uவிக்கிரவாண்டி, நாங்குநேரி: யாருக்கு வெற்றி?

public

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாக உள்ளது.

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்குப் பதிவு கடந்த 21ஆம் தேதி நடைபெற்றது. விக்கிரவாண்டி தொகுதியில் 84.41 சதவிகித வாக்குகளும், நாங்குநேரி தொகுதியில் 66 சதவிகித வாக்குகளும் பதிவாகின. விக்கிரவாண்டி தொகுதி வாக்கு எண்ணிக்கை விழுப்புரம் அருகேயுள்ள இ.எஸ்.பொறியியல் கல்லூரியிலும், நாங்குநேரி வாக்கு எண்ணிக்கை பாளையங்கோட்டை அரசு பொறியியல் கல்லூரியிலும் நடைபெறுகிறது. இதற்காக இரண்டு இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் சீலிடப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இன்று (அக்டோபர் 24) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெறவுள்ளது. 14 மேஜைகள் அமைக்கப்பட்டு 22 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன்பிறகு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். இறுதியாக விவிபாட் இயந்திரங்களில் பதிவான வாக்குகள் சரிபார்க்கப்பட்டு முடிவு அறிவிக்கப்பட இருக்கிறது.

வாக்கு எண்ணுவதற்குத் தேவையான அனைத்து முன்னேற்பாட்டுப் பணிகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. மையம் முழுவதும் ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கையை வேட்பாளர்களின் முகவர்கள் கண்காணிக்கும் வகையில் எல்இடி டிவியும் அமைக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க மத்திய தொழில் பாதுகாப்புப் படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, ஆயுதப்படை மற்றும் உள்ளூர் காவல் துறையினர் என நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் முகவர்கள் செல்போன் உட்பட எந்தப் பொருளையும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் எடுத்து செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டியைப் பொறுத்தவரை அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனும், திமுக வேட்பாளர் புகழேந்தியும்தான் பிரதானப் போட்டியாளர்கள். நாங்குநேரி தொகுதியில் அதிமுகவின் நாராயணனுக்கும், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கும் இடையில்தான் போட்டி நிலவி வருகிறது.

இடைத் தேர்தல் தொடர்பாக அமைச்சர் தங்கமணி மூலமாக எடுக்கப்பட்ட சர்வே மற்றும் உளவுத் துறை அளித்த ரிப்போர்ட்டில் இரு தொகுதிகளிலும் அதிமுகதான் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் முதல்வர் மகிழ்ச்சியாக உள்ளதாக 22ஆம் தேதி டிஜிட்டல் திண்ணையில் குறிப்பிட்டிருந்தோம். இதேபோல இரு தொகுதிகளுக்கான திமுக பொறுப்பாளர்கள் சொன்ன தகவல் மற்றும் எக்சிட் போல் அடிப்படையில் ஓஎம்ஜி தந்த தகவல்களால் திமுக கூட்டணிதான் வெற்றிபெறும் என திமுக தலைவர் ஸ்டாலினும் நம்பிக்கையாகவே இருந்து வருகிறார் என்றும் அதில் தெரிவித்திருந்தோம். யார் வெற்றி என்பது முன்னணி நிலவரங்களைப் பொறுத்து இன்னும் சற்று நேரத்தில் தெரியவரும்.

**புதுச்சேரி: காமராஜர் நகர் இடைத் தேர்தல்**

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் லாஸ்பேட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கும் தொடங்கும் வாக்கு எண்ணிக்கையானது 11 மேஜைகளில் மூன்று சுற்றுகளாக நடைபெறுகிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *