மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 6 ஆக 2020

73 கோடி கணக்கு எங்கே? -பிகிலுக்கு அடுத்த செக்?

73 கோடி கணக்கு எங்கே? -பிகிலுக்கு அடுத்த செக்?

விஜய் நடிப்பில் படங்கள் வெளிவரும்போது எல்லாம் ஆளுங்கட்சி இடையூறு, பஞ்சாயத்துகள், வருமான வரித்துறை சோதனைகள் இவை அனைத்தும் இல்லாமல் வெளிவருவதில்லை. விஜய்யின் பிகில் படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கி விநியோகம் செய்யும் உரிமையைப் பெற்றிருக்கும் ‘ஸ்கிரீன் சீன்’ நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்துக்குப் பணம் கொடுத்தவர்களை கண்காணிப்பு வளையத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது வருமான வரித்துறை.

விஜய்யும், பிரச்சினையும் பிரிக்க முடியாதது என்ற எண்ணம் கத்தி படம் தொடங்கி சர்கார் படம் வரை தொடர்கதையாக இருந்து வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு வெளிவர உள்ள பிகில் திரைப்படமும் அதற்கு விதிவிலக்கு இல்லை என்று கிடைக்கும் தகவல்கள் சொல்லாமல் சொல்கின்றன. பிகில் சம்பந்தமான செய்திகளை நாம் வெளியிட்ட போது நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு பின்னர் விஜய்க்கு எதிரான ஆட்டம் தொடங்கப்படலாம் என்று குறிப்பிட்டு இருந்தோம்.

தமிழ் சினிமாவில் விழாக்காலங்களில் வருகின்ற புதிய திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகள் திரையிட தமிழக அரசு அதிகாரபூர்வமாக அனுமதியளித்து வந்திருக்கிறது. அதனைப் பயன்படுத்தி சென்னை மற்றும் முக்கியமான நகரங்களில் அதிகாலை காட்சி திரையிடப்படுவது உண்டு. இவ்வருட தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு முன்னதாக விஜய் நடித்துள்ள பிகில், கார்த்தி நடித்துள்ள கைதி ஆகிய இரண்டு படங்கள் மட்டும் ரிலீஸாகின்றன.

இந்தப் படங்களைப் பற்றி குறிப்பிடாமல் ‘சிறப்பு காட்சி திரையிடுவதற்கு எந்த படத்திற்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது’ என்று முதல் சரவெடியை பற்ற வைத்திருக்கிறார் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு.

பொதுவாக பண்டிகையை முன்னிட்டு வெளிவருகின்ற படங்களுக்கு அதிகாலை சிறப்புக் காட்சி திரையிட்டால் தயாரிப்பாளருக்கு குறுகிய நாட்களில் கூடுதல் வருவாய் கிடைப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். முதல் நாள் வசூல் ஆகக்கூடிய மொத்தத் தொகையில் சிறப்பு காட்சியின் மூலம் 20% சதவிகிதம் கூடுதலாக வருவாய் கிடைக்கும். சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை என்று அமைச்சர் அறிவித்ததன் மூலம் 20% கூடுதல் வருவாயை இழக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பிகில் திரைப்படத்தைப் பொறுத்தவரை, அதனுடைய தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ், தான் செய்கின்ற எந்தத் தொழிலாக இருந்தாலும் முழுக்க முழுக்க வரவு செலவு கணக்குகளை சட்ட ரீதியாக செய்யக்கூடிய கார்ப்பரேட் நிறுவனமாகும். எனவே அந்த நிறுவனத்தை பொருத்தவரை சட்ட வரம்புகளை மீறிய வரவு-செலவு என்பதற்கு இடமில்லை என்பது ஆளுங்கட்சிக்கும், வருமான வரித்துறைக்கும் நன்கு தெரியும்.

நடிகர் விஜய் நடித்து வெளியான புலி திரைப்படம் ரிலீஸுக்கு முதல்நாள், வருமான வரித்துறை கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் சோதனை நடத்தியது. அதேபோன்று ஒரு நெருக்கடியை பிகில் திரைப்படத்திற்கு ஏற்படுத்துவதற்கான வேலைகளில் வருமான வரித்துறை ஈடுபட்டுள்ளதாக பிகில் திரைப்படத்தை ரிலீஸ் செய்யும் தரப்பிலிருந்து இரண்டு நாட்களாக செய்தி கசியத் தொடங்கியது. இதுகுறித்து விசாரித்தபோது நமக்கு கிடைத்துள்ள ஆவணங்கள் அதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

பிகில் திரைப்படத்தின் தமிழக உரிமையை 73 கோடி ரூபாய்க்கு வாங்கி ஏரியா அடிப்படையில் வியாபாரம் செய்துள்ள ‘ஸ்கிரீன் சீன்’ மற்றும் அவர்களிடம் படத்தை வாங்கிய திரைப்பட விநியோகஸ்தர்கள் இவர்களுக்கிடையே நடைபெறக்கூடிய பணப் பரிவர்த்தனைகள் அனைத்தையும் கண்காணிக்க தொடங்கியிருக்கிறது வருமான வரித்துறை.

தமிழ் சினிமாவில் படங்களில் செய்யப்படும் முதலீடு அதனுடைய வியாபாரம் பட தயாரிப்புக்காக வாங்கப்படும் கடன் இவை அனைத்தும் நம்பிக்கையின் அடிப்படையில் பெரும்பாலும் வெற்றுக் காசோலை அல்லது எதுவும் எழுதப்படாத ஸ்டாம்ப் பேப்பர்கள் மூலமாகவே நடைபெறும்.

படம் வெளியீட்டுக்கு பின்னர் பட வியாபாரம் செய்யப்பட்டதற்கான ஒப்பந்தங்கள் கணக்கு காட்டுவதற்காக மாற்றம் செய்யப்பட்டு அதிகாரபூர்வ ஆவணங்களாக வருமான வரித்துறைக்கு சமர்ப்பிக்கப்படுவது காலங்காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது.

தற்போது நடைமுறையிலுள்ள ஜிஎஸ்டி வரி அடிப்படையில் செய்கின்ற தொழிலுக்கு தனி நபர்களிடம் வாங்குகின்ற கடன் தொகைக்கு முறையான ஆவணங்களை பராமரிக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. இதுபோன்ற நடைமுறையை சினிமா தயாரிப்பு தொழிலில் ஈடுபடும் தனிநபர் சார்ந்த நிறுவனங்கள் கடைபிடிப்பது இல்லை. இது அரசாங்கத்திற்கும் வருமானவரித்துறைக்கும் நன்கு தெரியும்.

பிகில் படத்தைப் பொருத்தவரை தமிழக அரசுடன் நல்லுறவுடன் இருக்கக்கூடிய சில விநியோகஸ்தர்கள் இப்படத்தின் ஏரியா உரிமையை வாங்கியுள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனமும் சட்ட ரீதியாக பணப் பரிவர்த்தனைகளை கையாளும் நிறுவனம் என்பதால் இவர்களை நேரடியாக எந்த வகையிலும் பாதிக்கும்படியான நடவடிக்கையை வருமானவரித்துறை எடுக்க முடியாது.

மாநில அரசின் விருப்பத்திற்கிணங்க விஜய்க்கு எதிராக நெருக்கடியை கொடுக்கவேண்டும் என்றால், அவர் நடித்துள்ள பிகில் திரைப்படத்துடன் வியாபார தொடர்பு சம்பந்தமாக நடைபெற்ற வரவு செலவு கணக்குகளை கண்காணித்து அதில் சட்டத்திற்குப் புறம்பாக ஏதேனும் நடைபெற்று இருக்கிறதா என்பதை கண்கொத்திப் பாம்பாக கண்காணிக்க தொடங்கியிருக்கிறது வருமான வரித்துறை என்கின்றனர் பிகில் வியாபாரங்களை கண்காணித்து வருபவர்கள்.

