மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 6 ஆக 2020

சிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமீன்: தொடரும் விசாரணை!

சிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமீன்: தொடரும் விசாரணை!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான சிபிஐ வழக்கில் சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு சிபிஐ சிறப்பு நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட நிலையில், இறுதி வாய்ப்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகினார் சிதம்பரம். இவ்வழக்கை நீதிபதிகள் பானுமதி, போபண்ணா, ஹிருத்திகேஷ் ராய் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

சிதம்பரம் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதாகவும், சாட்சிகளை கலைத்துவிடுவார் என்றும் ஜாமீன் மனுவுக்கு சிபிஐ தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், சிறையில் சிதம்பரம் 4 கிலோ வரை எடை குறைந்துவிட்டதாகவும், அவர் வெளிநாடு தப்பிச் செல்வதற்கு வாய்ப்பில்லை என்றும் சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதத்தினை முன்வைத்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

நிபந்தனை ஜாமீன்

இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 22) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பு கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். இரு நபர் உத்தரவாதம் மற்றும் ரூ.1 லட்சம் மதிப்புள்ள தனிநபர் பத்திரம் ஆகியவற்றை தாக்கல் செய்ய வேண்டுமென அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணைக்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், ஜாமீனால் சிதம்பரத்திற்கு எதிரான பிற நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதையும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

இருப்பினும், அமலாக்கத் துறையின் கஸ்டடியில் சிதம்பரம் விசாரணைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதால், அவரால் ஜாமீனில் வெளிவர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ஜாமீன் கிடைத்தும் விடுதலையில்லை

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில், சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாகக் கூறி அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி இரவு சிபிஐ அதிகாரிகளால் ப.சிதம்பரம் டெல்லியிலுள்ள அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டார். 14 நாட்கள் சிபிஐ கஸ்டடியில் இருந்த அவர், அதன்பிறகு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சிதம்பரத்தின் மீது சிபிஐ அதிகாரிகள் கடந்த 18ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இதற்கிடையே, திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிதம்பரத்திடம் கடந்த 16ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக விசாரித்த அமலாக்கத் துறை அதிகாரிகள், அவரை கைது செய்தனர். அவருக்கு வரும் 24ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவல் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தும் வெளிவர முடியாத சூழல் சிதம்பரத்திற்கு ஏற்பட்டுள்ளது. அமலாக்கத் துறை வழக்கிலும் அவர் ஜாமீன் பெற்றால் மட்டுமே வெளியே வருவதற்கு வாய்ப்புள்ளது.

செவ்வாய், 22 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon