மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 8 ஜூலை 2020

மீண்டும் வரும் ‘அலாவுதீனும் அற்புதவிளக்கும்’?

மீண்டும் வரும் ‘அலாவுதீனும் அற்புதவிளக்கும்’?

வைபவ், பார்வதி நாயர் நடிப்பில் உருவாகும் புதிய படத்துக்கு ‘ஆலம்பனா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

1979ஆம் ஆண்டு ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடிப்பில் உருவான படம் ‘அலாவுதீனும் அற்புதவிளக்கும்’. மாயங்கள் நிறைந்த அரபுக் கதையின் தழுவலான இதில், மாவிளக்கைத் தேய்த்தவுடன் ஜீனி பூதம் வெளிப்பட்டு ‘ஆலம்பனா நான் உங்கள் அடிமை’ எனக் கூறும். சிறுவர் முதல் பெரியவர் வரை ரசிக்கும் இந்த வசனத்தையே தலைப்பாக வைத்து உருவாகவுள்ளது புதிய தமிழ்ப் படமொன்று. வைபவ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்துக்கு ‘ஆலம்பனா’ எனத் தலைப்பிடப்பட்டிருக்கிறது. இந்தப் படமும் பழைய படத்தைப் போல, மாய தந்திரங்களும் ஃபேன்டஸி நிறைந்த கதையாகவும் உருவாகவுள்ளது.

சமீபத்தில் வெளியான டிஸ்னியின் ‘அலாவுதீன்’ மறு உருவாக்கத்துக்குக் கிடைத்த வரவேற்புக்குப் பின், ஆலம்பனா படம் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ளது. வைபவ் நடிப்பில் உருவான படங்களில் அதிக பொருட்செலவில் உருவாகும் படம் இதுவாகும்.

நாயகியாக பார்வதி நாயர் நடிக்கவுள்ளார். மற்ற பாத்திரங்களில் முனீஷ்காந்த், திண்டுக்கல் ஐ.லியோனி, காளி வெங்கட், ஆனந்த்ராஜ், முரளிசர்மா, கபீர் சிங் உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அலாவுதீன் படத்தின் நவீன வடிவமாக ஆலம்பனா இருக்குமென இதன் போஸ்டரைப் பார்க்கும்போது உணர முடிகிறது. இந்தப் படத்தில் முனீஷ்காந்த் ‘ஜீனி’ பூதமாகத் தோன்றுவார் எனக் கூறப்படுகிறது.

படத்துக்கு இசை ஹிப் ஹாப் ஆதி, ஒளிப்பதிவாளராக வினோத் ரத்தினசாமி, எடிட்டராக ஷான் லோகேஷ், சண்டை இயக்குநராக பீட்டர் ஹெய்ன் பணியாற்றவுள்ளனர். சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தைத் தயாரித்து வரும் கே.ஜே.ஆர்.ஸ்டூடியோஸ் நிறுவனமும், சந்துருவும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

செவ்வாய், 5 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon