மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 10 ஆக 2020

இனி ஐந்து மைதானங்களில் மட்டும்தான் டெஸ்ட் போட்டிகள்!

இனி ஐந்து மைதானங்களில் மட்டும்தான் டெஸ்ட் போட்டிகள்!

நிரந்தரமாக இனி ஐந்து மைதானங்களில் மட்டும்தான் டெஸ்ட் போட்டிகள் நடைபெற வேண்டும் என தென்னாப்பிரிக்க அணியை வென்ற பின் விராட் கோலி தெரிவித்தார்.

இந்திய தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா ‘க்ளீன் ஸ்வீப்’ வெற்றி பெற்று சாதனை படைத்தது. ராஞ்சியில் தொடர் வெற்றிக்குப் பின் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன், சிட்னி, பெர்த், பிரிஸ்பன், அடிலெய்ட், இங்கிலாந்தில் லார்ட்ஸ், ஓவல், ட்ரெண்ட் பிரிட்ஜ், ஓல்ட் ட்ராபர்ட், சவுதாம்ப்டன், ஹெடிங்லே என்று பிரதான டெஸ்ட் மைதானங்கள் உள்ளன. இந்தியாவிலும் டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை, பெங்களூரு, கான்பூர், நாக்பூர், மொஹாலி போன்ற பிரதான மையங்களில் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வந்தன.

ஆனால், திடீரென பிரதான மையங்கள் ஒதுக்கப்பட்டு ஜார்கண்ட், புனே, தரம்சலா போன்ற மையங்கள் மையத்துக்கு வந்தன. இதுகுறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்புகையில் விராட் கோலி, “இது உண்மையில் சிறந்த கேள்வி. நீண்ட காலமாக இதை விவாதித்து வருகிறோம், என்னைப் பொறுத்தவரையில் நாமும் நிரந்தர டெஸ்ட் மையங்களில் டெஸ்ட் போட்டிகளை நடத்த வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட் உற்சாகமாக, சுவாரஸ்யமாக இருக்க வேண்டுமெனில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நிரந்தரமான பிரதான விளையாட்டு மையங்கள் தேவை என்பதுடன் நான் முழுவதும் உடன்படுகிறேன். ஆங்காங்கே பரவலாக டெஸ்ட் போட்டிகளை நடத்துதல் கூடாது. சில மைதானங்களில் கூட்டம் வருவதேயில்லை.

எனவே வலுவான ஐந்து டெஸ்ட் மைதானங்கள் தேவை. அதாவது வெளியேயிருந்து வரும் அணிகள் இந்த ஐந்து மைதானங்களில்தான் டெஸ்ட் போட்டிகள் நடைபெறப் போகிறது என்று அவர்கள் தயாரித்துக்கொள்ள வசதியாக இருக்கும்.

நம் அணிக்கு அப்படித்தான் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது எந்த நான்கு மைதானங்களில் ஆடப்போகிறோம் என்று தெரிகிறது. அங்கு பிட்ச் இப்படித்தான் இருக்கும், மைதானம் முழுக்க ரசிகர்கள் இருக்கப் போகிறார்கள் என்பது நமக்குத் தெரிய வேண்டும்” என விராட் கோலி கூறினார்.

மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்டுக்கான இடமாக இருந்த ராஞ்சியில் 3000க்கும் குறைவான டிக்கெட்டுகள் விற்கப்பட்ட பின்னர் கோஹ்லி இந்த மாற்றத்தைக் கோரினார்.

ராஞ்சிக்கு வந்த தோனி

ராஞ்சி டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய பின்னர், முன்னாள் கேப்டனும் ராஞ்சி வீரருமான எம்.எஸ்.தோனி டிரஸ்ஸிங் ரூமில் வீரர்களைச் சந்தித்து உரையாடினார்.

இந்தப் போட்டிக்கு ராஞ்சியின் விருப்பமான வீரர் தோனி வருவார் என்று யூகங்கள் இருந்த நிலையில், தோனியின் வருகை ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தைத் தூண்டியது. உலகக் கோப்பைக்குப்பின், தோனி முற்றிலுமாக போட்டிகளில் கலந்துகொள்வதை நிறுத்தியதையடுத்து தற்போதுதான் கிரிக்கெட் போட்டி நடக்கும் இடத்தில் காணப்படுகிறார் என்பது கூடுதல் தகவல்.

புதன், 23 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon