மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 10 ஆக 2020

தேச விரோத குற்ற பட்டியல்!

தேச விரோத குற்ற பட்டியல்!

உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்றப் பதிவு பணியகம் (என்.சி.ஆர்.பி) குற்றச் செயல்கள் தொடர்பான அறிக்கையை நேற்று முன்தினம் (அக்டோபர் 20) வெளியிட்டது. கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களில் இந்தியாவிலேயே உத்தரப் பிரதேசம் முதல் இடத்திலும் தமிழகம் ஆறாவது இடத்திலும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தேச விரோத குற்றங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்தியத் தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் சிறப்பு உள்ளூர் சட்டங்கள் (எஸ்.எல்.எல்) ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் 1450 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று என்.சி.ஆர்.பி. தெரிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டில் ஐபிசி மற்றும் எஸ்.எல்.எல் இன் கீழ் பதியப்பட்ட மொத்த குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை 50 லட்சமாக உள்ளது. இதில் "தேசிய விரோத சக்திகளால்" நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் 0.02% ஆகும்.

”முன்னதாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேச விரோத சக்திகளால் செய்யப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை மற்றும் வகையான குற்றங்கள் குறித்து யாரும் அறிந்திருக்க முடியாது. எனவே, குற்றவியல் புள்ளி விவரங்களைச் சேகரிப்பதற்கான என்.சி.ஆர்.பி, அதன் விவரங்களை திருத்தியபோது, தேச விரோத குற்றங்கள் வகை படுத்தப்பட்டன” என்று என்.சி.ஆர்.பி யின் முன்னாள் இயக்குநர் டாக்டர் இஷ்குமார் கூறினார். நாட்டில் குற்றத் தகவல்கள் வெளியிட தொடங்கிய பின்னர் முதல்முறையாக, என்.சி.ஆர்.பி தேச விரோத குற்றங்கள் குறித்த விவரங்களை தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படிஇந்த குற்றங்கள் மூன்று வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. வடகிழக்கு கிளர்ச்சியாளர்கள்; நக்சலைட்டுகள் / இடது சாரி தீவிரவாதிகள் (எல்.டபிள்யூ.இ); மற்றும் பயங்கரவாதிகள் (ஜிஹாதி பயங்கரவாதிகள் உட்பட) என மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த மூன்று பிரிவுகளிலும் முறையே 421, 652 மற்றும் 377 என மொத்தம் 1450 குற்றங்கள் பதிவாகியுள்ளன என்று என்.சி.ஆர்.பி தெரிவித்துள்ளது. இதில் 24 வழக்குகள் ஐபிசியின் 121, 121 ஏ, 123 மற்றும் 124 ஏ பிரிவுகளின் கீழ் இருந்தன, தகவல் தொழில்நுட்ப சட்டம் / சைபர் பயங்கரவாதம், 2000 இன் கீழ் தேச விரோத வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

பயங்கரவாதிகள் (ஜிஹாதி பயங்கரவாதிகள் உட்பட) செய்த 377 குற்றங்களில் 169 ஜம்மு காஷ்மீரிலிருந்தும், 199 குற்றங்கள் மணிப்பூரிலிருந்தும் பதிவாகியுள்ளன என்று என்.சி.ஆர்.பி.தெரிவித்துள்ளது.

அனைத்து மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் காட்டிலும் மணிப்பூரில் வடகிழக்கு கிளர்ச்சியாளர்கள் மற்றும் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகளவு உள்ளது. சத்தீஸ்கரில் இடதுசாரி தீவிரவாத தாக்குதல் அதிகமாக உள்ளது. இங்கு 492 வழக்குகள் பதிவாகியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர தேச விரோத தாக்குதல்களில் 2017ல், 269 பொதுமக்கள் மற்றும் போலீஸ் / அரசு / ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே ஆண்டில் 271 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 1285 பேர் சரணடைந்தனர். தேச விரோத தாக்குதல்கள் 50 சதவிகிதம் காவல் நிலையங்கள் மீது நடத்தப்பட்டிருப்பதாகவும் என்.சி.ஆர்.பி.அறிக்கை தெரிவிக்கிறது.

1154 கைத்துப்பாக்கிகள், 66 ஏ.கே 47/56/74/87 வகை துப்பாக்கிகள் மற்றும் மூன்று லைட் மெஷின் துப்பாக்கிகள் என மொத்தம் 1845 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 23 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon