மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 6 ஆக 2020

தீபாவளி: மதுவிற்பனைக்கு ரூ.360 கோடி இலக்கா?

தீபாவளி: மதுவிற்பனைக்கு ரூ.360 கோடி இலக்கா?

மதுவிலக்குக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து அமைச்சர் தங்கமணி கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு வழக்கமான நாட்களில் ரூ.60 முதல் ரூ.65 கோடி ரூபாய் வருமானம் கிடைத்து வருகிறது.பண்டிகை நாட்களில் இந்த வருமானம் 150 கோடியாக அதிகரித்தும் வருகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில், “தீபாவளிக்கு கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும், பதினைந்து தினங்களுக்கு தேவையான மது வகைகளை மூன்றே நாட்களில் விற்பனை செய்திட முன் கூட்டியே இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அக்டோபர் 25ல் 80 கோடிக்கும் 26ல் ரூ.130 கோடிக்கும், 27ல் (தீபாவளி அன்று) ரூ.175 கோடிக்கும் மதுவை விற்பனை செய்திட டாஸ்மாக் நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

“தட்டுப்பாடின்றி பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கச் செய்வதிலோ, டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுத்து மக்களின் உயிரை காக்கவோ உறுதி காட்டாத அரசு, மது விற்பனையை அதிகரித்து, ரூ.385 கோடிக்கு விற்றே ஆகவேண்டும் என்று உறுதியுடன் செயல்படும் அரசை எத்தகைய அரசு என்று கூறுவது?” என்று கேள்வி எழுப்பியுள்ள முத்தரசன், டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் பண்டிகை நாளிலும் வேலை பார்க்க வேண்டும் என நிர்ப்பந்திப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுபோலவே முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிப்பது எந்த அரசாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. தீபாவளி மது அற்ற தீபாவளியாக கொண்டாடப்பட வேண்டும் என்பது என்னுடைய கருத்து. மது மதியை மயக்கக் கூடியது. ஒருவன் சம்பாதிப்பதை எல்லாம் இழக்கச் செய்யக்கூடியதாக மது உள்ளது” என்று கண்டனம் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,

தீபாவளிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறித்த கேள்விக்கு, “மது கூடாது என்பதுதான் தமிழக அரசின் கொள்கை. அதில் உறுதியாக இருக்கிறோம். இருந்தாலும் ஒரே நாளில் மதுவை ஒழிக்க முடியாது. படிப்படியாகத்தான் அதனை ஒழிக்க முடியும். மதுவினால் ஏற்படும் தீங்குகள் குறித்தும், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறோம். அது மக்களுக்குச் சென்று அவர்கள் விழிப்புணர்வு அடைந்து மதுவே வேண்டாம் என்று சொன்னால் அது விற்பனையாகப் போவதே கிடையாது” என்று பதிலளித்தார்.

மேலும், “உடனடியாக மதுக்கடைகளை மூடிவிட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும். தலைவர்கள் எவ்வளவு சொல்லியும் அப்போதைய முதல்வர் கலைஞர், மதுக்கடைகளை கொண்டுவந்தார். அதன்பிறகு எம்.ஜி.ஆர் அதனையெல்லாம் மூடினார். அதனால், கள்ளச்சாராயம் பெருகியது. அதனை குடித்து பலரும் உயிரிழந்தார்கள். அந்த உயிரிழப்புகளை தடுக்கும் பொருட்டே எம்.ஜி.ஆர் மீண்டும் மதுக்கடைகளை கொண்டுவந்தார்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் மதுரையில் இன்று (அக்டோபர் 22) செய்தியாளர்களிடம் பேசிய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி, “தீபாவளி பண்டிகைக்கு மது விற்பனையில் ரூ.360 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் கூட கண்டனம் தெரிவித்துள்ளார். எந்தவொரு பண்டிகைக்கும் மதுபானக் கடைகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படுவதில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார்.

செவ்வாய், 22 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon