மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 21 ஜன 2021

விக்கிரவாண்டி: அமைச்சர் அண்ணனின் இருநூறு ரூபாய் கட்டு!

விக்கிரவாண்டி: அமைச்சர் அண்ணனின் இருநூறு ரூபாய் கட்டு!வெற்றிநடை போடும் தமிழகம்

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் ஆரம்பித்ததிலிருந்தே வாக்குப் பதிவு விறுவிறுவென கூடிக்கொண்டே இருந்தது. நேற்று (அக்டோபர் 21) காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணி முடிந்த பின்னரும், கணிசமான பூத்துகளில் டோக்கன் வாங்கிக் கொண்டு 6 மணிக்கு மேலும் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.

நகர்ப்புற பகுதியென்றாலும் கிராம வாசனையே அதிகம் அடிக்கும் விக்கிரவாண்டி தொகுதியின் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் காலையிலேயே அதிக வாக்குகள் பதிவாகின. இப்படியே போனால் 90 சதவிகிதத்துக்கும் மேல் போகும் என்று திமுக, அதிமுக இரு கட்சியினருமே எதிர்பார்த்தார்கள். பொதுவாக தேர்தல் என்றால் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை வாக்குப் பதிவு ஏறிக்கொண்டே செல்லும். மதியத்துக்கு மேல் ஒரு தொய்வு ஏற்படும். பின்னர் ஊர் ஊராகப் போய் வேலைக்குப் போனவர்கள், மாடு மேய்க்கப் போனவர்கள், பக்கத்து ஊருக்குப் போனவர்களை எல்லாம் கொண்டுவந்து வாக்குச் சாவடிக்கு விடும் வேலைகளைக் கட்சியினர் பார்ப்பார்கள். ஆனால், நேற்று விக்கிரவாண்டியில் அதற்கு வேலையே இல்லாமல் மக்களே சாரைசாரையாக வந்து வாக்களித்துக் கொண்டிருந்தனர், குறிப்பாகப் பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து வாக்களித்தனர்.

இந்த அதிக ஓட்டுப் பதிவு யாருக்கு சாதகம், யாருக்குப் பாதகம் என்பதுதான் நேற்று மாலையில் இருந்தே விக்கிரவாண்டியின் விவாதமாக இருக்கிறது. அதிமுகவினரோ, ‘பணத்தை அள்ளிக் கொடுத்திருக்கோம். பொதுவா கிராமப் புறங்கள்ல காசு வாங்கிட்டா வந்து ஓட்டுப் போட்டுருவாங்க. அதான் இப்ப நடந்திருக்கு. அதனால பெரிய வித்தியாசத்துல நாங்க ஜெயிப்போம்’ என்கிறார்கள் நம்பிக்கையாக.

அதிமுகவினரின் கரன்சி வியூகம் தேர்தல் நாளன்று வரை தொடர்ந்தது. அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனின் தலைமை ஏஜென்ட்டான அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் ராதாகிருஷ்ணன் இருந்தார். நேற்று காலை முதல் கிட்டத்தட்ட எல்லா பூத்துகளுக்கும் சென்று அவர் பார்வையிட்டார். அவர் வந்து சென்ற பின்னர் பூத்தில் பணியாற்றும் கட்சிக்காரர்களுக்கு 200 ரூபாய்க் கட்டுகள் இருந்தன. அதிமுக அணியினருக்கு மட்டுமல்ல,... கிராமப் பகுதிகளில் திமுக கூட்டணி பூத் லெவல் ஊழியர்களுக்கும்கூட அமைச்சர் அண்ணனின் கவனிப்பு போய் சேர்ந்திருக்கிறது. கடைசி வரை விழிப்பாக இருக்க வேண்டும் என்று அதிமுகவினருக்கும், கொஞ்சம் கண்டுக்காமல் விடுங்கள் என்று திமுக கூட்டணி ஊழியர்களுக்கும் சேதி சொல்லத்தான் இந்த 200 ரூபாய் கட்டுகள். அமைச்சரின் அண்ணன் வந்துவிட்டுப் போன கொஞ்ச நேரத்திலெல்லாம் கல்யாணம் பூண்டி வாக்குச் சாவடியில் அதிமுக கூட்டணியினரான தேமுதிகவினருக்கும், பாமகவினருக்கும் பிரித்துக் கொள்வதில் தகராறு ஏற்பட்டது. அதேநேரம் திமுக வேட்பாளர் புகழேந்தியும் நேற்று தீவிரமான ரவுண்டில் இருந்தார். திமுக கூட்டணி பூத் ஊழியர்களைப் பார்த்து பேசி என்ன நிலவரம் என்று விசாரித்துக் கொண்டிருந்தார்.

பெண்களின் ஓட்டைப் பொறுத்தவரை கணிசமான ஓட்டு திமுகவினருக்கே விழுந்திருப்பதாகத் தெரிகிறது. ஏற்கனவே நம்மிடம் விக்கிரவாண்டி பெண்கள் சொன்ன மாதிரி, ‘திமுக, அதிமுக இருவரும் கூடவோ, குறைச்சலோ எவ்வளவு கொடுத்தாலும் இருவரும் பணம் கொடுத்திருந்தால் குடும்பத்தில் பாதி ஓட்டு அவர்களுக்கு, பாதி ஓட்டு இவர்களுக்கு’ என்ற ஃபார்முலாபடியே பெண்கள் வாக்களித்திருக்கிறார்கள். எனவே திமுக-அதிமுக இரண்டுமே பெண்கள் ஓட்டை நம்பியிருக்கின்றன.

விக்கிரவாண்டியின் வெற்றியாளர் யார் என்பதை அறிய இன்னும் இரு நாட்கள் காத்திருக்கவே வேண்டும்.

செவ்வாய், 22 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon