மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 20 ஜன 2021

கார்த்தி அவ்வளவு சீக்கிரம் ஓ.கே. சொல்லமாட்டார்: நரேன்

 கார்த்தி அவ்வளவு சீக்கிரம் ஓ.கே. சொல்லமாட்டார்: நரேன்

விளம்பரம்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கைதி’.

ஒரு இரவில் நடக்கும் பயணம், தொலைவில் காத்திருக்கும் அன்பு என சுவாரஸ்யமான களத்தோடு வரவுள்ளது கைதி. இப்படத்தில் போலீசாக நடித்துள்ளார் நரேன். சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமான நரேன், அஞ்சாதே படத்தின் மூலம் தனக்கான அடையாளத்தை உருவாக்கினார். அதன் பின்னர், தம்பிக்கோட்டை, முகமூடி என பல படங்களில் நடித்த இவர் நீண்ட இடைவெளிக்குப் பின் நடித்திருக்கும் படம் ‘கைதி’. நரேனின் வார்த்தைகளிலேயே கூற வேண்டுமெனில் இது அவருக்கு‘செகண்ட் இன்னிங்ஸ்’.

கைதி திரைப்படத்தில் நடித்த நரேனின் அனுபவங்கள்

கைதி திரைப்படத்தை தேர்ந்தெடுத்ததற்கு மிக முக்கியமான காரணம் கார்த்தி. கார்த்தியும் நானும் நெருங்கிய நண்பர்கள். ஒரு நாள் கார்த்தி என்னை அழைத்து கைதி பற்றிக் கூறினார். 'அஞ்சாதே' படத்துக்குப் பிறகு பல போலீஸ் கேரக்டர்கள் வந்தாலும் அது போலவே இருந்தது. ஆகையால் அதிலெல்லாம் நடிக்கவில்லை. இந்தப் படத்திலும் போலீஸ் என்றவுடன், “ரொம்ப சீரியசான ரோல்-ஆ” எனக் கேட்டேன். கார்த்தி ‘ஆம்’ என்றார். அவர் நடிக்கிறார் என்றவுடன் நானும் நடிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டேன்.

ஏனென்றால், கார்த்தி அவ்வளவு எளிதில் ஒரு கதையை ஒப்புக்கொள்ளமாட்டார். இந்தப் படத்தின் கதையைக் கேட்ட பத்தாவது நிமிடத்தில் கண்டிப்பாக சூப்பராக இருக்கும் என்ற நம்பிக்கை வந்தது. கதையே பரபரப்பாவே இருக்கும். ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொள்ளும் நல்ல போலீஸ் எப்படியிருப்பானோ அப்படி நடித்துள்ளேன். அவனுக்குக் கையில் அடிபட்டிருக்கும். அந்தக் கையை வைத்துக்கொண்டு அவன் என்ன பண்றான் என்பதைப் படத்தில் பார்த்துக் கொள்ளுங்கள்.

படம் முழுக்கவே இரவு தான் ஷூட்டிங். செங்கல்பட்டு, கேரளா பார்டர் உள்ளிட்ட பல இடங்களில் ஷூட் பண்ணியிருக்கோம். இந்தப் படத்தில் குளிர்தான் புதிதாக இருந்தது. நடிகர்களை விடத் தொழில்நுட்பக் குழு தான் ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். எல்லா படங்களிலும் ஷூட்டிங்குக்கு இடையிலே ஒரு சின்ன கேப்ல கலகலப்பா பேசிட்டு இருப்போம். ஆனால், இது ரொம்ப ராவான கதை என்பதால், ஷூட்டிங் ஸ்பாட் பரபரப்பாகவே இருக்கும்.

நாற்பது நாட்கள் வரை தினமும் இரவு தான் ஷூட்டிங் என்றால் எப்படியிருக்கும் எனப் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு நாள் தூங்கவில்லை என்றாலும் நமக்குச் சோர்வாக இருக்கும். ஆனால், படத்தில் என் கேரக்டர் சோர்வாகவே இருக்கும். அதை அப்படியே பண்ணிட்டேன்.

சினிமாவை ரொம்பவே காதலிக்கிற ஒரு குழுவோடு பணிபுரிந்ததில் சந்தோஷம். ஒரு பெரிய கமர்ஷியல் படத்தில் நாயகியே இல்லாத படம் இதுதான் என நினைக்கிறேன். இதில் நடிக்க கார்த்திக்கு நிறைய தைரியம் வேண்டும்.

சினிமாவை மட்டுமே வாழ்க்கையாக நேசிக்கிற ஒரு ஆள் லோகேஷ் கனகராஜ். அதைத் தாண்டி வேறு எதுவும் பேசவே மாட்டார். எப்போதுமே வேலை வேலை வேலை தான். அவர் இன்னும் பெரிய இடத்துக்குப் போவார்.

நல்ல படத்தை எடுப்பதோடு மட்டுமல்லாமல் அதை வணிக ரீதியான வெற்றிப்படமாக மாற்றவும் தெரிந்தவர் லோகேஷ். ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல வாய்ப்பு இந்த படம் மூலமா கிடைச்சிருக்கு. நிச்சயமா கைதிக்கு பிறகு எனக்கு ரெண்டாவது இன்னிங்ஸ் தான். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தோடு பயணம் செய்ததே ஒரு கனவு போலத் தான் இருக்கிறது. நடிகர் கார்த்தி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ட்ரீம் வாரியர் நிறுவனம் ஆகியோருக்கு எனது நன்றிகள்” எனக் கூறினார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி, நரேன், ஜார்ஜ் மரியான், ரமணா, தீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசை: சாம் சி.எஸ், ஒளிப்பதிவு: சத்யன் சூரியன், படத்தொகுப்பு: பிலோமின் ராஜ், சண்டைபயிற்சி: அன்பறிவ், கலை: என்.சதீஷ் குமார், வசனம்: பொன் பார்த்திபன்&லோகேஷ் கனகராஜ்.

இன்னும் 3 தினங்களில் ரிலீசாகிறான் ‘கைதி’!

விளம்பர பகுதி

புதன், 23 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon