மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 20 ஜன 2021

நில அபகரிப்பு வழக்கு: நீதிமன்றத்தில் மு.க.அழகிரி

நில அபகரிப்பு வழக்கு:  நீதிமன்றத்தில் மு.க.அழகிரி

நில அபகரிப்பு தொடர்பான வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இன்று ஆஜரானார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் முன்னாள் மத்திய அமைச்சரும், கலைஞரின் மகனுமான மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. தயா பொறியியல் கல்லூரி கட்டுவதற்காக அப்பகுதியில் இருக்கும் விநாயகர் கோயிலுக்கு சொந்தமான 44 சென்ட் நிலத்தை அழகிரி தரப்பு ஆக்கிரமித்ததாகவும், இது இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமானது என்றும் கூறி நில அபகரிப்பு பிரிவு போலீஸில் 2014ஆம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் விசாரணை செய்த போலீசார் அழகிரி மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் மீதான விசாரணை மதுரை முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மு.க.அழகிரி, சதீஷ்குமார், ஆதிலெட்சுமி, சேதுராமன், சம்பத்குமார் உள்ளிட்ட 5பேரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து, நீதிமன்றத்தில் இவ்வழக்கு இன்று (அக்டோபர் 23) விசாரணைக்கு வந்தபோது, அழகிரி உள்ளிட்டோர் ஆஜராகினர். இதுபோலவே மக்களவைத் தேர்தலின்போது வேட்புமனுவில் சொத்துவிவரங்களை முறையாக தாக்கல் செய்யவில்லை என்று அழகிரி மீது மதுரை ஆட்சியர் தொடர்ந்த வழக்கிலும் அழகிரி இன்று ஆஜரானர். இந்த இரண்டு வழக்குகளையும் விசாரித்த நீதிபதி ஸ்ரீதேவி, வழக்கை வரும் நவம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

கலைஞர் மறைவுக்குப் பிறகு தன்னை திமுகவில் இணைத்துக்கொள்ள வேண்டும் என பல்வேறு முயற்சிகளையும் மு.க.அழகிரி மேற்கொண்டார். ஆனால், திமுகவில் சேர்த்துக்கொள்ளப்படாததால் அதன்பிறகு அமைதியாகவே இருந்துவருகிறார். அவரை பொதுவெளியிலும் அதிகமாக பார்க்க முடிவதில்லை. இந்த நிலையில் தற்போது நில அபகரிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

புதன், 23 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon