மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 6 ஆக 2020

தமிழகத்தில் அதிகரிக்கும் முதியவர்கள் மீதான தாக்குதல்கள்!

தமிழகத்தில் அதிகரிக்கும் முதியவர்கள் மீதான தாக்குதல்கள்!

2017 ஆம் ஆண்டில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்பாக இந்தியா முழுவதும் மொத்தம் 50,07,044 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் இந்தியத் தண்டனை சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகள் மட்டும் 30, 62,579. யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களின் சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகள் 19,44,465 என்று என்.சி.ஆர்.பி தகவல் தெரிவித்துள்ளது.

2016ல்,தேசிய அளவில் மொத்தம் 48,31,515 வழக்குகள் பதிவாகி இருந்த நிலையில், 2017ல், பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 3.6 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளது. குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் 10.1 சதவிகிதத்துடன் உத்தரப் பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக, டெல்லி, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கேரளம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த 5 இடங்களில் உள்ளன. 5.8 சதவிகிதத்துடன் குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களின் வரிசையில் தமிழகம் ஆறாவது இடத்தில் உள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

2017 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான 3,59,849 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உயர்ந்துள்ளதாகத் தேசிய குற்ற பதிவு பணியகம் (என்.சி.ஆர்.பி) தகவல்கள் தெரிவிக்கின்றன. 2015 ஆம் ஆண்டில், பெண்கள் மீதான குற்றங்களில் 3,29,243 வழக்குகளும், 2016ல் 3,38,954 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன, இந்த எண்ணிக்கை 2017ல் அதிகரித்திருப்பதாக என்.சி.ஆர்.பி தெரிவித்துள்ளது.

கொலை, பாலியல் வன்கொடுமை, வரதட்சணை மரணம், தற்கொலை செய்தல், ஆசிட் தாக்குதல், பெண்களுக்கு எதிரான கொடுமை மற்றும் கடத்தல் ஆகியவற்றின் மீது பதியப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது என்.சி.ஆர்.பி. மூன்றாண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் குற்றச்செயல்கள் தொடர்பான அறிக்கையை என்.சி.ஆர்.பி வெளியிட்டுள்ளது.

இதில் உபியில் அதிகபட்சமாக 56,011 வழக்குகளும், அடுத்ததாக மகாராஷ்டிராவில் 31,979 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. இந்த மாநிலங்களைத் தொடர்ந்து மேற்கு வங்கம்(29,778), மத்தியப் பிரதேசம்(25,993), ராஜஸ்தான்( 25,993) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடத்தில் இருப்பதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

டெல்லியைப் பொறுத்தவரைப் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதன்படி 2015 ல் 17,222 ஆக பதிவாகியிருந்த வழக்குகள், 2016 ல் 15,310 ஆகவும், 2017ல் 13,076 ஆகவும் குறைந்துள்ளது.

கலவர சம்பவங்கள்

2017 ஆம் ஆண்டில் கலவர சம்பவங்கள் தொடர்பாக 58,880 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், இதில் அதிகபட்சமாக பிகாரில் 11,698 வழக்குகளும், உத்தரப் பிரதேசத்தில் 8,990 , மகாராஷ்டிராவில் 7,743 வழக்குகளும் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் முதியவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகம்

முதியவர்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் தமிழகத்தில் அதிகம் இருப்பதாக இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. 2017ல் தமிழகத்தில் 188 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 152 பேரும், உபியில் 127 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் முதியவர்கள் மீதான கொலை முயற்சி தாக்குதலில் தமிழகத்தில் 62 வழக்குகளும், மகாராஷ்டிராவில் 66 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்களிடம் கொள்ளை மற்றும் திருட்டு ஆகிய குற்ற செயல்களில் ஈடுபடுவது குறித்து, தமிழகத்தில் 685 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், இது மகாராஷ்டிராவுக்குப் பிறகு அதிகமானது என்றும் என்.சி.ஆர்.பி.தெரிவித்துள்ளது.

செவ்வாய், 22 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon