மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 10 ஆக 2020

தள்ளிப்போகும் உள்ளாட்சித் தேர்தல்?

தள்ளிப்போகும் உள்ளாட்சித் தேர்தல்?

உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிவைப்பதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. தொடர்ச்சியாக உள்ளாட்சித் தேர்தலுக்கு அவகாசம் கேட்டு வந்த தமிழகத் தேர்தல் ஆணையம், வரும் அக்டோபர் இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவித்துவிடுவோம் என உச்ச நீதிமன்றத்தில் ஜூலை மாதம் உத்தரவாதம் அளித்தது.

இதைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டன. தற்போது, சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும், செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்களுமே உள்ளாட்சித் தேர்தல் நவம்பர் மாதத்தில் நடைபெறும் என வெளிப்படையாகவே பேசினர். திமுக தரப்பிலிருந்தும் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டன. திமுக தலைமைக் கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “மாவட்டக் கழக செயலாளர்கள் ‘வார்டு பொறுப்புக் குழு உறுப்பினர்கள்’ பட்டியலை 05-11-2019 ஆம் தேதிக்குள் தலைமைக் கழகத்துக்கு அனுப்பிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாகப் பெய்து வருகிறது. அடுத்த மாதம் வரை பருவமழை தொடரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உள்ளாட்சித் தேர்தலும் தள்ளிப்போகலாம் என்று தலைமைச் செயலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதுதொடர்பாக அதிகாரிகள் வட்டாரத்தில் பேசினோம்...

“வரும் நவம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், தற்போது தொடங்கியுள்ள பருவமழையானது அடுத்த மாதம் வரை நீடிக்க வாய்ப்பிருக்கிறது. கடந்த வருடமே நவம்பர் மாதத்தில்தான் கஜா புயல் வந்து டெல்டா பகுதிகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் சூழலில் மழை வெள்ளம் அல்லது புயல் என ஏதாவது ஒன்று வந்துவிட்டாலும் அதிகாரிகள் அதற்கான பணிகளைக் கவனிக்க வேண்டும். அதனால் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த முடியாது.

மேலும், மழை நேரத்தில் தேர்தலை நடத்துவது பொது மக்கள், அதிகாரிகள், அரசியல் கட்சிகள் என அனைவருக்கும் சிரமத்தையே ஏற்படுத்தும். எனவே, தேர்தலைத் தள்ளிவைப்பதற்கான ஆலோசனை நடந்துவருகின்றன. அப்படித் தள்ளிவைக்கப்படும்பட்சத்தில் அடுத்த ஆண்டில்தான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தனர்.

உள்ளாட்சித் தேர்தல் தள்ளிவைக்கப்பட இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.

“நாடு முழுவதும் தமிழகம் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால் மத்திய அரசிடமிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தர வேண்டிய நிதியை மத்திய அரசு விடுவிக்காமல் இருந்து வருகிறது. தமிழகத்தில் உள்ளாட்சி நிதிகள் விடுவிக்கப்படாதது தொடர்பாக மக்களவையில் திமுக எம்.பி ஆ.ராசா எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ‘தேர்தல் நடத்தாவிட்டால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்காது’ என்று கூறினார்.

இந்த நிலையில் தற்போது, உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டுவிட்டால் தமிழகத்துக்காக நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டிய சூழல் ஏற்படும். பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்துள்ள இந்தச் சூழலில், நிதிகளை விடுவிக்க முடியாத நிலையில் மத்திய அரசு உள்ளது. இதனால், உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிவைத்து நடத்தலாம் என்று டெல்லி தரப்பிலிருந்து பேசியிருக்கிறார்கள். ஆகவே, பருவமழையைக் காரணம் காட்டி தள்ளிவைக்கலாமா என்ற ஆலோசனையில் தமிழக ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்” என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

பருவமழையைக் காரணம் காட்டி தேர்தலைத் தள்ளிவைப்பது ஒன்றும் புதிதில்லை. ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ‘மழை காரணமாக இடைத் தேர்தலை தற்போது நடத்த வேண்டாம்’ எனத் தமிழக தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியதால் அந்த நேரத்தில் நடைபெற இருந்த திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்படவில்லை. ஆறு மாதங்கள் தாமதமாக மக்களவைத் தேர்தலுடன்தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், உச்ச நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் தேதி திட்டமிட்டபடி அறிவிக்கப்படும் என்று எதிர்க்கட்சிகள் நம்புகின்றன. இருப்பினும், தேர்தல் தள்ளிவைக்கப்படுவதும் நன்மைக்குத்தான் என்றே எதிர்க்கட்சி நிர்வாகிகள் சொல்கிறார்கள். ஏற்கனவே மக்களவைத் தேர்தல், வேலூர் தேர்தல், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத் தேர்தல் எனத் தொடர்ச்சியாக பணியாற்றி வருகிறோம். இதனால் உழைப்பும், பணமும் அதிகம் செலவாகியுள்ளது. எனவே, உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராக சில மாதங்களாவது தேவைப்படுகிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

செவ்வாய், 22 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon