wஇரு வருடங்களுக்குப் பின் அதிமுக பொதுக்குழு!

public

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுகவின் பொதுக்குழு வரும் நவம்பர் 24 ஆம் தேதி கூடுகிறது.

ஜெயலலிதா மரணமடைந்ததாக அப்பலோ மருத்துவமனை 2016 டிசம்பர் 5 ஆம் தேதி அறிவித்த பிறகு அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் இருந்த நிலையில், அடுத்த பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று அதிமுகவில் பல அமைச்சர்கள் குரல் கொடுத்தனர்.

இதையடுத்து டிசம்பர் 29 ஆம் தேதியே அதிமுகவின் பொதுக்குழு சென்னையில் கூடி அதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து டிசம்பர் 31 ஆம் தேதி அதிமுக அலுவலகத்துக்கு வந்த சசிகலா, அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்த உதயகுமார், ‘கட்சிக்குத் தலைமையேற்ற சின்னம்மா ஆட்சிக்கும் தலைமையேற்க வேண்டும்’ என்று திடீர் கோரிக்கை வைக்க, அதை பல அமைச்சர்களே ஆதரித்தனர். துணை சபாநாயகராக இருந்த தம்பிதுரை தனது லெட்டர் பேடிலேயே இந்த கோரிக்கையை எழுதி சசிகலாவிடம் கொடுத்தார். இந்தப் பின்னணியில் 2017 பிப்ரவரி 5 ஆம் தேதி அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனால் பிப்ரவரி 7 ஆம் தேதி முதல்வர் பன்னீர் செல்வம் தனது பதவியை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாக சொல்லி ஜெ. சமாதியில் தியானத்தைத் தொடங்கினார். இது அதிமுகவுக்குள் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து பல்வேறு திருப்பங்களை சந்தித்தது அதிமுக. ஓ.பன்னீர் தலைமையில் தனி அணி உருவானது. அதிமுக துணைப் பொதுச் செயலாளராக தினகரனை அறிவித்துவிட்டு சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றார் சசிகலா. அதன் பின் சில மாதங்களில் அதிமுகவில் இருந்து தினகரன் நீக்கப்பட்டார்.

பின் பாஜக முயற்சியில் 2017 ஆகஸ்டு மாதம் ஓ.பன்னீர் அணியும், எடப்பாடி அணியும் இணைந்தன. அதன் பின் செப்டம்பர் 12 ஆம் தேதி இரு அணிகள் இணைந்த பொதுக்குழு கூடி, அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி இனி கிடையாது என்று தீர்மானம் நிறைவேற்றியது. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் அறிவிக்கப்பட்டனர். இந்தப் பொதுக்குழுவை எதிர்த்து சசிகலா தரப்பு தொடந்த வழக்கு இன்னும் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

இந்த நிலையில் முழுதாக இரு வருடங்களுக்குப் பின் மீண்டும் வரும் நவம்பர் 24 ஆம் தேதி வானகரத்தில் பொதுக்குழு கூடும் என்று அதிமுக சார்பில் இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது பற்றி பொதுக்குழுவில் கலந்துபேசி முடிவெடுப்போம் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அண்மையில் பேட்டியளித்த நிலையில், அதிமுக பொதுக்குழுவில் சசிகலா விவகாரம் விவாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *