மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 20 ஜன 2021

நாங்குநேரி தேர்தல் புறக்கணிப்பு தமிழ்நாடு முழுதும் தொடரும்!

நாங்குநேரி தேர்தல் புறக்கணிப்பு தமிழ்நாடு முழுதும் தொடரும்!

அண்மைக் காலமாக நடைபெற்ற பல தேர்தல்களில் ஆங்காங்கே தேர்தல் புறக்கணிப்பு முழக்கங்கள் எழுந்தாலும் தேர்தலின்போது அவை மக்களால் புறக்கணிக்கப்பட்டன. ஆனால் நாங்குநேரி தொகுதியில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தினர் ஒற்றுமையாக நின்று தேர்தல் புறக்கணிப்பு முடிவை செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்கள். இந்த தேர்தல் புறக்கணிப்பு இயக்கத்தை ஒருங்கிணைத்த பருத்திக் கோட்டை நாட்டார் தேவேந்திர குல வேளாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியத்திடம் மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி சார்பாக சில கேள்விகளை முன் வைத்தோம்.

தேர்தல் புறக்கணிப்பு வெற்றி பெற்றது எப்படி?

இது இன்று நேற்றைய கோரிக்கை அல்ல. சுமார் 40 வருடங்களுக்கும் மேலாக எங்களின் பல தரப்பட்ட முன்னோர்களான பெருமாள் பீட்டர், குருசாமி சித்தர், தேவ ஆசீர்வாதம் மற்றும் இவர்கள் வழியிலே வந்த செந்தில் மள்ளர், புதிய தமிழக கட்சித் தலைவர், ஜான் பாண்டியன், பசுபதி பாண்டியன் ஆகியோர் எடுத்துச் செய்ததுதான். ஆனால் அரசியல் காரணமாக இந்த கோரிக்கையை சரியாக கொண்டு போகவில்லை என்று கருதுகிறேன். கொண்டு போக முடியவில்லையா, எது தடுத்தது என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால் நமக்கு ஒரு நிலையான பெயரும், பட்டியல் வெளியேற்றமும் கிடைக்கும் என்ற எண்ணம், தாக்கம் மக்களிடம் இருந்தது. அதன் வெளிப்பாடுதான் இந்த வெற்றி.

அதென்ன பருத்திக் கோட்டை நாட்டார் சங்கம்?

பருத்திக் கோட்டை நாட்டார் சங்கம் என்பது 139 கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட ஒரு சங்கம். இந்த சங்கத்தில் இருப்பவர்கள் பல கட்சிகளில் இருக்கலாம். ஆனால் அவர்கள் எல்லாருமே சங்கத்துக்குக் கட்டுப்பட்டவர்கள்தான்.

பருத்திக் கோட்டை நாட்டார்கள் என்பவர்கள் நாங்குநேரி தொகுதியில் அதிகமாக இருக்கிறார்கள். எங்கள் சமூகம் விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்ட சமூகம். குறிப்பாக இந்த நாங்குநேரி பகுதியில் பருத்தியை அதிகமாக பயிரிட்டிருக்கிறோம். 1500 ஆம் ஆண்டுகளிலேயே பருத்தி விவசாயத்தில் கொடிகட்டிப் பறந்த பகுதி இது. பிற்காலங்களில் ராஜபாளையம் மில்லுக்கு போகக் கூடிய பருத்தி முழுதுமே எங்கள் பருத்திதான். பருத்தியின் கோட்டையாக விளங்கும் பகுதி என்பதால் பருத்திக் கோட்டை நாட்டார் தேவேந்திர குல வேளாளர் சங்கம் என்று பெயர் வந்தது.

பண அரசியலுக்கு மத்தியில் தேர்தல் புறக்கணிப்புக்கு மக்களை எப்படி தயார் படுத்தினீர்கள்?

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு வந்ததுமே எங்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் போட்டுப் பேசினோம். எங்கள் சங்கத்துக்கு பாத்தியப்பட்ட 138 கிராமங்களில் சுமார் 70 கிராமங்கள் நாங்குநேரி தொகுதிக்குள்ளேயே இருக்கிறது. கடம்பங்குளத்தில் கூட்டம் போட்டு அனைத்து கிராம சங்க பிரதிநிதிகளையும் வரவழைத்துப் பேசினோம். இது அனைத்து தேவேந்திர மக்களின் கோரிக்கை. இந்தக் கோரிக்கையை அரசுக்கு எடுத்துச் செல்ல வலிமையான ஒரு வழியாக கிடைத்திருப்பது இந்த இடைத்தேர்தல். தொடர்ந்து இரு ஆட்சியாளர்களும் நம்மை ஒரு வாக்கு வங்கியாகத்தான் பயன்படுத்தி வந்துள்ளார்கள். அவர்களுக்கு நம் பலம் என்ன என்பதைக் காட்ட வேண்டும். அதற்காக தேர்தல் புறக்கணிப்பு செய்யலாமா என்று ஆலோசித்து, தேர்தல் புறக்கணிப்பு செய்யலாம் என்று தீர்மானம் போட்டோம்.

26-9-19 ஆம் தேதியன்று இரவே எங்கள் இளைஞர்கள் மூலம் 69 கிராமங்களிலும் தேர்தல் புறக்கணிப்பை அறிவிக்கும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. ஒவ்வொரு கிராமத்திலும் ஊர்க்கூட்டம் போட்டோம். அனைவருக்கும் தேவேந்திர குல வேளாளர் அரசாணையின் முக்கியத்துவம் பற்றி விளக்கினோம். எங்கள் பருத்திக் கோட்டை நாட்டார் சங்கத்துக்கு அப்பாற்பட்ட தேவேந்திர கிராமங்களும் நாங்குநேரியில் இருக்கின்றன. அவர்களிடமும் பேசினோம்.

எப்போதுமே நாங்குநேரி ஒரு சென்சிட்டிவ் தொகுதி. இப்படிப்பட்ட மண்ணிலே கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக எந்த ஒரு சிறு வன்முறையும் இல்லாமல் சலசலப்புகள் சில ஏற்பட்டால் கூட அதை சங்க நிர்வாகிகள் மூலம் பேசி முடித்தோம். எங்களுக்கு காவல்துறையினர் கூட முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

பண விஷயம் பற்றிக் கேட்டீர்கள். ஒவ்வொரு கிராமத்திலும் பத்து பேர் கொண்ட இளைஞர் குழுவை அமைத்தோம். அவர்கள் மக்களிடம் தினமும் பேசினார்கள். எல்லாவற்றையும் விட எங்கள் மக்களுக்கு இந்த உணர்வு உள்ளுக்குள் இருக்கிறது. அதை நாங்கள் வெளிக்கொண்டு வந்திருக்கிறோம் அவ்வளவுதான். எந்த மக்களும் சரி, தேர்தலுக்காக அரசியல்வாதிகளிடம் பணம் கேட்டதில்லை. அரசியல்வாதிகள்தான் பணத்தை மக்களிடம் கொண்டுவந்து திணிக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான இடங்களில் நாங்கள் மக்களைத் தயார் படுத்தியதால் அவர்கள் வாங்கவில்லை. ஒரு சில இடங்களில் வாங்கியிருக்கிறார்கள் என்றால், எங்கள் உறவினர்களே சில அரசியல் கட்சிகளில் இருக்கிறார்கள். அவர்களிடம் கொடுத்து கொடுக்கச் சொல்லி நிர்பந்தப்படுத்தினார்கள். அதனால் சில இடங்களில் வாங்கியிருக்கலாம். ஆனால் நிறைய கிராமங்களில் பணம் கொண்டுவந்தவர்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள்.

உங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திமுக, அதிமுக போன்ற கட்சிகளிலும் உறுப்பினர்களாக இருக்கலாம், இருக்கிறார்கள். அவர்களை எப்படி எதிர்கொண்டீர்கள்?

எல்லாருக்குமே இது உணர்வு. எனக்கு இப்போது 42 வயது ஆகிறது என்றால் நான் ஒரு கட்சியில் 25 வயது முதல் இருக்கலாம். ஆனால் நான் அதற்கும் இருபத்தைந்து ஆண்டுகள் முன்பே இந்த சமூகத்தில் பிறந்து வளர்ந்திருக்கிறேன். எனவே முதன்மையான முக்கியத்துவத்தை சமுதயாத்துக்குக் கொடுக்கிறேன். இதற்குப் பெயர் வெறி அல்ல. என் வரலாற்றை நான் அறிந்துகொள்ளும் முயற்சி. இதைத்தான் கட்சியில் இருக்கும் எங்கள் சகோதர்களுக்கும் சொன்னேன். அவர்களும் அதை ஏற்றுக் கொண்டார்கள். அதனால்தான் நாங்கள் எங்கள் சமுதாயம் சார்ந்த அரசியல்வாதிகள் உட்பட எந்த அரசியல்வாதியையும் நாடாமல் சங்கத்தின் மூலம் மட்டுமே மக்கள் மூலம் மட்டுமே இதை முன்னெடுக்க முனைந்தோம்.

மக்களுடைய நிலைப்பாடுக்காகத்தான் கட்சி நடத்த முடியும். இன்றில்லாவிட்டாலும் எந்த கட்சியும் மக்களுடைய நிலைப்பாட்டுக்கு வந்துதான் ஆக வேண்டும். எங்கள் சங்கத்தில் புதிய தமிழகம் நிர்வாகிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் கட்சித் தலைமையிடம் மக்களின் நிலைப்பாட்டை எடுத்துச் சொல்லி வற்புறுத்தியிருக்கிறார்கள்.

உங்கள் வாக்குகளைப் பெறாமலேயே ஒரு மக்கள் பிரதிநிதி நாங்குநேரிக்கு வர இருக்கிறார். இது உங்களுக்கு நன்மை பயக்கும் என்று கருதுகிறீர்களா?

16 கிராமங்களில் ஒற்றை இலக்கத்தில்தான் வாக்குப் பதிவாகியுள்ளது. 12 கிராம வாக்குச் சாவடிகளில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. பொது வாக்குச் சாவடியாக இருப்பதால் சில மற்ற சமூகத்தினர் அந்த வாக்குச் சாவடிகளில் வாக்கு செலுத்தியிருக்கிறார்கள். அதனால்தான் சில கிராமங்களில் குறைந்த வாக்குகள் பதிவாகின.

எங்கள் வாக்குகளைப் பெறாமல் இருந்த கட்சிக்கு இந்த மக்களின் வாக்குகளைப் பெற்றிருந்தால் நாம் ஜெயித்திருக்கலாமோ என்று வலித்திருக்கும். அரசு என்றாலும் அது ஆளுங்கட்சிதான். இந்த அரசு, இந்த ஆட்சி என்றல்ல தமிழகத்தை ஆண்ட முக்கியமான இரு அரசுகளுமே எங்களைப் புறக்கணித்திருக்கிறார்கள். அவர்கள் இருவருக்குமே எங்கள் வாக்கின் வலிமையை நாங்கள் காட்டியிருக்கிறோம். இந்தத் தேர்தலில் இருந்து, ஒரு பிரியாணிக்கும் சில ஆயிரங்களுக்கும் அடிபணியக் கூடியவர்கள் நாங்கள் அல்லர் என்பதை நிரூபித்திருக்கிறோம். எனவே இது அவர்களுக்குதான் பின்னடைவே தவிர எங்களுக்கு அல்ல.

நாங்குநேரியோடு தேர்தல் புறக்கணிப்பு நின்றுவிடுமா.. அல்லது பிற பகுதிகளுக்கும் விரிவடையுமா?

வரக் கூடிய காலங்களில் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி மட்டுமல்ல, மற்ற எல்லா பகுதிகளிலும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் வரக் கூடிய பொதுத் தேர்தலில் இந்த எதிர்ப்பை ஒருங்கிணைப்போம். இதில் எந்த அரசியலையும் அனுமதிக்கமாட்டோம். தமிழ்நாடு முழுதும் கலந்து பேசிக் கொண்டிருக்கிறோம். எங்களின் கோரிக்கைகள் அரசால் நிறைவேற்றப்படவில்லையென்றால் அடுத்து உள்ளாட்சித் தேர்தலிலும் இது நிச்சயம் எதிரொலிக்கும்” என்று முடித்தார் பாலசுப்பிரமணியன்.

-ஆரா

புதன், 23 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon