மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 21 ஜன 2021

சிறையில் சசிகலா தந்த நன்கொடை!

சிறையில் சசிகலா தந்த நன்கொடை!வெற்றிநடை போடும் தமிழகம்

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் வானொலி பண்பலை ஒலிபரப்பை துவக்க இருக்கிறது கர்நாடக சிறைத் துறை நிர்வாகம்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டரை வருடங்களில் இரண்டு முறை மட்டுமே சசிகலா பரோலில் வந்துள்ளார். அவரை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கர்நாடகா உருவான நவம்பர் 1ஆம் தேதியை முன்னிட்டு நன்னடத்தையை காரணம் காட்டி 141 கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர். இதனால் சசிகலாவும் விடுதலையாவாரா என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், “பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது. தண்டனை காலம் முழுவதும் அனுபவித்த பிறகே சசிகலா விடுதலை ஆவார்” என்று கர்நாடக சிறைத் துறை இயக்குநர் என்.எஸ். மெகரிக் தெரிவித்துவிட்டார்.

இந்த நிலையில் சிறையில் வானொலி ஒலிபரப்புவதற்காக நன்கொடை அளித்திருக்கிறார் சசிகலா. இதுதொடர்பாக சிறைத் துறை வட்டாரங்களில் விசாரித்தோம்...

“பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளவர்களின் வசதிக்காக வானொலி துவங்க முடிவுசெய்யப்பட்டது. வானொலி இரண்டு வகைகளாக உள்ளது. ஒன்று சமுதாய வானொலி, மற்றொன்று கமர்ஷியல் வானொலி. சமுதாய வானொலிக்குக் கட்டணம் ஏதும் இல்லை. அதில் விளம்பரம் செய்யக்கூடாது எனப் பலக் கட்டுப்பாடுகள் உள்ளது. இந்த நிலையில் பெங்களூர் சிறையில் சமுதாய வானொலியை ஒலிபரப்பு செய்வதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.

அதற்கு 10*10 அடி அறையும், நூறு அடியில் டவரும் அமைக்கப்பட வேண்டும். இதன்மூலம் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரையில் வானொலி பண்பலையைத் தடையில்லாமல் ஒலிபரப்பு செய்யலாம். பண்பலை ஒலிபரப்புகள் அனைத்தும் முழுக்க முழுக்க விழிப்புணர்வு சம்பந்தப்பட்டதாகவே இருக்கும். சிறையில் உள்ள தண்டனை கைதிகள் மற்றும் சிறை ஊழியர்களை வைத்தே இந்த பண்பலை நிர்வாகத்தை வழிநடத்தவுள்ளனர்” என்று விவரித்தனர்.

மேலும், இந்த பண்பலை ஒலிபரப்புக்கு தொழில்நுட்பக் கருவிகள் வாங்குவதற்கு சுமார் 15 லட்சம் ரூபாய் செலவாகும். இதுவரையிலான செலவு ரூ.15 லட்சத்தைத் தாண்டிவிட்டது. இதற்காக சிறையில் உள்ள முக்கிய கைதிகளிடம் சிறை நிர்வாகம் நன்கொடை கேட்டிருக்கிறது. அந்த வகையில் சசிகலாவிடமும் நன்கொடை கேட்கப்பட்டது. அவர்கள் திருப்திப்படும்படியான நன்கொடையை சசிகலாவும் அளித்துள்ளார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

செவ்வாய், 22 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon