மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 20 ஜன 2021

பேனர் வைக்கக் கூடாது: அதிமுக பிரமாண பத்திரம்!

பேனர் வைக்கக் கூடாது: அதிமுக பிரமாண பத்திரம்!

கட்சி நிகழ்ச்சிகளில் பேனர்கள் வைக்க கூடாது என்று கட்சியினருக்கும் தொண்டர்களுக்கும் அறிவுறுத்தியிருப்பதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுபஸ்ரீ உயிரிழந்து ஒரு மாதத்துக்கும் மேல் கடந்த பிறகு இன்றுதான் ஆளும் கட்சியான அதிமுக சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

பள்ளிக்கரணை அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் இல்ல திருமணத்துக்காக வைக்கப்பட்ட பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார். இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்தது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயகோபால் ஜாமீன் கோரிய மனு நிலுவையில் உள்ளது.

சுபஸ்ரீயின் தந்தை ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், சிறப்பு விசாரணைக் குழு அமைக்கவும், பேனர் கலாச்சாரத்துக்கு எதிராகக் கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு இன்று (அக்டோபர் 23) நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக சார்பில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் , கட்சி நிகழ்ச்சிகளுக்குப் பேனர் வைக்க வேண்டாம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது சீன அதிபர் ஜீ ஜின்பிங், பிரதமர் மோடி சென்னை வருகைக்குப் பேனர் வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள டிராபிக் ராமசாமிக்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். பேனர் வைக்கும் போது விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றுதான் உத்தரவு பிறப்பித்ததாகக் கூறினர். அனுமதி வழங்கியதாக செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து சுபஸ்ரீயின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று தெரிவித்த நீதிபதிகள் கூடுதல் இழப்பீடு தொடர்பாக மோட்டார் வாகன தீர்ப்பாயத்தை அணுகலாம் என்று சுபஸ்ரீயின் தந்தைக்கு அறிவுறுத்தினர். இதுகுறித்து தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

புதன், 23 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon