மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

பிஎஸ்என்எல் 4ஜி: மத்திய அரசு அனுமதி!

பிஎஸ்என்எல் 4ஜி: மத்திய அரசு அனுமதி!

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி உரிமம் வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தொலைத் தொடர்பு பொதுத்துறை நிறுவனங்களான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்) மற்றும் மகாநகர் தொலைபேசி நிகாம் லிமிடெட் (எம்.டி.என்.எல்) ஆகியவை ஒன்றாக இணைக்கப்படும் என மத்திய அமைச்சரவை இன்று (அக்டோபர் 23) அறிவித்திருக்கிறது.

மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்களையும், 4ஜி உள்ளிட்ட சேவைகளையும் காலத்திற்கேற்ற வகையில் கொடுத்து வருகின்றன. பெரும் வருமானத்தை ஈட்டக்கூடிய தொலைதொடர்பு சந்தையில், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மட்டும் 4ஜி சேவைக்கான அனுமதி கிடைக்காமல் இருந்தது. ஏற்கனவே பண நெருக்கடியில் இயங்கி வரும் பிஎஸ்என்எல் இதனால் மற்ற நிறுவனங்களோடு போட்டி போட முடியாமல், மேலும் பின்னடைவைச் சந்தித்தது.

டெல்லியில் நேற்று(அக்டோபர் 22) பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று(அக்டோபர் 23)செய்தியாளர்களிடம் கூறியதாவது, “பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி உரிமம் வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் மார்ச் 2020 இறுதிக்குள் 4 ஜி சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளது. பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களை மூடப்போவதாக வரும் செய்திகளில் உண்மை கிடையாது. அதேபோல் இந்த இரண்டு நிறுவனங்களில் இருந்து அரசின் பங்குகளை விலக்கிக் கொள்ளப் போவதோ அல்லது ஏதேனும் ஒரு மூன்றாம் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்போவதோ இல்லை.

மாற்றாக பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் ஒன்றாக இணைக்கப்படும். பிஎஸ்என்எல்-லில் இருந்து விருப்ப ஓய்வு (விஆர்எஸ்) பெறுவோருக்கு சிறப்பு ஓய்வூதியம் வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.

நிதி நெருக்கடிக்குள்ளான அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல் - எம்டிஎன்எல் ஆகியவற்றை புதுப்பிப்பதற்கான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. பிஎஸ்என்எல் தனது ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காதது குறித்து தொடர்ந்து நடந்து வரும் இழுபறி பற்றி கருத்து தெரிவித்த ரவிசங்கர் பிரசாத், தீபாவளிக்கு முன் நிலுவையில் உள்ள தொகைகள் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். இது இந்நிறுவனங்களின் ஊழியர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த இரண்டு அரசுத்துறை நிறுவனங்களுக்கும் புத்துயிர் அளிக்க அரசு ரூ.29,937 கோடி நிதியை ஒதுக்க முடிவு செய்துள்ளது. இந்த புத்துயிரூட்டும் திட்டத்தில் ரூ.15,000 கோடி அரசுப் பத்திரங்கள் மூலமும், ரூ.38,000 கோடி சொத்துக்களை பணமாக்கவும் அடுத்த 4 ஆண்டுகளில் திட்டமிடப்பட்டுள்ளது.

அக்டோபர் தொடக்கத்தில், ஒரு புத்துயிர் திட்டம் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து, விருப்ப ஓய்வு (விஆர்எஸ்), 4 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் பிஎஸ்என்எல் உடன் கிடைக்கக்கூடிய சொத்துக்களை பணமாக்குதல் போன்ற கூறுகளை உள்ளடக்கி இத்திட்டம் தொகுக்கப்பட்டது எனவும் அரசு ஒதுக்கியுள்ள நிதி இதற்காக பயன்படுத்தப்படும் என்றும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

புதன், 23 அக் 2019

அடுத்ததுchevronRight icon