Qஎடப்பாடியிடம் அதிரடி மாற்றம்!

public

காவல் துறை பதக்கங்கள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு 100 பேருக்கு பதக்கங்களை வழங்கியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், தமிழக முதல்வரின் பதக்கங்கள் மற்றும் அத்திவரதர் சிறப்புப் பணி பதக்கங்கள் வழங்கும் விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று (அக்டோபர் 23) மாலை நடைபெற்றது. விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பதக்கங்கள் வழங்கும் விழா நேரம் 4.30-6.30 வரை என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் டிஜிபி, காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் என அனைவரும் மாலை 3 மணிக்கே நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் ஆஜராகிவிட்டனர். மாலை 3.45 மணியளவில் சாதாரண உடையில் வந்த ஒருவர், மேடைக்கு அருகே சென்று நின்றார். அவரை பார்த்ததும் எஸ்.பி முதல் உயரதிகாரிகள் வரை ஓடிச் சென்று சல்யூட் அடித்து வரவேற்றனர். அவ்வளவு முக்கியமானவர் யார் என்று அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, அவர்தான் உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி என்றனர்.

அதே சமயத்தில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மேடைக்கு வந்து பார்வையிட்டபோது, ஐஜி, ஏடிஜிபி லெவலில் உள்ள அதிகாரிகள் அவரது அருகில் சென்று அட்டனன்ஸ் போட்டுவிட்டுச் சென்றனர். மேடையில் நின்றபடி யாருக்கோ போன் செய்து பேசினார் கிருஷ்ணமூர்த்தி. சுமார் 4 மணிக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மேடைக்கு வந்தார். பார்வையாளர்கள் கூட்டத்தைப் பார்த்தவர், யாருக்கோ போன்செய்து பேசிவிட்டு நிதானமாக ஒரு இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து அமைச்சர்கள் வரத்துவங்கினர். ஆனால், யாருமே அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமராமல் நின்றுகொண்டிருந்தனர்.

முதல்வர் வருவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக அவரை வரவேற்பதற்காக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் வரிசையாகக் காத்திருந்தனர். சரியாக 4.30 மணிக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் வர, அவரை பின் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் வந்தார். அப்போது, அனைத்து அமைச்சர்களும் தலைகுனிந்து கும்பிட்டு முதல்வரை வரவேற்றனர்.

மேடையேறிய பிறகு முதல் பதக்கத்தை ஐஜி ஈஸ்வரமூர்த்திக்கு அளித்த முதல்வர், அடுத்தடுத்து உயரதிகாரிகள், டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் என அனைவருக்கும் பதக்கங்களை வழங்கினார்.

அதே சமயத்தில் மேடைக்கு எதிரே முன் வரிசையில் டிஜிபி சைலேந்திர பாபு மீசையைத் தடவியபடி லேசான புன்னகையுடன் அமைதியாக அமர்ந்திருந்தார். அவரை மற்ற அதிகாரிகள் திரும்பிப் திரும்பிப் பார்த்தபடியாக இருந்தனர். முதல்வர் கையால் காவலர்கள் உள்ளிட்ட 85க்கும் மேற்பட்டவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டபோதிலும், அதுவரை சைலேந்திர பாபுவை பதக்கம் வாங்க அழைக்கவில்லை.

பதக்கம் 90களைத் தொடும்போது சைலேந்திர பாபு பதக்கத்தைப் பெறுவதற்காக மேடைக்கு அழைக்கப்பட்டார். அப்போது, அரங்கமே அதிர்ந்துபோகும் அளவுக்கு கைதட்டல் எழுந்தது. அதனைப் பார்த்து லேசாக சிரித்த முதல்வர், சைலேந்திர பாபுவை அருகில் அழைத்து கைகொடுத்துப் பாராட்டி பதக்கத்தை வழங்கினார். சுமார் 100 பேருக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர்.

இதுகுறித்து கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த காவல் அதிகாரிகள், “சீனியாரிட்டியின் படி ஒரு டிஜிபியை முதலில் அழைத்து பதக்கம் கொடுக்காமல், காவலர்களுக்கு பதக்கம் வழங்கும்போது வழங்கியது அவரை அவமானம் செய்வதுபோல் உள்ளது. அதிகாரிகளின் இதுபோன்ற தவறான ஆலோசனையால், காவல் துறையினர் மத்தியில் முதல்வருக்கு அவமதிப்பு ஏற்படுகிறது” என்று வெளிப்படையாகவே முணுமுணுத்தனர்.

இதனைத் தொடர்ந்து அத்திவரதர் கோயில் பாதுகாப்பின்போது சிறப்பாக பணியாற்றிய 600க்கும் மேற்பட்டவர்களுக்கு டிஜிபி, ஏடிஜிபி, ஐஜி போன்றவர்கள் விருது கொடுத்து விழாவை முடித்துவைத்தார்கள்.

விழா தொடர்பாக அதிகாரிகள் வட்டாரத்தில் பேசியபோது, “ எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்ற பின் கடந்த 32 மாதங்களில் கலந்துகொண்ட விழாக்களைவிட நேற்று கலந்துகொண்ட காவல் துறையினருக்கு பதக்கங்கள் வழங்கும் விழா பெரிய மாற்றத்துடன் காணப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணப்பட்டார். இனிவரும் காலங்களில் ஜெயலலிதா பாணியில் கட்சியிலும், அமைச்சரவையிலும் அதிரடி மாற்றம் இருக்கும்” என்று அவர்கள் கூறுகின்றனர்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *