மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 10 ஆக 2020

தேர்தலில் நிற்கத் தடை: பாஜக பிரமுகருக்கு சலுகை!

தேர்தலில் நிற்கத் தடை: பாஜக பிரமுகருக்கு  சலுகை!

நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் மக்கள் பிரநிதித்துவ சட்டப்படி ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம் தனக்குள்ள பிரத்யேக அதிகாரத்தைப் பயன்படுத்தி இரண்டாவது முறையாக தகுதியிழப்புக்கு உள்ளான நபர்களுக்கு சலுகை காட்டி வருகிறது.

சிக்கிம் முதல்வருக்கு அடுத்தபடியாக, கர்நாடக பாஜக தலைவரின் தகுதியிழப்பு காலத்தைக் குறைத்திருக்கிறது தேர்தல் ஆணையம்.

கர்நாடக பாஜக தலைவர்களில் ஒருவரான முனிராஜ் கவுடா கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். தனது செலவுக் கணக்கை முறையாக சமர்ப்பிக்காததால் இந்த வருடம் ஜனவரி 9 ஆம் தேதி முதல் மூன்று வருடங்களுக்கு தேர்தலில் நிற்க தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

இதையடுத்து கவுடா தேர்தல் ஆணையத்துக்கு மேல்முறையீட்டு மனுவை அளித்தார். அதில் தனக்கு விதிக்கப்பட்ட தடைக் காலத்தைக் குறைக்கும்படி கோரியிருந்தார்.

இந்த நிலையில் தேர்தல் ஆணையம் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியிட்ட உத்தரவில்,

“செப்டம்பர் 9 ஆம் தேதி கவுடா மேல் முறையீட்டு மனு தேர்தல் ஆணையத்துக்கு வந்தது. இந்த மனு அக்டோபர் 9 ஆம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மக்கள் பிரநிதித்துவ சட்டத்தின் 11 ஆவது பிரிவு தேர்தல் ஆணையத்துக்கு அளித்துள்ள சிறப்பு அதிகாரத்தின்படி, தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடைக் காலத்தை நீக்கவோ, குறைக்கவோ தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு.

அந்த வகையில் கவுடாவின் மனுவை பரிசீலனை செய்து அவர் தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட 3 ஆண்டு தடைக் காலத்தை ஒன்பதுமாதம், ஒன்பது நாட்களாக்க குறைத்து உத்தரவிடுகிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த செப்டம்பர் மாதம் சிக்கிம் மாநிலத்தில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிக்கிம் கிராந்திகாரி கட்சித் தலைவரும் சிக்கிம் முதல்வராக பதவியேற்றவருமான பிரேம் சிங் தமங் ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற நிலையிலும் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். ஆனால் ஆறு ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் நிற்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விதிக்கப்பட்ட தடைக் காலத்தை ஒரு ஆண்டு ஒரு மாதமாக குறைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதையடுத்து இப்போது கர்நாடக பாஜக பிரமுகருக்கு இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

புதன், 23 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon