மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 10 ஆக 2020

பஸ் டே: நீதிமன்றம் நூதன தண்டனை!

பஸ் டே: நீதிமன்றம் நூதன தண்டனை!

அரசு பேருந்து மீது ஏறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாகப் பதியப்பட்ட வழக்கில் மாணவர் ஒருவருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் நூதன தண்டனையை வழங்கியுள்ளது.

பச்சையப்பன் கல்லூரி வகுப்புகள் ஆரம்பித்த முதல் நாளில் பஸ் டே என்ற பெயரில் பேருந்துகள் மீது ஏறி கூச்சல் எழுப்பி பொது மக்களுக்கு இடையூறு செய்ததாகச் சில மாணவர்கள் மீது அயனாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதில் சென்னை புதுப்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் படிக்கும் துரைராஜ் என்ற மாணவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவர் துரைராஜ், தான் பச்சையப்பன் கல்லூரி மாணவர் இல்லை என்றும் அக்கல்லூரி மாணவர் எனத் தவறாக நினைத்து என் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் எனக் கூறி தன்னுடைய கல்லூரியின் அடையாள அட்டையையும் நீதிமன்றத்தில் காண்பித்துள்ளார்.

இதை விசாரித்த நீதிபதி, மாணவர் துரைராஜ் பச்சையப்பன் கல்லூரி மாணவர் இல்லை என்றாலும் அவர் சம்பவ இடத்தில் இருந்துள்ளார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவர் சட்டக்கல்லூரி வளாகத்தில் பத்து மரக்கன்றுகளை நட்டு ஒரு மாதத்துக்குத் தண்ணீர் ஊற்றி அவற்றைப் பராமரிக்க வேண்டும் என்று நூதன தண்டனை விதித்து உத்தரவிட்டார். மாணவர் மரக்கன்றுகளைப் பராமரிக்கும் விவரங்களைக் கல்லூரி முதல்வரிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். மாணவரின் எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு அவர் மீதான வழக்கை ரத்து செய்தும் உத்தரவிட்டார்.

புதன், 23 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon