மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 6 ஆக 2020

ஏழு பேருக்காக ஆளுநரை வற்புறுத்த முடியாது: அமைச்சர்!

ஏழு பேருக்காக ஆளுநரை வற்புறுத்த முடியாது: அமைச்சர்!

ஏழு பேர் விடுதலை விவகாரம் தொடர்பான கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டு 27 வருடங்களுக்கு மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநரே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து, ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அமைச்சரவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்மானம் இயற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஒரு வருடமாக ஆளுநர் தரப்பிலிருந்து இதற்கு எந்த பதிலும் வரவில்லை.

இந்த சூழலில் ஏழு பேரின் விடுதலைக்கு ஆளுநர் எதிர்ப்பு தெரிவிப்பதாக தி இந்து ஆங்கில நாளேடு கடந்த 18ஆம் தேதி செய்தி வெளியிட்டது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புகொண்டு, 7 பேரின் விடுதலை தொடர்பான அமைச்சரைவை பரிந்துரையை ஏற்க இயலாது என்று அதிகாரப்பூர்வமற்ற முறையில் தெரிவித்துள்ளார் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை தனது முடிவு தொடர்பாக ஆளுநர் தமிழக அரசுக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

எழுவர் விடுதலை தீர்மானத்தை ஆளுநர் நிராகரித்தாரா என்பது தொடர்பாக தமிழக முதல்வர் விளக்கமளிக்க வேண்டுமென ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 22) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம், எழுவர் விடுதலை தீர்மானத்தை ஆளுநர் நிராகரித்துவிட்டாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டுவிட்டது. ஆனால், இதனை மறுத்த அமைச்சர் ஜெயக்குமார், “எழுவர் விடுதலை தொடர்பாக ஆளுநர் மாளிகையில் இருந்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. இந்த விவகாரத்தில் ஆளுநரை தமிழக அரசு வற்புறுத்த முடியாது” என்று பதிலளித்துள்ளார்.

செவ்வாய், 22 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon