மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 8 ஜூலை 2020

பாலில் தங்கமா?: நிதி நிறுவனத்துக்கு ஷாக் கொடுத்த விவசாயி!

பாலில் தங்கமா?: நிதி நிறுவனத்துக்கு ஷாக் கொடுத்த விவசாயி!

பசும் பாலில் தங்கம் இருப்பதாக மேற்கு வங்க பாஜக தலைவர் கூறியதை அடுத்து , அம்மாநில விவசாயி ஒருவர் பசுவுடன் வந்து நகைக் கடன் கேட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் புர்ட்வானில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அம்மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ், ”இந்தியப் பசுக்களின் பாலில் சிறிது மஞ்சள் நிறம் இருப்பதற்கு காரணம் அதில் தங்கம் இருப்பதே ஆகும். பசுக்களின் ரத்த நாளமானது சூரிய ஒளியின் உதவியோடு தங்கத்தை உற்பத்தி செய்கிறது. இந்த பாலில் ஏராளமான எதிர்ப்புச் சக்தி உள்ளது. ஒரு மனிதன் பாலை மட்டும் உட்கொண்டு உயிர் வாழ முடியும். வேறு எந்த உணவும் தேவைப்படாது” என்று தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்கு எதிர்க்கட்சிகள் உட்படப் பலரும் விமர்சித்து வந்தனர்.

இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலம், தன்குனி பகுதியில் உள்ள மணப்புரம் நிதி நிறுவனத்துக்கு வந்த ஒரு விவசாயி தன்னுடைய இரு மாடுகளை வைத்துக் கொண்டு தங்கக் கடன் கேட்டுள்ளார். இது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த விவசாயி ஊடகங்களிடம் கூறும் போது, ”மாட்டுப்பாலில் தங்கம் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். என்னிடம் 20 மாடுகள் உள்ளன. அதில் இரண்டை பிடித்து வந்துள்ளேன். மாடுகளை நம்பியே எனது குடும்பத்தின் வாழ்வாதாரம் உள்ளது. எனவே இந்த பசுக்களை வைத்துக் கொண்டு தங்கக் கடன் கொடுத்தால் எனது தொழிலை முன்னேற்ற உதவியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கரகச்சா கிராம பஞ்சாயத்துத் தலைவர் மனோஜ் சிங் கூறுகையில், ”திலீப் கோஷ் தெரிவித்த கருத்துக்கு அவருக்கு நோபல் பரிசு தான் கொடுக்க வேண்டும்” என்று கிண்டலடித்துள்ளார். ”அவருடைய கருத்தால் பலர் தினமும் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு வந்து தங்கள் பசுக்கள் தினமும் 15-16 லிட்டர் பால் கறப்பதால் தங்களுக்கு எவ்வளவு தங்கக் கடன் கிடைக்கும் என்று கேட்கின்றனர். இதையெல்லாம் கேட்டால் எனக்கு அவமானமாக உள்ளது” எனவும் வேதனை தெரிவித்துள்ளார்

”ஒரு அரசியல் தலைவர் உணவு, உடை, மக்களின் முன்னேற்றம் குறித்து பேசலாம். ஆனால் பாஜகவினர் மதம் மற்றும் இந்துத்துவா பற்றி மட்டுமே பேசி வருகின்றனர். என்ன நடக்கிறது என்று மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் முடிவை எடுப்பார்கள்” என்றும் கூறியுள்ளார் மனோஜ் சிங்.

வியாழன், 7 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon