மாணவர்களுக்கு சரியான தொழில் தேர்வுகளைச் செய்ய உதவும் முயற்சியில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்சிஇஆர்டி) ஆகியவை 'தமன்னா' என்று அழைக்கப்படும் ஆன்லைன் ஆப்டிட்யூட் தேர்வை அறிமுகப்படுத்தியுள்ளன.
மாணவர்கள் தாங்கள் எந்தப் பாடத்தில் சிறப்பாக உள்ளனர். உயர்கல்விக்குச் செல்லும்போது எந்தப் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்யலாம் என்பதற்கு இந்தத் தேர்வு உதவும் என்று சிபிஎஸ்இ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. Try And Measure Aptitude and Natural Abilities என்பதன் ஆங்கில சுருக்கமே தமன்னா (Tamanna) என்று சொல்லப்படுகிறது என சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாய்மொழித் தேர்வு, திறனறித் தேர்வு, என 7 தலைப்புகளில், தலைப்புக்கு 10 நிமிடங்கள் என 70 நிமிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படும். ஒரு தலைப்புக்கு மொத்தம் 30 கேள்விகள் கேட்கப்படும். இந்த தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்ணை பொறுத்து மாணவர்கள் தங்களது உயர்க் கல்வியை தேர்வு செய்யலாம். மொழித் தேர்வு, வாய்மொழித் தேர்வு ஆகியவற்றில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் சட்டம், இதழியல் போன்ற துறைகளை தேர்வு செய்யலாம். எண் திறன் ஆகியவற்றில் மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் வங்கி, புள்ளியியல் போன்ற துறைகளை தேர்ந்தெடுக்கலாம் என்று சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தேர்வில் வெற்றி தோல்வி என்பது கிடையாது. மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்ணைப் பொறுத்து அவர்கள் தகுந்த துறையை தேர்ந்தெடுக்கலாம். அதுபோன்று இந்த தேர்வு என்பது கட்டாயமில்லை. ஆர்வமுள்ள மாணவர்கள் எழுதலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ சோதனை முயற்சியாக ஏற்கனவே 17000 மாணவர்களிடம் இந்த சோதனையை நடத்தியுள்ளது. விரைவில் அனைத்து பள்ளிகளிலும் இந்த தேர்வு முறை கொண்டுவரப்படவுள்ளது.