மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 29 மே 2020

பொதுக்குழுவிற்காக சிகிச்சையை தள்ளிப் போட்ட துரைமுருகன்

பொதுக்குழுவிற்காக சிகிச்சையை தள்ளிப் போட்ட துரைமுருகன்

திமுக பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் சென்னை கோட்டூர்புரத்திலுள்ள தனது வீட்டுக்கு அருகே உள்ள பூங்காவில் நவம்பர் 6 ஆம் தேதி காலை வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல் சோர்வு ஏற்பட உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

துரைமுருகன் ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்டவர். தான் இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்டு கண் விழித்தபோது, ‘துரை’ என்று கலைஞர் கூப்பிட்டார் என்பதை உருக்கமாக பல மேடைகளில் பதிவு செய்துள்ளார். இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டு வீட்டில் ஓய்வில் இருந்தபோது கலைஞர் தினமும் வந்து பார்த்துச் செல்வார் என்றும் சொல்லியிருக்கிறார் துரைமுருகன்.

இந்த நிலையில் அப்பல்லோ சென்ற துரைமுருகனுக்கு ‘64 ஸ்லைஸ் சிடி ஸ்கேன்’ என்ற சோதனையை நடத்தியிருக்கிறார்கள் மருத்துவர்கள். அதாவது இதயத்தின் செயல்பாடுகளை பல்வேறு கோணங்களில் துல்லியமாக ஸ்கேன் செய்து பார்ப்பதுதான் இந்த சோதனை. இந்த சோதனைக்குப் பிறகு, ‘இதயத்தில் சிறு அடைப்பு இருக்கிறது. ஆஞ்சியோ பண்ண வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்கள் மருத்துவர்கள்.

உடனே துரைமுருகன், ‘வர்ற பத்தாம் தேதி பொதுக்குழு இருக்கே. ஆஞ்சியோ பண்ணா பொதுக்குழுவுக்கு போக முடியுமா?’ என்று கேட்டிருக்கிறார். ‘இல்லை... நீங்கள் சில நாட்கள் முழு ஓய்வு எடுத்தாக வேண்டும்’ என்று மருத்துவர்கள் சொல்ல, ‘அப்படியென்றால் பொதுக்குழு முடித்துவிட்டு வந்துவிடுகிறேன். ஆஞ்சியோவை பிறகு செய்துகொள்ளலாமா?’ என்று கேட்டிருக்கிறார் துரைமுருகன்.

சீனியர் திமுக தலைவரான துரைமுருகனுக்கு பொதுக்குழுவில் கலந்துகொள்வதே இதயத்துக்கு இதமானது என்பதை உணர்ந்த மருத்துவர்கள், ‘நீங்கள் பொதுக்குழுவை முடித்துவிட்டு வாருங்கள்’ என்று கூறியிருக்கிறார்கள். இதையடுத்து இன்று (நவம்பர் 8) காலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய துரைமுருகன் பொதுக்குழுவுக்குத் தயாராகிறார்.

வெள்ளி, 8 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon