மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 21 ஜன 2021

முதல் ‘வாட்ஸ் அப்’ தேர்தல்: மோடி வென்றது எப்படி? - புலனாய்வு ரிப்போர்ட்!

முதல் ‘வாட்ஸ் அப்’ தேர்தல்: மோடி வென்றது எப்படி? - புலனாய்வு ரிப்போர்ட்!வெற்றிநடை போடும் தமிழகம்

ப்ரியஞ்சனா பெங்காணி

குறிப்பு: ஆராய்ச்சியாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் எளிதில் எட்டாத, அனுமதிக்கப்படுபவர்களுக்கு மட்டுமேயான தகவல் பரிமாற்ற வலைதள அமைப்பான வாட்ஸ் அப்பில் 2019 இந்தியப் பொதுத் தேர்தலின்போது அரசியல் தகவல் தொடர்பு எவ்வாறு நடைபெற்றது என்பதைக் கண்காணிக்கும் முகமாக எழுதப்படும் கட்டுரைத் தொடரில் முதலாவது கட்டுரை இது.

அரசியல் விளம்பரங்கள் வாட்ஸ் அப், மெசன்ஜர் (இவை இரண்டுமே ஃபேஸ்புக்குக்குச் சொந்தமானவை), சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமேயான தகவல் பரிமாற்ற வலைதளங்களில் மேன்மேலும் அதிகமாகப் பரப்பப்படுகிறது. பல இடங்களில், அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமேயான தகவல் பரிமாற்ற வலைதளங்களை மக்கள் விரும்புகின்றனர். ஏனெனில் அவை பயன்பாட்டாளர்களின் அந்தரங்கத்தைப் பாதுகாக்கின்றன மற்றும் அவர்களுக்கிடையே ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துகின்றன.

ஆனால், தேர்தல்களின்போது அரசியல் பிரச்சார இயக்கங்களுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் தேர்தலை நெறிப்படுத்துபவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் கண்காணிப்பிலிருந்து தப்புவதற்கு இவை ஒரு வழி உருவாக்கிக் கொடுக்கின்றன. அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமேயான குழுக்களிடமிருந்து விளம்பரங்களையும் இணையத் தகவல் பரிமாற்ற குறிப்புகளையும் இதுபோன்ற இதர விஷயங்களையும் எளிதில் மீட்டெடுக்க முடியாத வகையிலேயே இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவேதான் எமது ஆராய்ச்சி குழாம் வாட்ஸ் அப் தகவல் பரிமாற்ற வலைதளத்தில் பெருமளவில் கட்டமைக்கப்படும் அரசியல் பிரச்சார இயக்கங்கள் தெரிவிப்பது என்ன என்பது குறித்து தகவல் சேகரிக்க ஏதுவான வழிவகைகளை உருவாக்கத் தலைப்பட்டன.

2019ஆம் ஆண்டின் பொதுத் தேர்தல் இந்தியாவின் ‘முதல் வாட்ஸ் அப் தேர்தலாக’ அழைக்கப்பட்டது. இதுவே உலகின் முதல் வாட்ஸ் அப் தேர்தல் அல்ல. கடந்த 12 மாதங்களில் நைஜீரியா, பிரேசில் ஆகிய நாடுகளில் நடைபெற்ற மக்கள் வாக்கெடுப்புகள்கூட ‘வாட்ஸ் அப் தேர்தல்களாக’க் குறிப்பிடப்பட்டன. இத்தேர்தல்களின்போது ‘இந்த செயலி பயன்பாட்டில் தவறான செய்திகளைப் பரப்புவது உட்பட, ஏய்க்கும் விதமான அரசியல் செய்திகள் பரவலாகக் காணப்பட்டன’ எனத் தேர்தல் போஸ்ட்மார்ட்டம் பகுப்பாய்வுகள் சுட்டிக்காட்டின.

பொதுவாக, வாட்ஸ் அப்பில் அரசியல் சொல்லாடல் எப்படியிருந்தது என்பதையும், தில்லுமுல்லு தகவல் மாற்றங்கள் எப்படி மேற்கொள்ளப்பட்டன என்பதையும் படித்தாராய்வதற்கான ஒரு குறிப்பிட்ட ஆய்வுக்களமாக 2019 ஏப்ரல் 11 முதல் மே 19 வரை நீடித்த தேர்தல் காலகட்டத்தை ஒரு மாதிரி ஆய்வுக்களமாக டிஜிட்டல் பத்திரிகையியலுக்கான டோட்டா மையத்தைச் (Tow Center for Digital Journalism) சேர்ந்த நாங்கள் பயன்படுத்திக்கொண்டோம்.

அனுமதிக்கப்பட்டவர்களை மட்டுமே கொண்ட குழுக்களில் என்ன நடைபெறுகிறது என்பதை வெளியாட்கள் கண்டறிவதற்கு உதவக்கூடிய செயலி மென்பொருள் இணைப்பூடகங்களோ (Application Programming Interface/APIs), சாதனங்களோ அல்லது நல்ல முன்மாதிரிகளோ இல்லாத நிலையில் மூன்றரை மாத காலகட்டத்துக்கு அரசியல் உரையாடலின் ஒரு குறிப்பிட்ட தொகுப்பைக் கண்காணிக்க ஒரு யுக்தியை வகுத்தோம். இந்த ஆய்வின் விளைவாகக் கிடைக்கப்பெற்ற விவரத் தொகுப்பு ஒரு டெர்ராபைட் (மில்லியன் மெகாபைட்) அளவுக்குப் பெருகியது. இதில் 10.9 லட்சம் செய்தி குறிப்புகள் அடங்கியிருந்தன. இந்தியாவின் அரசியலோடு சம்பந்தப்பட்ட 1400 உரையாடல் குழுக்களில் சேர்வதன் வாயிலாக இந்தத் தகவல்கள் எடுக்கப்பட்டன.

மர்ம பெட்டகம்

கேம்பிரிட்ஜ் அனலிடிக்கா மோசடி விவகாரம் வெளியான பிறகு ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆகிய இரண்டிலுமே என்ன நடக்கிறது என்பதை அறிவது கடினமாகிவிட்டது. பயன்பாட்டாளர்களின் அந்தரங்கத்தைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் சமூக வலைதள நிறுவனங்கள் தகவல் திருட்டுத் தடுப்பு மெக்கானிஸங்களை நிறுவியிருந்தன மற்றும் பொதுவாகக் கிடைக்கும் இணைப்பூடகங்கள் (செயலி மென்பொருள் இணைப்பூடகங்கள் /Application Programming Interface/APIs என அழைக்கப்படும் இணைப்பூடகங்கள்) வாயிலாக தகவல்களைப் பெறுவதற்கு கூடுதலான தடைகளை விதித்திருந்தன. விளம்பரங்களைக் கண்டுபிடிப்பதற்கான மென்கருவிகளையும் நிறுவின. இவை வேவு நுண்மென்பொருட்களையும் கொண்டிருக்கத் தலைப்பட்டன. மொத்தத்தில் பார்த்தால் இந்த மாற்றங்கள் அனைத்தும் ‘ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும் முறையற்ற நடத்தைகள்’, வன்முறை நிறைந்த நடவடிக்கைகள், தவறான தகவல்களை திட்டமிட்டே பரப்புவது போன்ற விரும்பத்தகாத நடவடிக்கைகளை இனங்காண்பதை முன்பைவிட கடினமாக்கின. கிரௌட் டேங்கிள், ஃபேஸ்புக் கிராப் API மற்றும் டிவிட்டர் API போன்று இவற்றை கண்டறிய உதவக்கூடிய பல மென்பொருள் கருவிகள் உள்ளன. இருப்பினும் வாட்ஸ் அப்போ பிரவேசிக்க இயலாத மர்மப் பெட்டகமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

வகுக்கப்பட்ட திட்டம்

இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்தும் 46 கோடி பேரில் 40 கோடி பேர் வாட்ஸ் அப்பைப் பயன்படுத்துகிறார்கள். இந்தத் தளத்தைப் பயன்படுத்துவது நாடெங்கிலும் எந்த அளவுக்குப் பரவியிருக்கிறது என்றால் இதில் நடைபெறும் குழு விவாதங்களே தாங்கள் தகவல் பெறுவதற்கான முதன்மை ஆதாரம் எனப் பலர் கருதுகின்றனர். (எந்த விஷயத்தில் அவர்களுக்கு ஆர்வமிருக்கிறதோ அந்த விஷயம் வாரியாக இந்தக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன மற்றும் குழு ஒன்றுக்கு 256 பேர் மட்டுமே பங்கெடுக்க முடியும் என்ற உச்சவரம்பையும் இந்த செயலி நிர்ணயித்துள்ளது). பிரேசில், நைஜீரியா ஆகிய நாடுகளில் தேர்தலின்போது வாட்ஸ் அப் எங்ஙனம் பயன்படுத்தப்பட்டது என்பதைக்கண்டு 2019 தேர்தலில் இந்தியாவிலும் போட்டியிலுள்ள கட்சிகளுக்கிடையே இது ஒரு முக்கியப் போர்க்களமாக மாறும் எனப் பலர் கணித்தனர். தேர்தல் பிரச்சார இயந்திரங்களும் தங்களது செய்தியை வீடுதோறும் கொண்டு செல்ல வாட்ஸ் அப்பைப் பயன்படுத்த விரிவான திட்டங்களை வகுத்தன.

இந்தியாவில் தேசிய அளவிலான அரசியல் கட்சிகள் ஏழு உள்ளன. பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டவர்கள் அவற்றுள் இரு கட்சிகளைச் சேர்ந்தவர்கள். ஏற்கெனவே பிரதமர் பதவி வகித்துவந்த பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நரேந்திர மோடி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி.

2019 தேர்தலில் இரு கட்சிகளுமே சமூக வலைதளப் பிரச்சார இயக்கங்களை நடத்த பெருமளவுக்கு முதலீடு செய்தன. ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான ஒரு செய்தியின்படி இந்தியாவிலிருக்கும் 9,27,533 வாக்குச்சாவடிகள் ஒவ்வொன்றிலும் மூன்று வாட்ஸ் அப் குழுக்களை அமைக்க பாஜக திட்டமிட்டிருந்தது. பாஜக பிரமாண்ட வெற்றி பெற்ற 2014 தேர்தலில் காங்கிரஸ் செலவு செய்த சமூக வலைதள பட்ஜெட்டைவிட 2019இல் அது 10 மடங்கு அதிகமாக இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது. 2014இல் பாஜக வெற்றி பெற்ற 282 தொகுதிகளைவிட 2019இல் 303 தொகுதிகளை வென்று காங்கிரஸைவிடத் தனக்கு அதிகமாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரித்தது. மோடி பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேர்தல் பிரச்சாரத்துக்காக வாட்ஸ் அப் போன்றதொரு மேடையைப் பயன்படுத்துவதில் உள்ள ஆதாயங்கள் தெளிவாகத் தெரிகின்றன.(ஃபேஸ்புக் அதில் வரும் விளம்பரங்கள் விஷயத்தில் செய்வதுபோல) வெவ்வேறு நலன்கள் அடிப்படையில் அமைந்திருக்கும் குழுக்களுக்கேற்ப செய்திகளை வடிவமைப்பதற்கு மட்டுமின்றி செய்தி அனுப்புவோர் அனாமதேயமாக அனுப்பவும் அது அனுமதிக்கிறது. செய்தி அனுப்புபவர்களின் தொலைபேசி எண்ணை மட்டுமே ஆதாரமாகக்கொண்டு செய்தி அனுப்புபவர்களை வாட்ஸ் அப் இனம்காண்பதால் ஒருவர் அனுப்பிய செய்தியை வேறொருவர் அனுப்பியதாகத் தவறாகக் காட்டுவது எளிது. அதுவும் பெரிய குழுக்களில் அது எளிது. தனியார் குழுக்களுக்கு உள்ளே பரிமாறிக்கொள்ளப்படும் விஷயங்களைக் கண்காணிக்க வாட்ஸ் அப்புக்கு வழி எதுவும் இல்லை. செய்தி எங்கிருந்து வந்தது என்று கண்டறிவதற்கோ அல்லது அது அனுப்பப்பட்ட நோக்கம் என்ன என்று உறுதியாக தெரிந்துகொள்வதற்கோ குழு உறுப்பினர்களுக்கு இயலாது. பல விஷயங்கள் மர்மமாக மூடி மறைக்கப்பட்டுள்ளன.

சொல்லாடல்கள் தொடக்கத்திலிருந்து முடிவு வரை சங்கேத குறிப்புகளால் மூடி மறைக்கப்படுவது (encryption) மற்றும் அதோடுகூட வாட்ஸ் அப் குழுக்களின் அந்தரங்கம் பாதுகாக்கப்படும் என்ற உறுதி ஆகியன இருபக்கமும் பாயக்கூடிய கூர்முனைக் கத்தி போன்றவை. பத்திரிகையாளர்கள் அமைப்புகள் உட்பட நியாயமான அமைப்புகளால் உருவாக்கப்பட்ட குழுக்கள் ஏராளமாக இருக்கையில் குற்றங்களைப் புரிகின்ற கண்காணிப்பு இன்மையைத் தவறாகப் பயன்படுத்திக்கொள்கின்ற மற்ற குழுக்களும்கூட ஏராளமாக உள்ளன. (ஆயினும் வன்முறை, குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை அல்லது வன்புணர்ச்சி ஆகியவை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் ஃபேஸ்புக் மற்றும் சட்ட அமலாக்கத் துறையினர் தலையிட்டுள்ளனர்).

ஏய்ப்பது எளிது

கெட்ட நோக்கத்தைக் கொண்டவர்கள் ‘அதிகாரபூர்வமான பாஜக குழு’ என்ற பெயரில் போலியான ஒரு குழுவை உருவாக்க முடியாது என்பதை உத்தரவாதம் செய்யக்கூடிய தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் இல்லை. பயன்பாட்டாளர்களுக்கும் ஒரு குழு அதிகாரபூர்வமான குழுவா இல்லையா என்பதைக் கண்டறிய வழி ஏதும் இல்லை. இந்த ஏப்ரல் மாதம் வரை பயன்பாட்டாளர்களை அவர்களது அனுமதி இல்லாமலேயே குழுக்களில் சேர்க்க முடியும். தவறாகப் பரப்பப்படும் செய்திகளுக்கும் பிரச்சார இயக்க செய்திகளுக்கும் பிரச்சாரத்துக்கும் அவர்களை இலக்காக்க முடியும். அதன் விளைவுகள் மிகவும் ஆபத்தானவை. இந்தியாவில் போலியான வதந்திகள் கும்பலாக அடித்துக்கொல்லும் நிகழ்ச்சிகளுக்கும் தடுப்பூசி போடுவதை வெற்றிகரமாகத் தடுக்கும் இயக்கங்களுக்கும் இட்டுச் சென்றமையையும் நடந்துள்ளது.

நாங்கள் செய்தது என்ன?

இத்தகையதோர் பின்புலத்தில் இந்தியாவில் வாட்ஸ் அப்பில் நிகழும் அரசியல் உரையாடல்களைக் கண்டறிந்து அவற்றை பகுப்பாய்வு செய்வது என்பது மிகவும் கடினமானதொன்றாக இருக்கப் போகிறது. இந்தியாவின் மக்கள்தொகை, எண்ணற்ற மொழிகள் பேசப்படுவது இந்தச் செயலி இயல்பிலேயே ‘தனித்துவத்’ தன்மை கொண்டிருப்பது ஆகியன இந்த அரசியல் உரையாடல்களில் ஒரு சிறு பகுதியை மட்டுமே பெற முடியும் என்பதற்கான உத்தரவாதமாக விளங்கின என்பது தொடக்கத்திலிருந்தே எங்களுக்குத் தெரியும். அரசியல் விவாதங்களோடு சம்பந்தப்பட்ட எத்தனை குழுக்களைக் கண்டறிய முடியுமோ அத்தனை குழுக்களிலும் சேர்வது எங்களது ஆரம்ப முயற்சியாக இருந்தது.

வாட்ஸ் அப் குழு ஒன்றில் பின்வரும் இரு வழிகளில் ஒருவர் உறுப்பினராக முடியும். அந்தக் குழுவை நிர்வகிப்பவர் உறுப்பினராகச் சேர்த்துக்கொள்வதன் மூலம் உறுப்பினராகலாம். அல்லது உறுப்பினராகச் சேருமாறு வரும் அழைப்பை ஏற்று ஒருவர் உறுப்பினராகலாம். வந்து சேருமாறு வரவேற்கும் அழைப்புகள் இணையதளத்தில் எத்தனை உள்ளன எனத் தேடுவதிலிருந்து நாங்கள் தொடங்கினோம். பிரேசிலில் இதே போன்ற ஆராய்ச்சியை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் கையாண்ட முறையும் இதுதான். இதோடுகூட நாங்கள் ஏற்கனவே உறுப்பினராக உள்ள ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் குழுக்கள் ஆகியவற்றில் வெளியிடப்பட்டுள்ள அத்தகைய அழைப்புகளைத் தேடிக்கண்டறிவதன் மூலம் நாங்கள் சேரக்கூடிய குழுக்களின் எண்ணிக்கையைப் பெருக்கினோம். செயற்பாட்டாளர்கள், கட்சிகளோடு இணைந்துள்ள இணைப்பு அமைப்புகள் பிரச்சார இயக்கங்களில் பணிபுரிவோர் ஆகியோரும்கூட இத்தகைய வெளிப்படையான குழுக்களில் சேரும்படியும் சேர்ந்து தங்கள் கட்சிகளுக்கு உதவும்படியும் வாக்காளர்களை உற்சாகப்படுத்தினர்.

கூகுள் போன்ற தேடல் தளங்களில் ‘வாட்ஸ் அப்பில் சேர்வதற்கான அழைப்புகள்’ அல்லது ‘வாட்ஸ் அப் குழுக்கள்’ எனத் தேடியது வாட்ஸ் அப்பில் சேர்வதற்கான அழைப்புகளைத் தொகுத்து தரும் இணையதளங்களுக்கு எங்களை இட்டுச்சென்றன. கண்மூடித்தனமாக எல்லா குழுக்களிலும் சேர்வதற்குப் பதிலாக எங்களுக்குப் பொருத்தமான (பெயரிலேயே அவை அரசியல் ரீதியான குழுக்கள் என தெரியப்படுத்திய) குழுக்களில் மட்டுமே நாங்கள் சேர்ந்தோம். ‘மிஷன் 2019’, ‘மோடி: ஆட்டத்தின் தலைவிதியையே மாற்றுபவர்’, ‘இளைஞர் காங்கிரஸ்’, மற்றும் ‘இந்திய தேசிய காங்கிரஸ்’ ஆகியன இவற்றுள் அடங்கும்.

ஒரேயொரு ஐபோனுடனும் சமீபத்தில் பெறப்பட்ட அமெரிக்க தொலைபேசி எண் ஒன்றையும் வைத்துக்கொண்டு நாங்கள் இந்தப் பணிகளைத் தொடங்கினோம். முற்றிலும் வெளிப்படையான தன்மையைக்கொண்டிருக்க ‘டோ சென்டர்’ என்று எங்களை நாங்கள் இனங்காட்டிக் கொண்டோம். நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி குழுவாக அதற்கு விவரமும் கொடுத்தோம். அடிப்படையில் வாட்ஸ் அப்பின் பாதுகாப்பான வடிவமைப்புக்கு மதிப்பு கொடுத்து குறைந்தபட்சம் 60 உறுப்பினர்கள் கொண்ட குழுக்களில் சேர்ந்தோம். ஆங்கிலத்திலும் இந்தியிலும் உள்ள செய்திகள் மீது கவனம் செலுத்தினோம். (நாங்கள் செய்திகளின் உள்ளடக்கத்தை பகுப்பாய்வு செய்ய வேண்டுமாயின் அவற்றைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாயிற்று. எங்களுடைய முதன்மை ஆராய்ச்சியாளரோ இரு மொழிகளைப் பேசக்கூடியவராக இருந்தார்.) ஒரு குழு 60க்கும் குறைவான உறுப்பினர்களைக் கொண்டதாகவும் அந்தக் குழுவின் பெயர் தெளிவாக அரசியல் ரீதியானதாகவுமிருந்தால் அதில் இணைவதற்கான அழைப்பை நாங்கள் பராமரித்து வந்த இணையத்தக்க குழுக்களின் உத்தேச பட்டியலில் சேர்த்துக்கொண்டோம். அந்தக் குழுவின் எண்ணிக்கை 60 ஆன உடனே நாங்கள் அதில் சேர்ந்தோம். நாங்கள் எங்களது பட்டியலைத் தினமும் பரிசீலனை செய்தோம்.

நாங்கள் எதிர்கொண்ட தடங்கல்கள்

நாங்கள் குழுக்களின் நடவடிக்கைகளை பின்தொடர ஆரம்பித்த ஒரு சில நாட்களிலேயே சுமார் 50 குழுக்கள் எங்களை அவற்றிலிருந்து நீக்கின. பின்னர் எந்த முன்னெச்சரிக்கையுமின்றி வாட்ஸ் அப் எங்கள் தொலைபேசி எண்ணுக்கு தடை விதித்தது. நாங்கள் ஏராளமான குழுக்களில் சேர்வதால் தடைவிதித்தார்களா ( தடை செய்யப்பட்ட போது 600 குழுக்களில் உறுப்பினராக இருந்தோம்) அல்லது நிர்வகிப்பவர்கள் பலர் எங்களது அயல்நாட்டு தொலைபேசி எண்ணை சந்தேகத்திற்குரியது என்று ரிப்போர்ட் செய்தார்களா என உறுதியாகத் தெரியவில்லை.

எனவே நாங்கள் மீண்டும் தொடங்கினோம். ஆனால் இந்த முறை பல தொலைபேசிகளை பயன்படுத்தினோம்(மொத்தத்தில் 6 தொலைபேசிகள்). ஒவ்வொரு தொலைபேசியிலும் குழுக்களின் எண்ணிக்கையை 300க்கும் குறைவாக வைத்திருந்தோம். நாங்கள் மேலும் இரு முறை தடை செய்யப்பட்டோம். அதிலும் ஒரு முறை எங்கள் தொலைபேசி ஒன்றின் வாயிலாக இருபதே குழுக்களில் சேர்ந்ததையடுத்து தடை செய்யப்பட்டோம். இதற்கு சாத்தியமான விளக்கம் என்னவென்றால் இந்த குழுக்களில் சேர்வதற்கான இயக்கப் போக்கை வாட்ஸ் அப் டெஸ்க்டாப்பின் வாயிலாக (இது வாட்ஸ்அப்பின் ஒரு டெஸ்க்டாப் பயன்பாட்டிற்கான விரிவாக்கம், இதன் வாயிலாக சில செயல்பாடுகளை தானியங்கிமயமாக்க முடியும்) தானியங்கிமயமாக்க நாங்கள் முயற்சித்ததையடுத்து எங்களையும் ஒரு தானியங்கியாக (bot) ஃபேஸ்புக் அடையாளப்படுத்தியிருந்ததேயாகும்.

எங்களுடைய ஆய்வின் முழுமை காலகட்டத்தின் போது குழுக்களை நிர்வகிப்பவர்களால் இக் குழுக்களிலிருந்து சுமார் 200 முறை நீக்கப்பட்டோம். இது நடந்தபோது வேறொரு பெயரில் அதே குழுவில் மீண்டும் சேர நாங்கள் முயற்சிக்கவில்லை. பல விஷயங்களில், நீக்கப்படுவதற்கு முன்னால் எங்களுக்கு வந்த கடைசி செய்தி தெரிவித்தது என்னவென்றால் எங்களுடைய தொலைபேசி எண் "வேறொரு நாட்டைச்" சேர்ந்தது, அதாவது, அதற்கு +91 என்ற நம் நாட்டுக்கான கோட் இல்லை என்பதாகும். அயல்நாட்டு தொலைபேசி எண்கள் இருப்பதாக குழுக்களை நிர்வகிப்பவர்களிடம் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டி அவற்றை நீக்குமாறு கேட்டுக்கொள்வது நடக்காத ஒரு விஷயம் அல்ல.

இறுதியாக, மார்ச் 1 2019 முதல் ஜூன் 16 2019 வரையிலான விவரம் சேகரிப்பதற்கான மூன்றரை மாத காலகட்டத்தில் நாங்கள் சுமார் 1400 குழுக்களில் சேர்ந்தோம். இவற்றுள் சுமார் 200 குழுக்களிலிருந்து நாங்கள் விலக்கப்பட்டோம். எமது ஆய்விற்கு சம்பந்தமில்லாததாக விளங்கிய, ஸ்பேம்(தேவையற்ற விஷயங்களைத் தரும்) தகவல்கள், பாலியல் ஆபாசங்கள், வேலைவாய்ப்பு அறிவிப்புகள் ஆகியவற்றை விநியோகிக்கும் 240 குழுக்களிலிருந்து நாங்கள் விலகினோம். இந்தியாவில் தேர்தல் வந்த சமயத்தில் நாங்கள் 1000க்கும் சற்று குறைவான எண்ணிக்கையிலான குழுக்களில் அங்கம் வகித்தோம். ஏப்ரல் 11 2019 அன்று முதல் கட்ட தேர்தல் துவங்குவதற்கு முன்னரே இவற்றுள் 80 சதவிகிதம் குழுக்களில் நாங்கள் சேர்ந்திருந்தோம். நாங்கள் மார்ச் 1 2019 அன்று முதல் குழுவில் சேர்ந்தோம், மே 17 2019 அன்று கடைசி குழுவில் சேர்ந்தோம். வாக்கெடுப்பு நடந்து முடிந்து நான்கு வாரங்கள் கழிந்த பிறகு விவரங்கள் சேகரிப்பதை நாங்கள் நிறுத்தினோம்.

ஒவ்வொரு தொலைபேசியின் டேட்டா சேமிப்பு அளவில் எவ்வளவு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை நாங்கள் நெருக்கமாக கண்காணித்து வந்தோம். அது அத்தொலைபேசிகளின் சேமிப்பு அளவின் எல்லையை எட்டுமுன் அவற்றை ஒரு பிரதி எடுத்து வைத்தோம். பிரதியெடுத்துவைத்தபின் வாட்ஸ் அப் செட்டிங்ஸிற்கு சென்று "எல்லா உரையாடல்களையும் நீக்குக" பொத் தானைத் தட்டி அவற்றை நீக்கினோம். ஐபோன் பிரதி மீட்பான் என்ற மென்பொருளை பயன்படுத்தி ஐபோன் பிரதிகளையும் மீடியா (ஒலியொளி) பதிவுகளையும் வெளிக்கொணர்ந்தோம்.

விவரங்கள் சேகரிக்கும் இயக்கப்போக்கின் முடிவில் நாங்கள் 1 டெர்ராபைட் (1000 GB) டேட்டாவை சேர்த்திருந்தோம். இந்த டேட்டாவில் பின்வருவன அடங்கியிருந்தன:

5,00,000 எழுத்துக்கள் மட்டுமே கொண்ட செய்திகள்

3,00,000 படங்கள்

1,44,000 இணைப்புகள்

1,18,000 விடியோக்கள்

12,000 ஒலிப் பேழைகள்

4000 PDF கோப்புகள்

500 தொடர்புக்கான கார்டுகள்

எங்களுடைய டேட்டா தொகுப்பு மிகவும் விரிவானது. இருப்பினும், இந்தியா 138 கோடி மக்கள் தொகையைக் கொண்ட நாடு என்பதையும் இம் மக்கள் 400 உள்ளூர் மொழிகளைப் பேசுபவர்கள் என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். எங்களுடைய பகுப்பாய்வு நாங்கள் எந்த குழுக்களில் உறுப்பினராகச் சேர்ந்திருந்தோமோ அந்த குழுக்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. நாடெங்கிலும் நிலவிய அரசியல் உரையாடலை அது பிரதிநிதித்துவப்படுத்துகிறது என எமது ஆய்வு கோரவில்லை.

டேட்டா பகுப்பாய்வு

நாங்கள் மொத்தம் 10 லட்சத்து 90 ஆயிரம் செய்திகளை (எழுத்து வடிவ செய்திகள், படங்கள், இணைப்புகள் போன்றவை) எங்களுடைய ஆராய்ச்சியின் போது சேகரித்திருந்தோம். சில குழுக்கள் மற்ற குழுக்களைவிட அதிக தீவிரமாக செயல்பட்டு வந்தன. உண்மையில் பார்த்தால், எங்களுடைய டேட்டா தொகுப்பில் மூன்றில் இரண்டு பகுதிக்கும் அதிகமான செய்திகள் அதிக செயல்பாட்டுடன் கூடிய 250 குழுக்களிலிருந்து பெறப்பட்டன. அனைத்து செய்திகளிலும் எழுத்து வடிவிலான செய்திகள் 45% ஆக இருந்தாலும் பின்தொடரப்பட்ட விஷயங்களில் பெரும்பான்மையானவை (52%) படங்கள், வீடியோக்கள் மற்றும் இணைப்புகள் ஆகியன. இதை படம் 1 இல் காணலாம்.

படம் 1

வாட்ஸ்அப் பொதுவாக ஒரு விநியோக தளமாகக் கருதப்படுகிறது. அதாவது இதை பயன்படுத்துபவர்கள் தாங்கள் உருவாக்காத மீடியா ஐட்டங்களை (படங்கள் மற்றும் விடியோக்கள்) மீண்டும் பயன்படுத்துகிறார்கள். தங்களுக்கு சொந்தமானவையாக இல்லாத அவற்றை குழுக்களில் பகிர்ந்துகொள்கிறார்கள். இந்தியாவில் மொபைல் அலைவரிசை மேன்மேலும் கட்டுப்படியாகக்கூடிய மலிவுவிலையிலும், மிகப்பரவலாகவும் கிடைப்பதால் வெறும் எழுத்துவடிவிலான தகவலைவிட கவரும் காட்சி வடிவிலான தகவல்களை அதிகம் பரிமாறிக்கொள்கின்றனர். காட்சி வடிவிலான செய்திகள் நினைவில் நீண்டு நிற்பவை, கவனத்தை அதிகமாக ஈர்ப்பவை மற்றும் சில ஆய்வுகள் காட்டுவதைப் போல, இவற்றைப் பெறுபவர் மத்தியில் அதிக நம்பிக்கையை ஏற்படுத்துபவை. இவை மேலும் அதிகமாக பகிர்ந்து கொள்ளப்படுகின்றன எனவும் கூட ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. அரசியல் உரையாடல் மீது செல்வாக்கு செலுத்த விரும்புவர்களுக்கு படங்களையும் வீடியோக்களையும் பயன்படுத்துவது ஒரு தக்க யுக்தியே என்பது தெளிவு. ஆக்ஸ்போர்ட் இன்டர்நெட் இன்ஸ்டிடியூட் வாட்ஸ் அப்பில் பொய்த் தகவல்கள் காட்சி வடிவிலேயே முதன்மையாக பரப்பப்படுகிறது எனக் கண்டறிந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

செய்திகள் பரிமாற்றத்தின் உச்ச கட்டங்களும்; தாழ்ந்த கட்டங்களும்

படம் 2, வாட்ஸ் அப்பில் தினமும் மொத்தத்தில் எத்தனை எழுத்துவடிவச் செய்திகள், படங்கள், இணைப்புகள், வீடியோக்கள் மற்றும் ஆடியோ செய்திகள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன என்று மூன்றறை மாத விவர சேகரிப்பு காலகட்டத்தில் நாங்கள் சேகரித்த விவரங்களைக் காட்டுகிறது. படம் 3, இந்த எண்ணிக்கையை மேலும் எழுத்துவடிவச் செய்திகள், படங்கள், வீடியோக்கள், இணைப்புகள் மற்றும் ஆடியோ செய்திகள் என செய்திகளின் வகை மாதிரி வாரியாக பிரித்துக் காட்டுகிறது. செய்திகளின் எண்ணிக்கை நாளொன்றுக்கு பூஜ்யத்திலிருந்து கிட்டத்தட்ட முப்பதாயிரம் வரை இருந்தன. அன்றாட செய்திகளின் சுற்று, தேசிய விடுமுறைகள் வார இறுதிநாட்கள் ஆகியவற்றுக்கேற்ப செய்திகளின் எண்ணிக்கை பெருகுவதாகவும், குறைவதாகவும் இருந்தது. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அதிகபட்ச நடவடிக்கை தேர்தல் நாட்களின் போதோ அல்லது அதை நோக்கி முன்னேறிய காலகட்டத்திலோ நடைபெறவில்லை. மாறாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட தினமான 23 மே 2019 அன்று நிகழ்ந்தது.

படம் 2: அனைத்து செய்திகளும் தேர்தல் காலத்தில் அனுப்பப்பட்டவை

ஒட்டுமொத்தமாக பார்த்தால், நாட்டில் செய்தி முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் நடைபெற்ற நாட்களையடுத்த தினங்களில் அதிகபட்ச எண்ணிக்கையில் செய்திகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. எடுத்துக்காட்டாக, மார்ச் 17 அன்று பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பெயரை "சௌக்கிதார் நரேந்திர மோடி"/"காவலன் நரேந்திர மோடி" என மாற்றிக்கொண்டார். "சௌக்கிதார் சோர் ஹை" (காவலனே கள்வன்) என்ற முழக்கத்தை எதிர்க்கட்சியினர் பிரச்சார முழக்கமாக எழுப்பியதை அடுத்து மோடி இவ்வாறு மாற்றிக்கொண்டார். மோடி தனக்கு மட்டுமின்றி தன் ஆதரவாளர்களுக்கும் இந்த சௌக்கிதார் என்ற சொல்லை பயன்படுத்தி "மே பி சௌக்கிதார்" (நானும் கூட காவலனே) என்ற முழக்கத்தை உருவாக்கினார். இதுவே சமூக வலைத்தளங்களில் ஒரு அலையாக மாறியது. பாஜக உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் தமது டிவிட்டர் முகவரியில் "சௌக்கிதார்" என்ற சொல்லை இணைத்துக்கொண்டனர். அல்லது #மே பி சௌக்கிதார் என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தலாயினர்.

பத்து நாட்களுக்குப் பிறகு செய்திகள் பரிமாற்ற நடவடிக்கை மீண்டும் அதிகரித்தது. தேர்தலோடு நேரடியாக சம்பந்தப்படாததாக இருந்தாலும் "மிஷன் சக்தி"யின் வெற்றி, அதாவது துணைக்கோளை வீழ்த்தக்கூடிய ஏவுகணை ஒன்று பூமிக்கு அருகாமையிலிருக்கும் சுற்றுவட்டப்பாதையில் துணைக்கோள் ஒன்றை வீழ்த்தியது இந்தியாவின் விண்வெளி திட்டத்தில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது. அது ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனம் ஆகியவற்றின் அணியில் இந்தியாவையும் சேர்த்தது.

படம் 3: செய்திகளின் உள்ளடக்க வாரியாக தேர்தல் காலகட்டம் முழுவதும் அனுப்பப்பட்ட அனைத்து செய்திகளும்

அரசியல் செய்திகள் பரிமாற்றம் தொய்வுற்ற, அதாவது செய்திகளின் எண்ணிக்கை பூஜ்யத்தை நெருங்கிய, இரு நாட்களான மார்ச் 20-21 மற்றும் ஏப்ரல் 14, குறிப்பிடத்தக்கவையாகும். இந்நாட்களில் செயல்பாடுகளே இல்லாமலிருந்ததற்கு சாத்தியமானதொரு விளக்கம் என்னவென்றால் இரண்டுமே தேசிய பண்டிகை நாட்கள். முதல் நாளோ ஹோலி எனும் இந்திய வண்ணப்பூச்சு பண்டிகை. மற்ற நாளில் பிராந்திய புத்தாண்டு தினமாக அல்லது வசந்தகால அறுவடை தினமாக வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு விடுமுறை நாட்கள் கொண்டாடப்பட்டன. ஹோலி அன்று மக்கள் கொண்டாடும் பல வீடியோ காட்சிகள் பகிர்ந்துகொள்ளப்பட்டன. ஏப்ரல் 14 அன்று கூட உரையாடல்களில் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் நிரம்பியிருந்தன.

இவ்வாறு அனுப்பப்படும் செய்திகளில் மூன்றில் ஒரு பங்கு வந்த செய்திகளையே மற்றவர்களுக்கு அனுப்புவது—இது கவலையளிக்கும் விஷயம். ஏற்கனவே குறிப்பிட்டது போல, வாட்ஸ் அப்பில் பரிமாறிக்கொள்ளப்படும் செய்திகளின் உள்ளடக்கம் பெரும்பாலும் இதர சமூக வளைதளங்களிலிருந்து எடுத்து கையாளப்படும் விஷயங்களாகும். இதன் பொருள் என்னவென்றால் பரிமாறிக்கொள்ளப்படும் விஷயம் எவருடையது (ஒரு வீடியோவை ஒரிஜினலாக தயார் செய்தவர் யார்) மற்றும் அதன் தோற்றுவாய் என்ன (எங்கு அந்த வீடியோ முதலில் உருவானது) போன்ற விஷயங்கள் இல்லாமலிருப்பது. இது பொய்த்தகவல்கள் பரப்பப்படுவதற்கு இடமளிக்கிறது. இது ஏமாற்றும் வண்ணம் உள்ளது. ஒரு நம்பகமான தரப்பிலிருந்து செய்திகள் வருவது போன்ற தோற்றத்தை வாட்ஸ் அப்பின் நெருக்கம் உருவாக்குகிறது. 2018 இன் மத்திய காலம் வரை வந்த செய்திகளை முன்னோக்கி மற்றவர்களுக்கு அனுப்புகையில் அவை வேறொரு உரையாடல் குழுவிலிருந்து பெறப்பட்டவை என அவற்றை பெறுபவர்களுக்கு எந்த தகவலும் தெரியப்படுத்தப்படுவது இருக்கவில்லை.

சமீபத்தில் தாய் நிறுவனமான ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பில் செய்திகள் எவ்வாறு பகிர்ந்து அனுப்பப்படுகின்றன(Forward) என்ற விஷயத்தில் சில கட்டுப்பாடுகளை போட்டுள்ளது. அவற்றுள் ஒன்று என்னவென்றால் அதைப் பயன்படுத்துபவர்கள் ஒரு செய்தியை ஒரு நேரத்தில் ஐந்து நபர்களுக்கோ அல்லது குழுக்களுக்கோ மட்டுமே பகிர்ந்து அனுப்பமுடியும். "பகிரப்பட்டது" என்ற குறியீட்டையும் எங்கு தேவையோ அங்கு ஃபேஸ்புக் சேர்த்துள்ளது. ஆனால் இது வேறொரு இடத்திலிருந்து காப்பி செய்யப்பட்டு ஓட்டப்பட்டு அனுப்பிவைக்கப்படும் விஷயங்கள் பற்றி தெளிவு படுத்தப்படுவதில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு ஃபேஸ்புக் ஒரு விஷயம் வைரஸ் போல பரவுகிறது என்பதை சுட்டிக்காட்ட "அடிக்கடி பகிர்ந்து அனுப்பப்பட்டது" என்ற ஒரு குறியீட்டையும் கூட அறிமுகப்படுத்தியது. ஆனால், இந்த மாற்றம் இந்திய தேர்தல்களுக்குப் பிறகு நிகழ்ந்ததால் அது எமது ஆராய்ச்சிக்கோ அல்லது வாக்களிக்க தயாராகும் வேட்பாளர்களுக்கோ தேர்தல் நேரத்தில் உதவவில்லை.

எமது விவரத்தொகுப்பில் உள்ள மீடியா ஐட்டங்களில் முப்பத்தைந்து சதவிகிதம் பகிர்ந்து அனுப்பப்பட்டவை என எமது பகுப்பாய்வு காட்டுகிறது. சில குறிப்பிட்ட விஷயங்களில், வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் ஒரே செய்தியை பத்து அல்லது அதற்கும் மேற்பட்ட குழுக்களுக்கு ஒரே நேரத்தில் ("பகிர்ந்து அனுப்புக" என்ற பொத்தானை மீண்டும் மீண்டும் தட்டுவதன் மூலம்) அனுப்பியுள்ளனர். வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் செய்திகளை மற்றவர்களுக்கு பகிர்ந்து அனுப்பும் வாய்ப்பைக் கட்டுப்படுத்துவதற்காக வாட்ஸ் அப் செய்த மாற்றம் பொய்த்தகவல் பரவுவதைக் குறைக்க உதவியுள்ளது என சமீபத்திய ஆய்வு ஒன்று காட்டுகிறது. (முன்பு இருந்த நிலைமையிலிருந்து இந்த மாற்றத்திற்கு பிறகு இந்த விஷயத்தில் எத்தகைய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து ஃபேஸ்புக்கிடமிருந்து நமக்கு புள்ளிவிவரம் எதுவும் கிடைக்காததால் இது குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறதா இல்லையா என நாம் கூறுவதற்கில்லை)

மிகவும் அதிகமாக பகிர்ந்துகொள்ளப்பட்ட விஷயங்கள்

எமது பகுப்பாய்வின் ஒரு பகுதியாக, எமது தகவல் பெட்டகத்தின்படி, மிகவும் பரவலாக பகிர்ந்துகொள்ளப்பட்ட பத்து மீடியா ஐட்டங்களை நாங்கள் இனங்கண்டோம். குறிப்பிடத்தக்கவகையிலே மிக அதிக முறைகள் பகிர்ந்து கொள்ளப்பட்ட விஷயங்களும் மிகப்பரவலாக அதிகம் பேருடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட விஷயங்களும் ஒன்றேயல்ல. படம் 4 இல் காட்டப்பட்டுள்ளபடி அதிகம் பகிர்ந்து கொள்ளப்பட்ட விஷயங்களான ஐந்து வீடியோக்கள் மூன்று படங்கள் மற்றும் இரு ஆடியோ கோப்புகள் பெரும்பாலும் இரண்டு விதமாக பகிர்ந்துகொள்ளப்பட்டன. குறுகிய கால அதீத நடவடிக்கை கட்டங்களில் சிலர் அதிக அளவிலான பகிர்வுகளைப்பெற்றனர், பின்னர் இந்த அதிதீவிர பகிர்வு நடவடிக்கைகள் ஓய்ந்தன. மற்றொரு வகையோ நீண்ட காலம் நீடித்து தேர்தல் கால முழுமைக்கும் திடமான முறையிலே பகிர்ந்துகொள்ளப்பட்டன.

படம் 4: மிகப்பரவலாக பகிர்ந்து கொள்ளப்படும் மீடியா சித்திரங்கள்

மிக அதிகமாகப் பகிர்ந்துகொள்ளப்பட்ட பத்து விஷயங்களுக்காக எமது பட்டியலில் இடம் பெற்ற ஐட்டங்கள் பெரும்பாலும் பல குழுக்களுக்கு ஒரு முறைக்கு மேல் அனுப்பப்பட்டன. ஆனால், அவை ஒரே நேரத்தில்தான் அனுப்பப்பட்டன என்பது கிடையாது. அவற்றுள் சில தீங்கு நோக்கமின்றி அனுப்பப்பட்டவை. மற்றவை வெறியூட்டும் விதமாக அனுப்பப்பட்டவை.

இதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. எடைபோட்டு தண்டிப்பதற்கான நமது உணர்வுகளுக்கு தீனிபோட்டு நம் அனைவரையும் நியாயம் காரணமான கடுங்கோபத்திற்குள்ளாக்குவதை நோக்கமாகக் கொண்டவற்றை நியூயார்க் டைம்ஸ் கடுங்கோபமூட்டும் ஆபாசம் என்று விவரித்தது. இவை சமூக வலைதளங்களில் மண்டிக்கிடக்கின்றன. விவாதிக்கப்படும் விஷயம் எந்த தலைப்பில் இருந்தாலும் கோபமும் அருவருப்பும் வைரஸ் போல பரவுகின்றன.

எமது விவரத்தொகுப்புப்படி "போலீஸ் காட்டுமிராண்டித்தனம்" என்று பெயரிடப்பட்டு இந்தியாவில் நிலவும் போலீஸ் முறை குறித்து கடுங்கோபத்தைக் கிளறுவதை நோக்கமாகக்கொண்ட வீடியோ எமது குழுக்கள் 111 இல் 141 முறை, பெரும்பாலும் மே மாதத்தில், பகிர்ந்து கொள்ளப்பட்டிருந்தது. இதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும்படி அனைத்து குழு உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்ளும் ஒரு குறிப்பும் இந்த வீடியோவுடன் அனுப்பப்பட்டது. செய்தி நிறுவனங்கள் இந்த வீடியோ துண்டுப்பகுதியை பரிசீலித்த போது அது இரண்டு ஆண்டுகள் பழமையானது என்று அதிகாரிகள் அவர்களுக்கு தெரிவித்தனர்.

எமது விவரத் தொகுப்புப்படி மிகப்பரவலாக பகிர்ந்துகொள்ளப்பட்ட வீடியோ பாகிஸ்தான் கொடி முன்பு அமர்ந்துகொண்டு ஒரு பெண் இந்திய கொடியை அசிங்கப்படுத்தும் வீடியோவாகும். இந்தியா சுக்குநூறாக கிழித்தெறியப்படவேண்டும் என அப்பெண் கூறுவதாகவும் கேட்டது. போலீஸ் அராஜக வீடியோ போலவே ஒரு குறுகிய காலத்திற்குள் மிகப் பரவலாக இது பகிர்ந்துகொள்ளப்பட்டது. ஒருவார காலத்திற்குள் 167 குழுக்களால் 268 முறை பகிர்ந்து கொள்ளப்பட்டு பின்னர் ஓய்ந்தது.

இதற்கு மாறாக "பாஜக பைக் பேரணி" வீடியோ நீண்ட காலத்திற்கு புழக்கத்திலிருந்தது. எமது விவரத்தொகுப்பில் 150 முறை காணப்பட்ட இந்த வீடியோ கொல்கத்தாவில் ஒரு பேரணியின் போது போலீசாரால் துவக்கப்பட்டு வன்முறை வெடிப்பதை காட்டுகிறது. இதில் ஆங்காங்கு பின்வரும் வாசகம் காணப்பட்டது: "வங்காளம் எத்தகைய நிலைமையில் உள்ளது என்பதையும் எங்கனம் பாஜக கட்சியினர் அளவுகடந்த அராஜகங்களை சந்திக்கின்றனர் என்பதையும் புரிந்துகொள்ள இந்த கோரமான வீடியோவைப் பாருங்கள்". இதைப் பரப்பியவர்கள் இது திறம்பட வாக்குகளை சேகரிப்பதற்கான ஒரு வழி என கருதியிருப்பதாகத் தெரிகிறது. தேர்தல் காலம் முடிந்தபின் இந்த வீடியோவைப் பகிர்ந்துகொள்வது முற்றிலுமாக நின்றுபோனது.

வெறுப்பூட்டும் வீடியோக்களிலிருந்து விதிவிலக்கான ஒன்று ஆடியோ இல்லாமல் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் உள்ள மூன்று-நொடி வீடியோ. அவர் தரப்பில் ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்த காந்தியின் ஆதரவாளர்களால் இது மீண்டும் மீண்டும் பகிர்ந்துகொள்ளப்பட்டது.

இரு ஆடியோ கோப்புகளுமே காங்கிரஸ் எதிர்ப்பு பாஜக ஆதரவு உணர்வுகளை பிரதிபலித்தன. ஆனால் முற்றிலும் வேறுபட்ட செய்திகளுடன். "முன்னறிமுகமற்ற காங்கிரஸ் தொலைபேசி அழைப்பாளர்" ஒரு தொலைபேசி உரையாடலின் பதிவு. இந்த அழைப்பாளர் காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜனுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொள்கிறார். மறுமுனையிலிருப்பவர் அவரை தோலுரிக்கிறார். "மோடி ஆதரவு சொற்பொழிவு" அவருடைய எதிராளிகள் அனைவரும் அவரைப்போலன்றி ஊழல் மிக்கவர்கள் என ஒருவரே பேசுவது. இந்த சொற்பொழிவின் வேறு பிரதிகள் இது யாருடையது என்று தெரிவிக்காமல் ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற இதர இணைய தளங்களிலும் கூட காணப்பட்டன.

இரண்டாம் நிலையிலுள்ள மிக அதிகமாகப் பகிர்ந்துகொள்ளப்பட்ட விஷயம் இந்திய கிரிக்கெட் கேப்டனான விராட் கோலி மொபைல் ஈ-விளையாட்டு சேனல் ஒன்றின் விளம்பர முகமாக வெளியிடப்பட்ட ஒரு விளம்பரமாகும். நாங்கள் தகவல் சேகரித்த காலம் முழுவதிலும் இது புழக்கத்தில் இருந்தது. 138 பேர் இந்த விளம்பரத்தை பகிர்ந்து கொண்டனர். நாங்கள் இதை 219 முறை கண்டோம். அதிகம் பகிர்ந்துகொள்ளப்பட்ட ஏனைய இரு படங்கள் மோடியின் புகைப்படங்களாகும்.

சமூக வலைதளங்களுக்கு இடையிலான இணைப்புகள்

எமது விவரத்தொகுப்பிலிருந்த 144,000 இணைப்பு செய்திகளில் பாதிக்கும் மேற்பட்டவை பயன்படுத்துபவர்களை மற்ற சமூக வலைதளங்களை நோக்கி செல்லும்படி பணித்தன. இந்தியாவில் மட்டுமே உள்ள சமூக வலைதளங்களான ஷேர்சேட், ஹலோ போன்றவைக்கான இணைப்புகள் இவற்றுள் ஒரு சிறிய பகுதியே (மொத்தத்தில் 213); மீடியா ஐட்டங்களுடன் (படங்கள் வீடியோக்கள்) சேர்ந்திருந்த இணைப்புகளை எண்ணினால் இந்த எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது (மொத்தம் 2700 விஷயங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன). இருப்பினும் இது ஒரு மிதமான எண்ணிக்கையே. படம் 5 இல் காணப்படும்படி யூடியூப்பிற்கு கொடுக்கப்பட்ட இணைப்புகள் 65 சதவிகிதமாகும். இந்த போக்கை அடுத்த கட்டுரையில் பரிசீலிப்போம்.

வாட்ஸ்அப் மற்றும் உறுப்பினர்களுக்கு மட்டுமேயான மற்றொரு சமூக வலைதளமான டெலிகிராம் ஆகியவற்றுக்கு கொடுக்கப்பட்ட இணைப்புகள் பெரும்பாலும் இதர குழுக்களில் சேரும்படி கொடுக்கப்பட்ட இணைப்புகள். செய்தி நிறுவனங்களுக்கான இணைப்புகள் பளிச்சென்று தென்படும் விதத்தில் ஒரு சில மட்டுமே. NDTV யின் இந்தி சேனல் அதிகபட்ச இணைப்புகளை –700 க்கும் மேலாக பெற்றது. ஏனைய செய்தி நிறுவனங்கள் அனைத்தும் மொத்தமாக சேர்ந்து 300க்கும் குறைவான இணைப்புகளையே பெற்றன.

படம் 5: மற்ற இணைய தளங்களோடு இணைப்புகளைக் கொண்ட செய்திகள்

முடிவுரை

மார்ச் மாதம் ஃபேஸ்புக் அதற்கு சொந்தமான தளங்கள் அனைத்திலும் (ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்) செய்திகள் பரிமாற்றத்தை பாதுகாப்பானதாக்குவதற்கான தனது உத்தேசத்தை அறிவித்தது. அனைத்து உரையாடல்களையும் துவக்கத்திலிருந்து இறுதிவரை சங்கேதக் குறிப்புகளில் பொதிந்திருக்கச் செய்வதன் மூலம் ஃபேஸ்புக் அதன் நம்பகத்தன்மை மீது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என நினைக்கிறது. "அர்த்தமுள்ள" கலந்துரையாடல்களையே ஆதரிப்பதாகக் கோருகிறது.

மக்களுடைய சொந்த விவரங்களை சங்கேதமொழிக் கவசத்திற்குட்படுத்துவதன்(encryption) முக்கியத்துவத்தை மிகைப்படுத்திக்கூற இயலாது. ஃபேஸ்புக் போன்ற இராட்சத கம்பெனிகளுக்கு இதில் அவசியமான பத்திரம் உண்டு. ஃபேஸ்புக்கின் அறிவிப்பு ஒரு அபாயச் சங்காக ஒலித்தது. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அதன் திட்டங்களை தள்ளிப்போடும்படி ஃபேஸ்புக்கிடம் கேட்டுக்கொண்டன. செய்திகளை விவரங்களை சங்கேதமொழிக்கவசத்திற்குட்படுத்துவது சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்டறிந்து அவை மீது நடவடிக்கை எடுப்பதை கடினமாக்குகிறது.

செய்திகளை ஆரம்பத்திலிருந்து இறுதிவரை சங்கேத மொழிக்கவசத்திற்குள்ளாக்குவது குறித்த விவாதம் ஃபேஸ்புக்கையும் தாண்டியது. ஆனால் ஃபேஸ்புக்கின் பரிமாணம் அதை இந்த விவாதத்திலிருந்து விலக்கி வைப்பதைக் கடினமாக்குகிறது. கெட்ட அரசியல் நோக்கங்களுக்காக குழுக்களை நுணுக்கமாக இலக்காக்கக்கூடிய வகையில் தகவல் சூழலமைப்பு மேன்மேலும் உறுப்பினர்கள் மட்டுமே கொண்ட வலைதளங்களை நோக்கி செல்கையில் இத்தகைய உறுப்பினர்கள் மட்டுமே கொண்ட வலைதளங்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதையும் அவற்றை பரிசீலிப்பதற்கான சிறந்த முன்மாதிரிகளையும் புரிந்து கொள்வது அவசியமாகும். இந்தக் குறிக்கோளுடன் இத்தொடரின் அடுத்த கட்டுரைகள் உறுப்பினர்களுக்காக மட்டுமே உள்ள சமூக வலைதளங்களை ஆய்வுக்குட்படுத்துகையில் செய்தி அலுவலகங்களும் ஆராய்ச்சியாளர்களும் கணக்கிலெடுக்க வேண்டிய தார்மீக சிக்கல்களையும் நடைமுறை விஷயங்களையும் பரிசீலிக்க இந்தியத் தேர்தலை ஒரு ஆராய்சிக்களமாகவே தொடர்ந்து பயன்படுத்தும்.

(டோ சென்டர் ஆராய்ச்சியாளர் இஷான் ஜாவேரி இந்த ஆய்வுக்கு பங்களித்துள்ளார்.)

தமிழில்: சிவராமன்

செவ்வாய், 22 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon