மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 10 ஆக 2020

சோனியா சந்திப்பு: காங்கிரஸ் தலைவருக்கு ஜாமீன்!

சோனியா சந்திப்பு: காங்கிரஸ் தலைவருக்கு ஜாமீன்!

அமலாக்கத் துறை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

கர்நாடக காங்கிரஸின் முக்கிய தலைவரும், அம்மாநில முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவக்குமார், பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட டி.கே.சிவக்குமாருக்கு 9 நாட்கள் அமலாக்கத் துறை காவல் விதிக்கப்பட்டது. பின்னர், நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே ஜாமீன் வழங்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் டி.கே.சிவக்குமார் மனுதாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் கைட், சிவக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி இன்று (அக்டோபர் 23) உத்தரவிட்டார். இரு நபர் உத்தரவாதம், ரூ.25 லட்சம் மதிப்புள்ள ஜாமீன் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும், வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது போன்ற நிபந்தனைகளும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளன.

இவ்வழக்கில் சிவக்குமார் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று குறிப்பிட்ட நீதிபதி, “சிவக்குமார் ஆதாரங்களை சிதைக்க முடியாது. ஏனெனில் அவை புலனாய்வு அமைப்புகளிடம் உள்ளன” எனவும் கருத்து தெரிவித்தார்.

முன்னதாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சிவக்குமாரை இன்று காலை காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, மூத்த தலைவர் அம்பிகா சோனி ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது, சிவக்குமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ்குமாரும் உடனிருந்தார். இதுதொடர்பாக சுரேஷ்குமார் கூறுகையில், “சிவக்குமாருக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி உறுதுணையாக இருக்கும் என சோனியா காந்தி தெரிவித்தார். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் மற்ற காங்கிரஸ் தலைவர்களும் பாஜக அரசால் குறிவைக்கப்படுவதாகவும் அதனை எதிர்த்து உறுதியாக போராட வேண்டும் எனவும் சோனியா தெரிவித்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜாமீன் கிடைத்துள்ள நிலையில் இன்று இரவு திகார் சிறையிலிருந்து சிவக்குமார் வெளிவருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதன், 23 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon