மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

டிஜிட்டல் திண்ணை: என்னை கேலி செய்வதா? அமைச்சர்களிடம் புலம்பிய எடப்பாடி

டிஜிட்டல் திண்ணை: என்னை கேலி செய்வதா? அமைச்சர்களிடம் புலம்பிய எடப்பாடி

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் தயாராக இருந்தது. “முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேற்று அமைச்சர்கள் சிலர் சந்தித்தார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி டாக்டர் பட்டம் பெற்றதற்கு வாழ்த்து சொல்லவே இந்தச் சந்திப்பு என்று சொல்லப்பட்டது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் அதில் அடக்கம். ராஜேந்திர பாலாஜியுடன் முதல்வர் நீண்ட நேரம் பேசியிருக்கிறார்.

‘நம்ம கட்சிக்குள் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் நீங்க கவனிச்சிட்டுதான் இருப்பீங்கன்னு நினைக்கிறேன். போற இடங்களில் எல்லாம் நீங்க என்னை புகழ்வது பலருக்கும் பிடிக்கல. நாம என்னதான் ஒட்டிவந்தாலும் அவரு (ஓபிஎஸ்) ஒட்டியும் ஒட்டாமல்தான் இருக்காரு. பிரச்சாரத்துக்கு விக்கிரவாண்டிக்குப் போன இடத்தில் நம்ம கட்சி ஆளுங்ககிட்ட என்னை பத்தி தேவையே இல்லாம கேலியா பேசி இருக்காரு. அவருக்குத் தன்னோட பையன் மத்திய அமைச்சர் ஆகணும். அதுக்காக யாரை வேணும்னாலும் மட்டம் தட்டுவாரு. எனக்கு யாரெல்லாம் சப்போர்ட்டாக இருக்காங்களோ எல்லோரையும் அவருக்கு எதிரியாகவே பார்க்கிறாரு...’ என்று சொல்லி புலம்பியதாகக் கூறுகிறார்கள்.

அதற்கு ராஜேந்திர பாலாஜியோ, ‘யாரோ என்னவோ சொல்லிட்டுப் போகட்டும் விடுங்கண்ணே... உங்களுக்கு எல்லாமே வெற்றிக்கு மேல வெற்றியாகத்தான் வந்துட்டு இருக்கு. அம்மாவுக்கு அப்புறம் உங்களைத்தான் டாக்டர் எடப்பாடியார்னு நாங்க சொல்ல போறோம். நீங்க முதல்வர் ஆனதும் எடப்பாடி ஆட்சி இன்னும் எத்தனை நாள் தாக்கு பிடிக்கும் என பலரும் ஏளனமா பேசுனாங்க. அவங்க எல்லாம் இப்போ எங்கே போனாங்க? எல்லோரும் பார்த்து மூக்கு மேல விரலை வைக்கிற மாதிரிதானே நீங்க ஆட்சி பண்ணிட்டு இருக்கீங்க. நான் எதாவது சில இடங்களில் சில நேரங்களில் பேசினது தப்பா இருந்தாலும் கூப்பிட்டு இப்படி பேசாதேன்னு சொல்லுவீங்க. அதுக்காக நான் கோபிச்சுக்கிட்டேனா? நீங்க என்னோட நல்லதுக்குத்தானே சொல்றீங்கன்னு எடுத்துக்குவேன். இது எப்பவுமே பொறாமைகள் நிறைஞ்ச உலகம்னு நான் உங்களுக்குச் சொல்லி தெரிய தேவை இல்லை’ என்று சொல்லியிருக்கிறார்.

எடப்பாடியோ, ‘திமுககாரங்க என்ன சொல்லுவாங்கன்னு நான் கவனிக்கிறதைவிட நம்ம ஆளுங்க என்ன செய்வாங்க, என்ன பேசுவாங்க என்பதைத்தான் அதிகம் கண்காணிக்க வேண்டி இருக்கு...’ என்று வருத்தம் கலந்து பேசி இருக்கிறார்.

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட சிலரும் முதல்வரைச் சந்தித்து வாழ்த்து சொல்லியிருக்கிறார்கள். அவர்களிடமும், ஓபிஎஸ் பற்றிய சில விஷயங்களைக் கேட்டிருக்கிறார் முதல்வர். இந்த விஷயங்களை எல்லாம் முதல்வர் டெல்லியில் உள்ள சிலருக்கும் தொடர்ந்து அப்டேட் செய்தபடியேதான் இருக்கிறாராம்.

டாக்டர் பட்டம் வாங்கிய பிறகு முதல்வர் இன்னும் சேலம் போகவில்லை. அப்படிப் போகும்போது சேலமே குலுங்கும்படி வரவேற்பு விழாவுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என முதல்வர் ஆதரவாளர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆனால் முதல்வரோ, ‘மக்கள் திட்டுற மாதிரி எதையும் செஞ்சுடாதீங்க...’ என அன்பாக எச்சரித்தும் இருக்கிறாராம்” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ். அதற்கு லைக் போட்டதுடன் அதை அப்படியே காப்பி செய்து ஷேரும் செய்தது வாட்ஸ் அப்.

அடுத்த மெசேஜ் வருகிறதா எனப் பார்த்தோம். ஆஃப் லைனுக்குப் போயிருந்தது வாட்ஸ் அப்.

புதன், 23 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon