மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 10 ஆக 2020

ராதாபுரம் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் என்ன நடந்தது?

ராதாபுரம் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில்  என்ன நடந்தது?

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக் காலத் தடை அக்டோபர் 23 ஆம் தேதியான இன்றோடு முடிகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்த்து தமிழ்நாட்டு அரசியல் வட்டாரங்கள் காத்திருந்தன. ஆனால் வழக்கு இன்று பிற்பகல் வரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

ராதாபுரம் சட்டமன்ற தொகுதியின் மறு வாக்கு எண்ணிக்கை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் அக்டோபர் 4 ஆம் தேதி நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட கண்காணிப்பு அதிகாரி முன்னிலையில் நடைபெற்று முடிந்தது.

ஆனால் ராதாபுரம் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ. இன்பதுரை உச்ச நீதிமன்றத்தில் அவசரமாக மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரி வழக்குத் தொடர்ந்தார்.

மறுவாக்கு எண்ணிக்கை நடந்த அக்டோபர் 4 ஆம் தேதியன்றே இன்பதுரை தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ரவீந்திரபட் அமர்வு,மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க மறுத்தனர். ஆனால் முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து வழக்கை அக்டோபர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இன்று வழக்கு விசாரணைக்கு வருகிறது என்ற எதிர்பார்ப்பில் அப்பாவு, இன்பதுரை ஆகியோரும் இரு தரப்பு வழக்கறிஞர்களும் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றனர்.

ஆனால் இந்த வழக்கை அக்டோபர் 4 ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ரவீந்திர பட் ஆகியோர் நில கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருக்கிறார்கள். முக்கியமான அந்த வழக்கின் விசாரணை இன்று பிற்பகல் 2 மணி முதல் தொடங்கியிருக்கிறது. இந்த வழக்கிலிருந்து அருண் மிஸ்ரா விலக வேண்டும் என்று விவசாய சங்கத்தின் வேண்டுகோளையும் நிராகரித்த அருண் மிஸ்ரா இவ்வழக்கில் இருந்து விலக மறுத்துவிட்டார். இரு நீதிபதிகளும் அந்த வழக்கில் கவனம் செலுத்துகின்றனர்.

எனவே ராதாபுரம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அப்பாவு தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மென்ஷன் செய்யத் தயாராகிறது. அதேநேரம் அதிமுக தரப்போ வழக்கு விசாரணையை தாமதப்படுத்திட அனைத்து சட்ட ரீதியான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

ராதாபுரம்: மறுவாக்கு எண்ணிக்கை முடிவு- சிரிப்பவர் யார்?

புதன், 23 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon