மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 21 ஜன 2021

இன்போசிஸ் நிதி முறைகேடு: வர்த்தகம் சரிவு!

இன்போசிஸ் நிதி முறைகேடு: வர்த்தகம் சரிவு!வெற்றிநடை போடும் தமிழகம்

இன்போசிஸ் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு எதிரான ‘விசில்ப்ளோவர்’ புகார்களுக்குப் பிறகு, இன்போசிஸ் பங்குகள் 16 சதவீதம் சரிந்துள்ளது.

இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸின் தலைமை நிர்வாக அதிகாரி சலீல் பரேக் மற்றும் தலைமை நிதி அதிகாரி நிலஞ்சன் ராய் ஆகியோரின் மீது பெயரை வெளிப்படுத்த விரும்பாத இன்ஃபோசிஸ் ஊழியர்கள் சிலர் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

இக்குற்றச்சாட்டை தொடர்ந்து, இன்போசிஸ் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்ற மாதம் இன்போசிஸின் தலைமை நிர்வாக அதிகாரி சலீல் பரேக்கின் நெறிமுறையற்ற நடைமுறை தொடர்பாக ஊழியர்கள் அளித்துள்ள புகாரைத் தொடர்ந்து அதன் பங்குகள் ஆட்டம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இன்று காலை முதல், இன்போசிஸ் பங்குகள் 16 சதவீத அளவிற்கு சரிந்துள்ளது. இது கடந்த ஆறு வருடங்களைக் காட்டிலும் மிக மோசமான சரிவாக கருதப்படுகிறது.

350 கோடி அளவிற்கு நடந்துள்ள முறைகேடுகள்!

பெயர் வெளியிட விரும்பாத இன்ஃபோசிஸ் ஊழியர்கள்(விசில்பிளோவர்), குறைந்த கால வருவாய்க்காகவும், தங்கள் சுய லாபத்திற்காகவும் அலுவலக விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்ட தலைமை அதிகாரிகள் மீதே சுமத்திய குற்றம் அதிர்ச்சியளித்திருக்கிறது.

தலைமை நிர்வாக அதிகாரி சலீல் பரேக் மற்றும் தலைமை நிதி அதிகாரி நிலஞ்சன் ராய்

கடந்த காலாண்டில், இன்போசிஸ் நிறுவனத்தின் விசா கட்டணச் செலவுகள் போன்ற பல செலவுகளை, முழுமையாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக விசா கட்டணத்துக்கு செய்த செலவு தொகையைக் காட்டிலும், மிக குறைந்த ரூபாயை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்வது போல கணக்கு காட்டப்பட்டிருக்கிறது. இவ்வாறு செலவுகளைக் குறைப்பது போல கணக்குகள் காண்பிக்கப்பட்டு, லாபம் அதிகரித்திருப்பது போல பிம்பத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. குறிப்பாக, இன்போசிஸ் ஆடிட்டர்களுக்கு தெரியாமலிருக்க ஊழியர்களுக்கு பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாக புகாரில் கூறப்பட்டிருக்கிறது.

தலைமை அதிகாரிகள் மீதான இரு பக்க புகார் கடிதங்கள்

இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு எஃப்டிஆர் போன்ற ஒப்பந்தங்கள் (ஹெல்த்கேர் போன்றவை அடங்கிய) மூலமாக 50 மில்லியன் டாலர் (சுமார் 350 கோடி ரூபாய்) பணம் வந்திருக்கிறது. ஆனால் சில பல காரணங்களுக்காக, வந்த 50 மில்லியன் டாலரை மீண்டும் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். ஆக, இப்போது இன்போசிஸ் நிறுவனத்துக்கு வந்த 50 மில்லியன் கையில் இல்லை. இந்த இடத்தில் தான், 50 மில்லியனை திருப்பிக் கொடுத்ததை கணக்கில் கொண்டு வர வேண்டாம் என மேலிடத்தில் இருந்து அழுத்தம் கொடுத்ததாக புகார் சொல்கிறார்கள் அந்த விசில்பிளோவர்கள்.

இது தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட சலீல் பரேக்கை செய்தியாளர்கள் தொடர்பு கொண்ட போது இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். இந்தியாவின் மென்பொருள் நிறுவனத் துறையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இன்போசிஸ் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு, ஒரு களங்கமாகவே பார்க்கப்படுகிறது.

பங்கு வர்த்தகத்தில் எதிரொலி

இன்றைய பங்கு நிலவரத்திலும் இன்போசிஸ் மீதான குற்றச்சாட்டுகள் எதிரொலித்திருக்கின்றன.

இன்போசிஸின் பங்கு விலை என்எஸ்இ(NSE)-ல் ஒரு பங்குக்கு 10 சதவீதம் குறைந்து ரூ .691.10 ஆக திறக்கப்பட்டது. இன்ட்ராடே, பங்கு 15.99 சதவீதம் வரை சரிந்து ஒரு பங்கிற்கு ரூ .645 ஆக இருந்தது. காலை 11.27 மணிக்கு, இன்போசிஸ் பங்குகள் 14.66 சதவீதம் குறைந்து ரூ .655.30 ஆக வர்த்தகம் செய்யப்பட்டன, இது நிஃப்டி 50 இல் 0.15 சதவீதம் சரிந்து 11,643.80 ஆக இருந்தது.

இது குறித்து வர்த்தக அமைப்பான Credit Suisse கூறும் போது, குற்றச்சாட்டுகளின் தன்மை தீவிரமானது என்றும், நிரூபிக்கப்பட்டால், இது உயர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வழிவகுக்கும் என்றும் கூறினார்.

விசில்ப்ளோவர் குற்றச்சாட்டுகள் குறித்து இன்போசிஸ் தலைவர் நந்தன் நிலேகனி வெளியிட்டுள்ள அறிக்கையில், குற்றச்சாட்டுகள் முழுமையாக விசாரிக்கப்படுவதை இன்போசிஸ் நிறுவனம் உறுதி செய்யும் என்று கூறினார்.

செவ்வாய், 22 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon