சித்திரவதை செய்கின்றனர்: சின்மயானந்தா வழக்கில் மாணவியின் குடும்பம்!

public

சிறப்பு விசாரணைக் குழு சித்திரவதை செய்கிறது என்று பாஜகவைச் சேர்ந்த சின்மயானந்தாவால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியின் குடும்பம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஷாஜகான்பூர் பகுதியில், முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக எம்பியுமான சின்மயானந்தாவுக்கு சொந்தமான முமுக்‌சூ ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தால் நடத்தப்படும் எஸ்.எஸ். சட்டக் கல்லூரி மாணவி ஒருவர், சின்மயானந்தாவுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துக் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதையடுத்து பல கட்ட சட்ட போராட்டத்தைத் தொடர்ந்து சின்மயானந்தா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை அந்த மாணவி தனது கண்ணாடியில் கேமராவை வைத்து வீடியோ எடுத்து, சின்மயானந்தாவுக்கு எதிராக புகார் அளித்திருந்தார். ஆனால் இந்த வீடியோவை வைத்துச் சம்பந்தப்பட்ட மாணவியும், அவரது நண்பர்கள் சச்சின், விக்ரம் அகிய இருவரும் பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்பட்டது.

இதையடுத்து பணம் பறித்தல் புகாரின் அடிப்படையில் அந்த மாணவியும். அவரது நண்பர்களும் கைது செய்யப்பட்டனர். பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் பணம் பறித்தல் வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு நேற்று (நவம்பர் 6) 20 பக்க குற்றப்பத்திரிக்கையை ஷாஜகான்பூர் மூத்த மாஜிஸ்திரேட் ஓம்வீர் சிங் முன்பு தாக்கல் செய்தது.

இதற்கிடையே சம்பந்தப்பட்ட மாணவியின் தாய் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கும், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிக்கும் கடிதம் எழுதியுள்ளார். நவம்பர் 2ஆம் தேதி எழுதிய அந்த கடிதத்தில், விசாரணையின் பேரில் சிறப்பு விசாரணைக் குழு தங்களை அழைத்துச் சென்று சித்திரவதை செய்வதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

விசாரணைக் குழுவில் உள்ள ஷர்மிளா ஷர்மா தனது தலையை இழுத்து அங்கிருந்த டேபிளில் அடித்தார். 20 முதல் 30 முறை கன்னத்தில் அறைந்தார். மிரட்டி பணம் கேட்டோம் என ஒப்புக்கொள்ளும்படி அதிகாரிகள் வற்புறுத்தினர்.

தன்னையும், தனது கணவர், மகனையும் 10 வயது மகளையும் ஜெயிலுக்கு அனுப்பி விடுவோம் என்று சிறப்பு விசாரணைக் குழுவின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் நவீன் அரோரா மிரட்டினார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட எனது மற்றொரு மகளை பெயிலில் வெளியே வர முடியாத அளவுக்கு செய்துவிடுவோம் எனவும் மிரட்டியதாக அவரது தாய் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த குடும்பத்தினரை, ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கக் கூடாது என்று மிரட்டியதாகவும் தெரிகிறது.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நவீன் அரோரா, இந்த வழக்கில் அவர்கள் குற்றவாளிகள் இல்லை என்பதால், அவர்களை துன்புறுத்தும் வகையில் எந்த கேள்விகளும் கேட்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்,

அகில இந்திய ஜனநாயக பெண்கள் சங்கம் மற்றும் பிற பெண்கள் அமைப்புகள் இந்த விவகாரம் குறித்து அம்மாநில ஆளுநருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறது. அதில் உள்ளூர் காவல்துறையினருக்குப் பயந்து இந்த குடும்பத்தினர் ஷாஜகான்பூரில் தங்கத் தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளன.

பாதிக்கப்பட்ட அந்த சட்டக் கல்லூரி மாணவியின் சகோதரரும் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில் தங்கள் குடும்பம் சிறப்பு விசாரணைக் குழுவால் தாக்கப்பட்டதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து விசாரிக்கச் சிறப்பு குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *