மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 10 ஆக 2020

கமலேஷ் திவாரி கொலை: பிரேத பரிசோதனை அறிக்கை!

கமலேஷ் திவாரி கொலை:  பிரேத பரிசோதனை அறிக்கை!

லக்னோவில் கடந்த வெள்ளிக்கிழமை கொல்லப்பட்ட இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் திவாரியின் பிரதேச பரிசோதனை அறிக்கையில் 15 முறை கத்தியால் குத்தப்பட்டு, தலையில் சுடப்பட்டிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 18ஆம் தேதி லக்னோவில் உள்ள இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் திவாரியின் வீட்டில் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் தீபாவளியை முன்னிட்டு இனிப்பு வழங்க வந்ததாகக் கூறி, அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பியோடினர். குண்டடி பட்டு ரத்தவெள்ளத்தில் விழுந்த கமலேஷ் திவாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த வழக்கில் தொடர்புடைய, அஷ்பக் உசேன் (34), மொயூதீன் பதான் (27) ஆகிய இரு முக்கிய குற்றவாளிகள் நேற்று(அக்டோபர் 22) குஜராத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சூரத்தைச் சேர்ந்த இவ்விருவரையும் குஜராத் பயங்கரவாத தடுப்புப் படை கைது செய்தது. கடந்த காலங்களில், நபிகள் நாயகத்திற்கு எதிராக கமலேஷ் திவாரி பேசியதற்காக அவரை கொன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கமலேஷ் திவாரி வீட்டிற்கு எடுத்துச் சென்ற இனிப்பு பெட்டியில் இருந்த முகவரியை வைத்து, அதன் பின்னணியில் இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், கொலைக்கு ஒரு நாள் முன்னதாக லக்னோ ஹோட்டலில் உண்மையான பெயர்கள் மற்றும் முகவரிகளின் கீழ், கொலையாளிகள் பதிவு செய்து தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. கொலை செய்து முடித்த பின் மீண்டும் ஹோட்டலுக்கு சென்று உடைகளை மாற்றி விட்டு கொலையாளிகள் சூரத்துக்கு சென்றதாக கூறப்படுகிறது. மேலும் இக்குற்றத்தில் ஈடுபட்டதற்காக 6 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று வெளியான அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில், கமலேஷ் திவாரி மீது கொலை தாக்குதல் நடத்தியவர்கள், 15 முறை அவரை கத்தியால் குத்தி, முகத்தில் சுட்டுக் கொன்றதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கமலேஷ் திவாரியின் மண்டை ஓட்டின் பின்புறத்தில் புல்லட்டும், கழுத்தில் 2 ஆழமான காயங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

கொல்லப்பட்ட இந்து தலைவர் கமலேஷ் திவாரி குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்குவதாகவும், சீதாபூர் மாவட்டத்தில் உள்ள மெஹ்முதாபாத் வட்டத்தில் அவரது குடும்பத்திற்காக ஒரு வீடும் வழங்கப்படவுள்ளதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று அறிவித்துள்ளார்.

புதன், 23 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon