமனம் செய்தல், பதவியை விட்டு நீக்குதல் போன்ற செயல்பாடுகள் எல்லாம் பொதுச் செயலாளரின் உத்தரவின் பேரில்தான் திமுகவில் நடைபெறுகின்றன. இப்போது பொதுச் செயலாளர் முழு ஓய்வில் இருந்தாலும் அவர் பெயரில்தான் அறிவிப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. இது மற்ற கட்சியினரின் விமர்சனத்துக்கும் உள்ளாகியிருக்கிறது. இது சரியாக இருக்காது என்பதால் பொதுச் செயலாளராக அன்பழகனே நீடிக்கட்டும் என்றும் பொதுச்செயலாளர் பதவிக்குரிய சில அதிகாரங்களை தலைவர் பதவிக்கு மாற்றுவது என்றும் திமுக தலைமைக் கழகத்தில் ஆலோசனை நடைபெற்று வந்தது.

திமுகவின் சட்ட திருத்த தீர்மானக்குழுவினர் ஏற்கனவே கூடி இதுபற்றி ஆராய்ந்தனர்.

‘பொதுச் செயலாளர் விலகினாலோ அல்லது நீண்ட நாட்களாகக் கழகப் பணி ஆற்ற முடியாத நிலை ஏற்பட்டாலோ, புதிய பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுகிற வரையில் பொதுச் செயலாளருக்கென சட்ட திட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கழகத் தலைவரே மேற்கொள்வார்’ என்று திமுகவின் சட்டப் புத்தகத்தில் 40 ஆம் பக்கத்தில் விதி 18, பிரிவு 3 இல் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஸ்டாலினிடம் சுட்டிக் காட்டியுள்ளனர். இதுபற்றி கடந்த சில நாட்களாக ஸ்டாலினும் கட்சியின் சீனியர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசியிருக்கிறார். இதுபற்றி கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியான டிஜிட்டல் திண்ணை பகுதியில் பொதுச் செயலாளர் அதிகாரங்கள் இனி தலைவருக்கு... மாற்றத்துக்குத் தயாராகும் திமுக! என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் வரும் பொதுக்குழுவில் பொதுச் செயலாளரின் முக்கிய அதிகாரங்கள் திமுக சட்ட விதிகளின்படி தலைவருக்கு மாற்றப்படுவது உறுதியாகிவிட்டது. அதன்படி இனி தலைமையின் அறிவிப்புகள், கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளுக்கான அறிவிப்புகள், நியமன, நீக்கம் ஆகியவை தலைவர் மூலமாகவே அறிவிக்கப்படும் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.

வெள்ளி, 8 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon