மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 6 ஆக 2020

ரூ.800 கோடி வரி ஏய்ப்பு: மருத்துவமனையில் கல்கி பகவானின் மகன், மருமகள்

ரூ.800 கோடி வரி ஏய்ப்பு: மருத்துவமனையில் கல்கி பகவானின் மகன், மருமகள்

வேலூரில் பிறந்து எல்ஐசி ஏஜென்ட்டாகப் பணிபுரிந்து, அதன்பிறகு கல்கி ஆசிரமத்தைத் தொடங்கியவர்தான் தற்போது வருமானவரித் துறை பிடியில் சிக்கியுள்ள கல்கி பகவான். விஷ்ணுவின் பத்தாவது அவதாரம் எனத் தன்னை தானே அறிவித்துக்கொண்ட கல்கி பகவான், தனது ஆசிரமத்தின் கிளைகளை கர்நாடகம், ஆந்திரம் என இந்தியாவின் தென்மாநிலங்களில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஒரு சில இடங்களில் பரப்பினார்.

இந்த ஆசிரமத்துக்கு வருபவர்களிடம் அதிகளவு காணிக்கை வசூலிப்பது, வரி ஏய்ப்பு எனப் பல்வேறு புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து கல்கி ஆசிரமத்தில் கடந்த புதன்கிழமை தொடங்கிய வருமானவரித் துறை சோதனை நேற்று முன்தினம் இரவு நிறைவடைந்தது.

சுமார் ஐந்து நாட்களாக நடத்தப்பட்ட தொடர் சோதனையில் 800 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாதது கண்டுபிடிக்கப்பட்டது. கணக்கில் காட்டப்படாத ரொக்கம் 44 கோடி ரூபாய், 20 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு டாலர்கள், 90 கிலோ தங்கம், கணக்கில் காட்டப்படாத 4,000 ஏக்கர் நிலம், துபாய், ஆப்பிரிக்கா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் உள்ளிட்ட வெளிநாடுகளில் செய்யப்பட்டுள்ள 100 கோடி ரூபாய் முதலீடுகள் குறித்த ஆவணங்கள், பினாமி சொத்துகள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளதாக வருமானவரித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கல்கி ஆசிரமத்துக்குத் தொடர்புடைய முக்கிய நபர்களான விஜயகுமாரின் மகன் கிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணனின் மனைவி ப்ரீத்தா ஆகியோர் வருமானவரித் துறை அதிகாரிகளின் கேள்விக்குப் பதிலளிக்கவில்லை என்றும் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில் கையெழுத்திடவில்லை என்றும் வருமானவரித் துறை தரப்பில் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் வருமானவரித் துறை, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில் இருவரும் பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். உடல்நலக் குறைவால் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருமானவரித் துறை சோதனை நடந்த நிலையில், கல்கி பகவான் வெளிநாடு தப்பிச் சென்றதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால் அவர் வெளிநாடு தப்பிச் செல்லவில்லை. திருவள்ளூர் மாவட்டம் நேமம் ஆசிரமத்தில்தான் இருக்கிறார். ஆரோக்கியப் பிரச்சினை காரணமாக வெளியே வராமலிருந்தார் என்று கல்கி ஆசிரமத்தின் சிஇஓ சுனில் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 22 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon