மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 20 ஜன 2021

ஸ்பெஷல் ஷோ டிக்கெட் விலை 1500 ரூபாய்!

ஸ்பெஷல் ஷோ டிக்கெட் விலை 1500 ரூபாய்!

தமிழ் நாட்டில் விழா நாட்களில் மட்டுமல்லாது, முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவரும் போதும் சிறப்புக் காட்சிகள் ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம். இந்த வருடத்தின் தொடக்கத்தில் ஜனவரி 10 அன்று வெளிவந்த விஸ்வாசம், பேட்ட படங்களுக்கு அதிகாலை காட்சி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி இல்லை. மீறி படம் திரையிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இருந்த போதிலும் நடு இரவுக் காட்சிகள், அதிகாலை 4 மணி காட்சிகள் என திரையிடப்பட்டன. ரஜினிகாந்த், அஜித் ரசிகர்கள் அந்த நேரத்திலும் திரண்டு வந்து படங்களைப் பார்த்தார்கள். சிறப்புக் காட்சிகளுக்கு அதுவும் குறிப்பாக தொடக்கக் காட்சியில் விஸ்வாசம் படத்திற்கு 1000 ரூபாயும், பேட்ட படத்திற்கு 500 ரூபாயும் டிக்கெட் விலையாக விற்பனை செய்யப்பட்டது.

தமிழ் சினிமாவில் பொங்கலுக்கு அடுத்து தீபாவளி பண்டிகையின்போது வெளியாகும் படங்கள் பாக்ஸ் ஆஃபீஸில் மிகப்பெரும் வசூலை எட்டுவதற்கு முயற்சிக்கும். இந்த வருட தீபாவளிக்கு பிகில், கைதி படங்கள் வெளிவருகின்றன. 'பிகில்' படத்தை அதிகாலை காட்சி பார்த்துவிட விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால், அரசு தரப்பில் அதிகாலை காட்சி திரையிட அனுமதி வாங்கிவிட்டு அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக அதிகமான புகார்கள் வருவதால் அனுமதிக்க முடியாது என்று எட்டயபுரத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்திருக்கிறார்.

ஆனாலும், அதிகாலை காட்சியைத் திரையிடுவதற்கு திட்டமிட்டு அதற்கான டிக்கெட்டுகளையும் விற்பனை செய்யத் தொடங்கிவிட்டன ஏராளமான திரையரங்குகள்.

சென்னை, கோயம்பேடு, அசோக் நகர், குரோம்பேட்டை, நங்கநல்லூர் ஆகிய இடங்களில் இருக்கும் திரையரங்குகளில் அதிகாலை காட்சி பிகில் படம் பார்ப்பதற்கு 1000 ரூபாய் முதல் 1500 வரை டிக்கெட் டோக்கன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

புறநகரில் இருக்கும் சில திரையரங்குகளில் அதிகாலை காட்சிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.

அரசாங்கம் என்ன அறிவிப்பு செய்தாலும் அதனையும் கடந்து ரசிகர்களுடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக அதிகாலை காட்சியை திரையரங்குகள் திரையிடுவதற்கு தீவிரமாக செயல்பட்டு வருவதை பார்க்கும் போது, சங்க நிர்வாகிகள் இறுதிக்கட்டத்தில் அனுமதி வாங்கி விடுவார்கள் என்கிற நம்பிக்கைதான் என்கின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள்.

புதன், 23 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon