மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 20 ஜன 2021

கொடுத்த வாக்கு :நிறைவேற்றிய இமான்

கொடுத்த வாக்கு :நிறைவேற்றிய இமான்

இளைஞர் திருமூர்த்தியைப் பிரபல நடிகரின் திரைப்படத்தில் பாடகராக அறிமுகமாக்கி தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றியுள்ளார் இசையமைப்பாளர் இமான்.

சில நாட்களுக்கு முன்னர் பார்வையற்ற இளைஞரான திருமூர்த்தி என்பவர் விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற ‘கண்ணான கண்ணே’ பாடலைப் பாடியிருந்தார். அந்த இளைஞரின் மென்மையான குரலும், அவரது பாடலும் சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வைரலானது.

திருமூர்த்தி பாடிய பாடலின் வீடியோவை, இசையமைப்பாளர் இமானுக்கும், பாடகர் சித் ஸ்ரீ ராமுக்கும் டேக் செய்து ஒருவர் ட்வீட் செய்திருந்தார். இதனைப் பார்த்த இமான் உடனடியாக திருமூர்த்தி குறித்த விவரங்களைக் கேட்டறிந்து “விரைவில் அவரைப் பாட வைக்க உள்ளேன். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று (அக்டோபர் 23), இமான் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘தம்பி திருமூர்த்தியைப் பின்னணி பாடகராக அறிமுகப்படுத்துகிறேன். என்னுடைய அடுத்த படமாக ரிலீசாகவிருக்கும், ரத்ன சிவா இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘சீறு’ படத்தில் அவர் ஒரு பாடலை பாடவிருக்கிறார்’ என்ற தகவலைப் பகிர்ந்துள்ளார்.

பாடலாசிரியர் பார்வதி எழுதியிருக்கும் உயிரூட்டமான அந்த பாடல், திருமூர்த்தியின் குரலில் விரைவில் வெளியாகவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிய இசையமைப்பாளர் இமானுக்கு பலரும் நன்றிகளையும் பாரட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் மேற்கு வங்க மாநிலத்தின் நாடியாவிலுள்ள ரயில் நிலையத்தில், வறுமையால் கையேந்திக் கொண்டிருந்த ராணு மண்டல் என்ற பெண் பாடிய பாடல் இணையத்தில் வைரலானது. அதன் மூலம் கிடைத்த வாய்ப்பால் அவர் தற்போது பாலிவுட்டில் பிரபல பாடகியாக மாறியிருக்கிறார். இவ்வாறு சமூக வலைதளங்கள் பல திறமையாளர்களை வெளி உலகிற்குக் கொண்டு வந்து அவர்களுக்கு வாழ்வளித்து வருகிறது.

தற்போது சீறு படத்தில் இடம்பெறும் திருமூர்த்தியின் பாடல் மூலமாக அவருக்கும் இன்னும் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதன், 23 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon