மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 6 ஆக 2020

அடையாளம் தருமா ஆதித்யா வர்மா

அடையாளம் தருமா ஆதித்யா வர்மா

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள ‘ஆதித்யா வர்மா’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.

பாலா இயக்கத்தில், நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்து வர்மா திரைப்படம் உருவானது. தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து மாபெரும் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்காக உருவான அந்தப் படம் சில காரணங்களால் கைவிடப்பட்டது. பின்னர் கிரிசயா இயக்கத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்க ‘ஆதித்ய வர்மா’ என்ற பெயரில் மீண்டும் எடுக்கப்பட்டது. ஈ4 எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் அதிகாரப் பூர்வ ட்ரெயிலர் இன்று(அக்டோபர் 22) வெளியாகியுள்ளது.

சில நாட்களுக்கு முன்னதாக இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. துருவ் விக்ரம் இந்த படத்திற்காகப் பாடிய ‘எதற்கடி வலி தந்தாய்’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்தப் படம் குறித்து சில நாட்களுக்கு முன்னதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட துருவ் விக்ரம் “ஆதித்யா வர்மா அழகான விஷயமாக உள்ளது. இது போல் என் வாழ்வில் எப்போதும் நிகழ்ந்ததில்லை. அவன்தான் எனக்கு வாழ்க்கைப் பற்றிய அர்த்தத்தை, காரணத்தை, என்னைப் பற்றிய தெளிவை, மிக முக்கியமாக எப்படி விட்டுக்கொடுக்காமல் போராடவேண்டும் என்பதைக் கற்றுத் தந்தான்” என்று கூறியிருந்தார்.

தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி திரைப்படம் பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு உள்ளானது. ஆணாதிக்க மனநிலையை அதிகம் பிரதிபலிக்கும் விதத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பெண்கள் மீதான வன்முறையைத் தூண்டும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இந்தியில் ஷாகித் கபூர் கதாநாயகனாக நடித்து கபீர் சிங் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட படத்தின் தாக்கத்தால் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அஸ்வானி குமார் என்ற டிக் டாக் பிரபலம், தான் விரும்பிய பெண்ணைக் கொலை செய்து விட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இத்தகைய சம்பவங்கள் படத்திற்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதே கதை அம்சத்தோடு எடுக்கப்பட்டிருக்கும் ‘ஆதித்ய வர்மா’ எத்தகைய வெற்றியைப் பெறப் போகிறது, விமர்சனத்திற்கு உள்ளாகுமா, தமிழக ரசிகர்கள் இந்தப் படத்தை ஏற்றுக்கொள்வார்களா, அறிமுக நாயகன் துருவ் விக்ரமிற்கு ஆதித்ய வர்மா, அடையாளத்தை ஏற்படுத்தித் தருமா என்பதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தப் படத்தில் துருவிற்கு ஜோடியாக பனித்தா சந்து அறிமுகமாகிறார். பிரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

ஆதித்யா வர்மா திரைப்படம் நவம்பர் மாதம் 8ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

ஆதித்யா வர்மா ட்ரெயிலர்

செவ்வாய், 22 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon