மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்?

பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்?

பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழு பேரும் 28 வருடங்களுக்கு மேலாகச் சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்வது குறித்து ஆளுநரே முடிவு செய்து கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, இதுதொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்தது. ஆனால், ஒரு வருடமாகியும் இதுவரை ஆளுநர் முடிவெடுக்கவில்லை.

இந்த நிலையில் பேரறிவாளனுக்கு ஒரு மாதம் தமிழக அரசு பரோல் அளித்திருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவரது தந்தை குயில்தாசனின் உடல்நலத்தைக் கருத்தில்கொண்டு அவரை கவனித்துக்கொள்வதற்காக பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளதாகவும், வரும் திங்கட்கிழமை (நவம்பர் 11) அவர் சிறையிலிருந்து வெளிவருவார் என்றும் சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பேரறிவாளனுக்கு முதன்முறையாக கடந்த 2017ஆம் ஆண்டு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. அப்போது, ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கக் கூடாது. வெளியூருக்குச் செல்லக் கூடாது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. அதைத் தொடர்ந்து முதல்வருக்கு அற்புதம்மாள் வைத்த கோரிக்கையையடுத்து, மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக பரோலில் வர இருக்கிறார் பேரறிவாளன். தற்போதும் அதுபோன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு தற்போது நிலுவையில் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 8 நவ 2019

chevronLeft iconமுந்தையது