தமிழ் சினிமாவில் படங்களை தயாரிப்பவர்களில் ஏஜிஎஸ் நிறுவனம் போன்று மொத்த முதலீட்டையும் சொந்த பணத்தில் செய்கின்ற நிறுவனங்கள் இங்கு சன் பிக்சர்ஸ் மட்டுமே. மற்ற நிறுவனங்கள், படம் வாங்குபவர்கள் எல்லோருமே தனி நபர்களிடம் பைனான்ஸ் வாங்கி தொழில் செய்கின்றனர். இவர்களுக்கு இடையில் முறையான சட்ட ரீதியான ஆவணங்கள் இருக்காது.

இதைத்தான் வருமானவரித்துறை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கியிருக்கிறது. பணம் கொடுப்பவர், வாங்குபவர் இவர்களிருவரும் அந்த பணத்திற்கு முழுமையான ஜி.எஸ்.டி வரி செலுத்தி இருக்கிறார்களா என்பதை வருமான வரித்துறை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.

பிகில் விநியோகம் தொடர்பான பணப் பரிவர்த்தனை விவரங்கள்

அதன்விளைவாக வெளியீட்டுக்கு முன்னர் படம் சம்பந்தப்பட்ட அனைவரது அலுவலகம் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை இருக்கலாம் என்பதே தற்போதைய தகவல். அதன்படி, ஸ்கிரீன் சீன் நிறுவனத்தின் வங்கிக் கணக்குக்கு உள்ளே வரும் பணம் மற்றும் வெளியே அனுப்பப்படும் பணம் ஆகியவற்றின் தகவல்களை சேகரிக்கத் தொடங்கியிருப்பதை, தற்போது வெளியாகியிருக்கும் ஆணவங்கள் காட்டுகின்றன. இந்தப் பணப் பரிவர்த்தனைகளுக்கு இரு தரப்பிலும் சரியான வரி செலுத்தப்பட்டிருக்கிறதா என்பதே பிகில் திரைப்படத்தின் ரிலீஸுக்கு நெருக்கத்தில் நடைபெறக்கூடிய இண்டர்வல் கிளைமேக்ஸ். புலி திரைப்பட ரிலீஸுன்போது வருமான வரித்துறை நடத்திய சோதனைகளில், சட்டத்துக்குப் புறம்பாகக் கையாளப்பட்ட பணம் எதுவும் பிடிபடவில்லை என்றாலும், அந்த சோதனைகளால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. அதுபோலவே, பிகில் படத்திற்கும் கட்டம் கட்டப்பட வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. பிகில் திரைப்படத்தின் விநியோக உரிமையை வாங்கிய கோபுரம் ஃபிலிம்ஸின் அன்புச் செழியன், கந்தசாமி சினி ஆர்ட்ஸின் ராஜ மன்னார், சுஷ்மா சினி ஆர்ட்ஸ் ஆகியோரது பணப் பரிவர்த்தனைகளின் மீது கண்காணிப்பு படலம் குவிந்திருக்கிறது.

தமிழக அரசும், மத்திய அரசும் ‘இதில் எங்களுக்கு நேரடியாக எந்த தொடர்பும் இல்லை. இது வழக்கமாக வருமானவரித்துறை மேற்கொள்ளும் நடவடிக்கை’ என்று கூறி தப்பித்துக்கொள்ளும். தனக்கு எந்த கெட்டப் பெயரும் ஏற்படாமல் மக்கள் மனம் கவர்ந்த நடிகராக வியாபாரத்தில், பாக்ஸ் ஆஃபீஸ் வசூலில் முதல் இடத்தில் இருக்கும் நடிகர் விஜய்யை பலவீனப்படுத்தி, நிலைகுலையச் செய்யும் சூழலை உருவாக்க அவர் படம் சம்பந்தப்பட்டவர்களின் கவனக் குறைவையும், சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதில் அரசாங்கம் வெற்றிகொள்ள போகிறதா? என்பது நான்கு நாட்களில் தெரிந்துவிடும்.

செவ்வாய், 22 அக் 2019

அடுத்ததுchevronRight icon