மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 6 ஆக 2020

டிஜிட்டல் திண்ணை: விக்கிரவாண்டி - நாங்குநேரி: எக்சிட் போல் ரிசல்ட்!

டிஜிட்டல் திண்ணை: விக்கிரவாண்டி - நாங்குநேரி: எக்சிட் போல் ரிசல்ட்!

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது. “நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் முடிந்துவிட்டது. இரண்டு தொகுதிகளிலும் என்ன நிலவரம் என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கடி கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறார். இரண்டு தொகுதிகளிலும் அமைச்சர் தங்கமணி மூலமாக ஒரு எக்சிட் போல் சர்வேவுக்கு ஏற்பாடு செய்திருந்தார் முதல்வர். அந்த டீம் வாக்குப் பதிவுக்குப் பிறகான ரிசல்ட்டை முதல்வரிடம் கொடுத்திருக்கிறார்கள்.

‘நாம் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் வாக்களிக்க வந்துவிட்டார்கள். மழை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புப்படி விக்கிரவாண்டியில் அதிமுக கூட்டணி 15,000 வாக்குகளுக்கு அதிகமாக பெற்று வெற்றி பெறும். அதேபோல நாங்குநேரியில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவுக்கே வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது’ என்று அதில் சொல்லப்பட்டிருந்தது. அதை வாங்கிப் பார்த்த முதல்வர், ‘இது அப்படியே இருக்கட்டும். நான் உளவுத் துறை ரிப்போர்ட்டும் கேட்டிருக்கேன். அதுவும் வரட்டும் பார்க்கலாம்’ என்று சொல்லியிருக்கிறார்.

உளவுத் துறை ரிப்போர்ட்டும் முதல்வர் கைக்கு வந்திருக்கிறது. அதிலும் இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறவே வாய்ப்பு அதிகம் எனச் சொல்லப்பட்டு இருக்கிறது.

இரண்டு ரிப்போர்ட்களையும் பார்த்த பிறகுதான் முதல்வர் சந்தோஷமாக இருந்திருக்கிறார். அமைச்சர் தங்கமணியிடமும் இது தொடர்பாகப் பேசியிருக்கிறார்.

‘இப்போ வந்திருக்கும் ரிப்போர்ட் நல்லா இருக்கு. ரொம்பவும் சந்தோஷமா இருக்கு. இரண்டு தொகுதிகளுக்கும் அமைச்சர்களை அனுப்பினாலும் அவங்களுக்கே தெரியாமல் தினமும் நான் அவங்க நடவடிக்கைகளைப் பார்க்க சொல்லி இருந்தேன். எல்லோருமே நல்லாவே வேலை பார்த்திருக்காங்க. யாரு சரியாக இருக்காங்க... யாரு ஏமாத்துறாங்கன்னு எனக்குத் தெரியும். இந்த முறை எல்லோரும் உள்ளன்போடுதான் வேலை செய்திருக்காங்க. அதனால நிச்சயமாக ஜெயிச்சுடுவோம். வேலூர் தேர்தலில் சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் கோட்டை விட்டோம். இப்போ அந்த தப்பு நடக்காது. அதுவும் பிரதமரும் சீன அதிபரும் வந்துட்டு போனது மக்களிடம் நல்ல தாக்கத்தை உண்டாக்கி இருக்கு. எடப்பாடியால் எதுவும் செய்ய முடியாதுன்னு சொல்றவங்களுக்கு இந்த ரிசல்ட் நல்ல பதிலாக இருக்கணும். அதுதான் என்னுடைய ஆசை’ என்று சொல்லி இருக்கிறார்.

‘நாம எதிர்பார்த்ததைவிட ரிசல்ட் நல்லாவே வரும்...’ என்று தங்கமணியும் சொல்லி இருக்கிறார்” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

“திமுக தரப்பில் என்ன நினைக்கிறார்கள்?” என்று கேள்வியைப் போட்டது ஃபேஸ்புக்.

பதில் அடுத்த மெசேஜில் வந்தது.

“திமுக தலைவர் ஸ்டாலின் வாக்குப் பதிவு தொடங்கியதிலிருந்தே விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் என்ன நிலவரம் என்பதை தனது உதவியாளர் மூலமாக கேட்டறிந்தபடியே இருந்தார். இரு தொகுதிகளின் பொறுப்பாளர்களிடம் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை பேசிய ஸ்டாலினுடைய உதவியாளர் வாக்குப் பதிவு சதவிகிதம், பெண்கள் வாக்கு, சமுதாய ரீதியிலான வாக்குகள் பற்றிய விவரங்களையெல்லாம் ஒன்றுவிடாமல் கேட்டுக் கொண்டு ஸ்டாலினுக்குத் தெரிவித்து வந்தார். ‘விக்கிரவாண்டியில் திமுகவும், நாங்குநேரியில் காங்கிரஸும் ஜெயிக்கும். எந்த சந்தேகமும் இல்ல’ என்றே இரு தொகுதி பொறுப்பாளர்களும் சொல்லியிருக்கிறார்கள்.

இவர்களைத் தவிர ஸ்டாலினுக்கு ஆலோசனைகள் வழங்கும் ஓ.எம்.ஜி தரப்பினரும் நேற்று மாலை தங்களுக்கு வந்த எக்சிட் போல் தகவல்களின் அடிப்படையில் திமுகவும் காங்கிரஸுமே வெற்றி பெறும் என்று ஸ்டாலினுக்கு ரிப்போர்ட் தந்துள்ளனர். இரு முனைகளிலிருந்தும் வந்த இந்தத் தகவல்களால் ஸ்டாலினும் நம்பிக்கையாகவே இருக்கிறார்.

இதற்கிடையில் இடைத் தேர்தலுக்குப் பிறகு ஸ்டாலின் எப்படி இருக்கிறார் என்று உளவுத் துறை மூலம் முதல்வர் எடப்பாடி ரிப்போர்ட் கேட்டிருக்கிறார். அவர்கள் கொடுத்த ரிப்போர்ட்டில், தான் சென்ற இடமெங்கும் மக்கள் கூட்டம் திரண்டதாலும், ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்திருப்பதாலும், இயல்பாகவே ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி இருப்பதாலும் திமுகவே ஜெயிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ஸ்டாலின்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல எடப்பாடியும், பன்னீரும் என்ன நினைக்கிறார்கள் என்று தங்களுக்கு நெருக்கமான சில ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மூலமாக திமுக தலைமையும் விசாரித்திருக்கிறது. அவர்களுக்கு கிடைத்த பதிலில், ‘திமுகவை விட பல மடங்கு பணம் கொடுத்திருக்கோம் என்ற தெம்பிலும் இடைத் தேர்தல்னாலே ஆளுங்கட்சிதானே ஜெயிக்கும் என்ற நம்பிக்கையிலும் இருக்கிறார்கள்’ என தெரியவந்துள்ளது.

இரு தரப்புமே நம்பிக்கையாக இருப்பதாக இரு தரப்புக்குமே ரிப்போர்ட்டுகள் கிடைத்திருப்பதால் தேர்தல் முடிவுக்காக காத்திருக்கிறார்கள்” என்ற பதிலை போஸ்ட் செய்துவிட்டு லாக் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

திங்கள், 21 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon