மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 10 ஆக 2020

எப்போது பட்டாசு வெடிக்கலாம்?

எப்போது பட்டாசு வெடிக்கலாம்?

தீபாவளி அன்று பட்டாசுகளை வெடிக்கத் தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

தீபாவளி அன்று அதிகளவு பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசடைகிறது என இயற்கை ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். பட்டாசைத் தடை செய்ய வேண்டும் என்றும் வழக்குகள் தொடரப்பட்டன, இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், தீபாவளி நாளில் காலை ஒரு மணி நேரம் மாலை ஒரு மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கி கடந்த ஆண்டு தீர்ப்பு அளித்தது.

இதற்கு எதிராக மேல்முறையீடு செய்த தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 2 மணி நேரம் தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது உறுதி செய்யப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிப்பவர்களைக் கண்காணிக்கவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி இரண்டு மணி நேரத்தையும் தாண்டி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த ஆண்டு வரும் 27ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில், இன்று (அக்டோபர் 23) நேர கட்டுப்பாட்டைத் தமிழக அரசு விதித்துள்ளது.

காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என்று கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும் பாதுகாப்பாகப் பட்டாசு வெடிப்பது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வாயிலாக மக்களுக்குத் தமிழக அரசு அறிவுரை வழங்கியிருக்கிறது.

அதில், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், திறந்தவெளியில் ஒன்று கூடி பொதுமக்கள் பட்டாசு வெடிக்கலாம். அதிகளவு ஒலி எழுப்பும் பட்டாசுகளையும், தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய பட்டாசுகளையும் தவிர்க்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளது,

மருத்துவமனைகள், நீதிமன்றங்கள், வழிபாட்டுத்தலங்கள், குடிசை பகுதிகள், ஆகிய இடங்களில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. குழந்தைகளைத் தனியாகப் பட்டாசு வெடிக்க அனுமதிக்கக் கூடாது. பட்டாசு வெடிக்கும் முன் பாத்திரங்களில் தண்ணீர் மற்றும் மணல் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இரண்டு மணி நேரமே பட்டாசு வெடிக்க முடியும் போன்ற அரசின் விதிமுறைகள் சிறுவர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதன், 23 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon