மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 6 ஆக 2020

தனியார் ரயில் தாமதம்: பயணிகளுக்கு இழப்பீடு!

தனியார் ரயில் தாமதம்: பயணிகளுக்கு இழப்பீடு!

ஐ.ஆர்.சி.டி.சியால் இயக்கப்படும் தனியார் ரயில் தாமதமாக வந்ததால் அதில் பயணித்த பயணிகளுக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ரயில் சேவையைத் தனியார் மயமாக்கும் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. முதல்கட்டமாகத் தனியார் மூலம் இயக்கப்படும் தேஜஸ் விரைவு ரயில் சேவையை அக்டோபர் 4ஆம் தேதி உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்.

நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட இந்த ரயிலில் பயணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்படுகின்றன. பயணிகளின் உடைமைகளை வீட்டிலிருந்து எடுத்து வந்து மீண்டும் கொண்டு சென்று கொடுப்பது உட்பட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ரயில் தாமதமானால் , ஒரு மணி நேரத்துக்கு ரூ.100ம், இரண்டு மணி நேரத்துக்கு ரூ.250ம் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், கடந்த அக்டோபர் 19ஆம் தேதி லக்னோவிலிருந்து டெல்லிக்குக் காலை 6.10 மணிக்குப் புறப்பட வேண்டிய தேஜஸ் ரயில் 3 மணி நேரம் தாமதமாகக் காலை 9.55 மணிக்கு புறப்பட்டு டெல்லிக்கு மாலை 3.40 மணிக்கு சென்றது. . இந்த தாமதத்துக்கு இழப்பீடாக, அதில் பயணம் செய்த 450 பயணிகளுக்கு, தலா ரூ.250 வழங்கப்பட உள்ளது. அதுபோன்று டெல்லியிலிருந்து லக்னோவுக்கு ஒரு மணி நேரம் தாமதமாகச் சென்றுள்ளது.இதனால் 500 பயணிகளுக்கு ரூ 100 இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரூ.1.62 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரயில் தாமதமானால் இழப்பீடு வழங்கப்படுவது இதுவே முதன்முறை ஆகும்.

செவ்வாய், 22 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon