மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 20 ஜன 2021

முரசொலி-பஞ்சமி: பாமகவுடன் இணைந்த பாஜக!

முரசொலி-பஞ்சமி: பாமகவுடன் இணைந்த பாஜக!

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதா என விசாரிக்க வேண்டுமென தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன் அளித்த மனு தொடர்பாக ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படத்தைப் பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின், அசுரன் பஞ்சமி நிலங்கள் குறித்துப் பேசுவதாக பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து ஸ்டாலினை சீண்டும் விதமாக கருத்து தெரிவித்த ராமதாஸ், முரசொலி அலுவலகத்திற்காக பஞ்சமி நிலங்கள் வளைக்கப்பட்டதாகவும், ஸ்டாலின் அதனை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.

அதற்கு காட்டமாக பதிலளித்த ஸ்டாலின், “பஞ்சமி நிலம் என்று நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என்றும், ராமதாஸ் சொன்னதை நிரூபிக்கத் தவறினால் அவரும், அன்புமணி ராமதாஸும் அரசியலை விட்டு விலகத் தயாரா” என்றும் பட்டாவுடன் சவால் விடுத்தார். இதனை முன்வைத்து இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து கருத்து மோதல் நடந்துவருகிறது.

இந்த நிலையில் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதா என்பதை விசாரிக்க வேண்டுமென பாஜக மாநிலச் செயலாளர் ஆர்.சீனிவாசன், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் மனு அளித்தார். இதன் பேரில், தமிழக தலைமைச் செயலாளருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அனுப்பிய நோட்டீஸில், “பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசனின் குற்றச்சாட்டு தொடர்பான உண்மை நிலையையும், அதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இன்று (அக்டோபர் 23) அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “முரசொலி நிலம் தொடர்பாக நான் விடுத்த அறைகூவலுக்கு ராமதாஸ் எந்த பதிலும் சொல்லாமல் வாய்மூடி மவுனமானார். இப்போது ஆதிதிராவிடர்களுக்கான தேசிய ஆணையத்தில் பாஜகவின் மாநிலச் செயலாளர் சீனிவாசன், இதுகுறித்து விசாரிக்க வேண்டுமென ஒரு மனு தந்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுசெய்து அது செய்தியாக ஊடகங்களில் வருகிறது. ராமதாஸின் கூற்றை நம்பி மண் குதிரையில் ஏறி ஆற்றில் இறங்கியுள்ளார் சீனிவாசன். அவருக்காக அனுதாபப்படுகிறேன். ராமதாஸின் கைப்பாவையாக செயல்படத் தொடங்கியுள்ள சீனிவாசனுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

துளிகூட உண்மையில்லாத, ஜமுக்காளத்தில் வடிகட்டிய ஒரு பொய் குறித்து தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்திற்கு சென்று நேரத்தை வீணடிப்பதை விட, அவர் இப்போது கூட்டணி வைத்துள்ள அதிமுகவின் முன்னாள் தலைவி ஜெயலலிதாவினால், பையனூரில் பங்களா கட்ட கையகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்ட பஞ்சமி நிலத்தை கைப்பற்றும் முயற்சியில் ராமதாஸுடன் இணைந்து செயல்பட்டால் ஏதாவது பலன் கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. ராமதாஸுக்கு நான் ஏற்கனவே விடுத்த அறைகூவலை இப்போதும் வலியுறுத்துகிறேன். முரசொலி நிலம் இருக்குமிடம் பஞ்சமி நிலம் என்பதை நிரூபிக்க ராமதாஸ் முன்வருவாரா? அவரது கைப்பாவையாக செயல்படும் சீனிவாசன், ராமதாஸை வலியுறுத்த முன்வருவாரா” என்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.

புதன், 23 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon